Published : 07 Jan 2018 10:52 AM
Last Updated : 07 Jan 2018 10:52 AM
மா
தவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் எனச் சொல்லப்பட்டுவரும் நிலையில் மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கினார் சுமதி. துணிகளே சிறந்தவை எனப் பலரும் பழைய, நடைமுறைக்கு உதவாத உத்திகளைப் பரப்புரை செய்ய, தூய்மையை மட்டுமே முக்கிய அம்சமாகக்கொண்டு களத்தில் இறங்கினார். இன்று நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே உள்ள பொத்தனுாரைச் சேர்ந்த சுமதி, ரசாயனக் கலப்பில்லாமல், இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சைக்கொண்டு நாப்கின் தயார் செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
சுயதொழில் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் சுமதிக்குப் பள்ளிக் காலத்திலேயே இருந்தது. மகன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இவருக்கு அதிக நேரம் கிடைக்க, சுயதொழில் ஆர்வத்தைப் புதுப்பித்தார்.
“அழகு நிலையம், தையல் நிலையம் போன்றவற்றைத் தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை. வார இதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் கோவையில் நாப்கின் தயாரிப்புத் தொழிலை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கும் முருகானந்தத்தைப் பற்றித் தெரியவந்தது. என் தோழிகள் மூலம் அவரை அணுகினேன். ஆரம்பத்தில் மறுத்தவர், பின்னர், தொழில் தொடங்குவதற்கான இயந்திரம் வழங்க ஒப்புக்கொண்டார். இதற்காக மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ. 2 லட்சம் வங்கிக் கடன் பெற்றேன். முறையான பயிற்சியும் பெற்ற பிறகு பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011-ல் இந்தத் தொழிலைத் தொடங்கினேன்” என்கிறார் சுமதி.
இயற்கையே ஆதாரம்
நாப்கின் தயாரிப்பில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கோலோச்சும் சூழலில் தங்களது தயாரிப்பை எந்த வகையில் முன்னிலைப்படுத்துவது என சுமதி யோசித்திருக்கிறார். அப்போதுதான் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனக் கலப்பில்லாத நாப்கின்களைத் தயாரிக்க முடிவெடுத்தார்.
“நாப்கின் தயாரிப்பில் ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தொடங்கி பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் பஞ்சு மூலம் நாப்கின்களைத் தயாரிக்க முடிவெடுத்தோம். இவை உடலுக்குக் கேடு ஏற்படுத்தாதவை, மக்கும் தன்மை கொண்டவை என்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. இதனால் எங்கள் தயாரிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது” என்கிறார் சுமதி. சமூக வலைத்தளங்களிலும் தங்களது தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்துவருகிறார்.
பஞ்சு உள்ளிட்ட மூலப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கிறார்கள். தொடக்கத்தில் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மட்டும் விற்பனை செய்தவர் பிறகு, தனியார் மருத்துவமனைகளை அணுகி விற்பனை தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். தற்போது பத்து தனியார் மருத்துவமனைகளுக்குத் தங்களது தயாரிப்புகளை வழங்கிவருவதாக சுமதி சொல்கிறார்.
விரிவடைந்த எல்லை
இந்தத் தொழில் மூலம் பல மாநிலங்களுக்குப் பயணிக்கும் வாய்ப்பும் சுமதிக்குக் கிடைத்திருக்கிறது. அப்படி வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது தன் வியாபாரப் பணிகளை மட்டும் முடித்துக்கொண்டு இவர் திரும்புவதில்லை. அங்கிருக்கும் பெண்களுக்கு நாப்கின் தயாரிப்புப் பயிற்சியும் அளித்துவருகிறார். “பொத்தனுார் கிராமத்தையே தாண்டாத நான், இந்தத் தொழில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவருகிறேன். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் இங்கு வந்து நாப்கின் தயாரிப்பு பற்றி அறிந்து சென்றுள்ளனர். இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தின் ஒத்துழைப்பும் முக்கியமான காரணம்” என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் சுமதி.
நாப்கின் தயாரிப்புத் தொழில் மூலம் மாதம் ரூ. 40 ஆயிரம்வரை வருமானம் கிடைப்பதாகச் சொல்கிறார். இவரிடம் தற்போது பத்துப் பெண்கள் வேலை பார்க்கிறார்கள். “எதிர்காலத்தில் தொழிலை விரிவுபடுத்தி அதிக அளவில் பெண்களைப் பணியில் சேர்ப்பதே எனது குறிக்கோள்” என்கிறார் சுமதி.
படங்கள்: கி.பார்த்திபன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT