Last Updated : 28 Jan, 2018 11:41 AM

 

Published : 28 Jan 2018 11:41 AM
Last Updated : 28 Jan 2018 11:41 AM

கண்ணீரும் புன்னகையும்: உடைகளா காரணம்?

ஒரு பெண்ணிடம் பலாத்காரத்தில் ஈடுபடுவதற்கு அவள் அணியும் உடைகள் தூண்டுதலாக அமையலாம் என்ற எண்ணம் இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக நிலவுகிறது. அந்த எண்ணம் தவறு என ப்ரஸ்சல்ஸில் நடந்த ஒரு கண்காட்சி நிரூபித்துள்ளது. பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்கள் அந்தத் தருணத்தில் அணிந்திருந்த உடைகளின் கண்காட்சி அது. பைஜாமா, டிராக் பேன்ட்கள் தொடங்கி ஒரு குழந்தையின் பொம்மைப் படம் அச்சிடப்பட்ட டீஷர்ட்வரை அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

‘இஸ் இட் மை ஃபால்ட்?’(அது என் தவறா?) என்ற அந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருக்கும் லியஸ்பெத் கென்னெஸ், பாலியல் வல்லுறுவுக்கு ஆளானவர்களுக்கு உதவும் அமைப்பில் பணியாற்றுபவர். ‘அந்த நேரத்தில் நீ என்ன உடை அணிந்திருந்தாய், அப்போது நீ எப்படி நடந்துகொண்டாய்?’ என்பது போன்ற கேள்விகளைப் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களிடம் கேட்பது வாடிக்கையாக உள்ளது என்று சொல்லும் லியஸ்பெத் கென்னெஸ், குழந்தைப் பருவத்தில் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு உள்ளானவர்.

பனி கார் பந்தயத்தில் முதல் பெண்

காஷ்மீரைச் சேர்ந்த 40 வயது மருத்துவர் ஷர்மீன் முஸ்டாக் நிஷாமி, இந்தியா சார்பாக நடத்தப்படும் பனிப் பகுதியில் கார் ஓட்டும் பந்தயத்தில் கலந்துகொண்டார். காஷ்மீரிலிருந்து இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பெண் இவர். குல்மார்க்கில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டில் ஐம்பது பேருடன் ஷர்மீன் பங்கேற்றார். தேசிய அளவில் நடக்கும் பந்தயத்தில் பங்கேற்றது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் நிஷாமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

கர்நாடகத்தில் பிங்க் கழிவறைகள்

பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்காகப் பிரத்யேகக் கழிப்பறைகள் கர்நாடக மாநிலத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ளன. டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் கழிப்பறையைப் போலவே இது அமைக்கப்படவுள்ளது. கர்நாடகக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கர்நாடக உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் கட்டப்படும் கழிவறை வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரிக்கும் கருவியும் இருக்கும். இந்திய, வெஸ்டர்ன் கழிப்பறைகளும் குழந்தைகளுக்கான உயரம் குறைந்த டாய்லெட்களும் இங்கே இருக்கும்.

ஆஸ்கர் பரிந்துரையில் பெண் ஒளிப்பதிவாளர்

90 ஆண்டு கால ஆஸ்கர் விருது வரலாற்றில் முதன்முறையாக ‘மட்பவுண்ட்’ (Mudbound) வரலாற்றுத் திரைப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ரேச்செல் மாரிசன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். “ஒளிப்பதிவு என்பது மட்டுமல்ல. நம்மால் எல்லாமே சாத்தியம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு ஒளிப்பதிவாளரின் பணி என்பது உணர்வைக் காட்சிப்படுத்துவது; பெண்கள் அதில் இயல்பாகவே தேர்ந்தவர்கள்” என்று அவர் கூறியிருக்கிறார். தன் குழுவில் பெரும்பாலும் பெண் டெக்னீஷியன்களையே இவர் வேலைக்கு அமர்த்துகிறார். அப்போதுதான் ஹாலிவுட்டில் அதிக பெண் ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்குமென்று சொல்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் அண்ட் போட்டோகிராபியைப் பயின்ற இவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவுத் துறையில் இருக்கிறார்.

28chsrs_sharukhrightஇப்படிச் சொன்னாங்க

ஒரு பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றிச் சிதைக்கும் வன்முறைதான் மிக மிகக் குரூரமான குற்றம். அதைச் செய்யும் மனோபாவத்தின் அடியோட்டமாக ஒரு பெண் தனது தேர்வைச் செய்வதற்கான உரிமையற்றவள் என்ற பார்வை உள்ளது. ஒரு ஆணோ ஒரு கும்பலோ செய்யும் அத்துமீறலை அவள் மறுக்கக் கூடாது என்ற எண்ணம்தான் அது.

ஆனாலும், இந்தக் கொடுமையைச் சந்தித்த பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கையைச் சந்திப்பதற்கான தைரியத்தையும் பாதிக்கப்பட்டவர் என்ற பச்சாதாபத்தையும் புறக்கணித்து மீண்டுள்ளதைப் பார்க்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்களை அந்த விபத்து மேலும் தைரியமாகவும் பலமுள்ளவர்களாகவும் விடுதலை பெற்றவர்களாகவும் சொந்தமாக முடிவுகளை எடுப்பவர்களாகவும் மாற்றியுள்ளது என்னைச் சிலிர்க்கவைக்கிறது.

தைரியம் இருந்தால் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து நட்சத்திர நிலையை நோக்கி நகர முடியும் என்பதே நான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.

- டாவோஸில் நடந்த உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பில் சேவைக்காக கிறிஸ்டல் விருது பெற்ற பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் பேச்சிலிருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x