Published : 07 Jan 2018 10:49 AM
Last Updated : 07 Jan 2018 10:49 AM
அ
டுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத கூலி வேலைக்குச் சென்றுவந்த பவானி, தன்னம்பிக்கையாலும் துணிச்சலாலும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராகத் திகழ்கிறார்.
எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் கல்வியறிவும் இல்லாத நிலையில் கணவனை இழந்தவர் இவர். அப்படியொரு சூழலில் மூன்று குழந்தைகளைக் கரையேற்றித் தன் வாழ்க்கையையும் நகர்த்த வேண்டிய கட்டாயம் பவானிக்கு. தன்னைப் பதம்பார்த்த சோதனைகள் அனைத்தையும் அயராத உறுதியோடு எதிர்கொண்டு இவர் வென்றிருக்கிறார்.
பவானி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். கூலி வேலைக்குச் சென்றுவந்த இவருடைய கணவர், குடிக்கு அடிமையாகித் திடீரென உயிரிழந்தார்.
“மூணு குழந்தைகளோடு அடுத்த வேலை சாப்பாட்டுக்கே என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தேன். பிறந்த வீடு, புகுந்த வீடு ரெண்டுலயுமே சொத்து எதுவும் இல்லை. கவர்மென்ட் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு மட்டும்தான் இருந்தது. குழந்தைங்க பசிய போக்கவும் அதுங்க படிப்புக்காகவும் உழைக்க வேண்டிய கட்டாயம். தினமும் 35 ரூபாய் கூலி கிடைக்கும்னு 5 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரிக்கு வேலைக்குப் போனேன். ஆட்டோவுக்குத் தினமும் 8 ரூபாய் செலவாகும்னு அதை மிச்சப்படுத்த சைக்கிள்ல கிருஷ்ணகிரிக்குப் போவேன். ஆனால், கிடைச்ச வருமானம் போதுமானதா இல்லை. வேற என்ன செய்யறதுன்னு தெரியாம ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செய்தேன்” என்கிறார் பவானி.
களைந்துபோன அச்சம்
பவானி வசிக்கும் பகுதியின் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் மைக்கேல் உதவியுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டார். பிறகு, வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டினார். பெண் என்பதால் நல்லவிதமாக ஆட்டோ ஓட்டுவாரா என்ற அச்சத்தில் இவரது ஆட்டோவில் ஏற சில பயணிகள் தயக்கம் காட்டினர். ஆனால், அந்த அச்சமும் காலப்போக்கில் மறைந்துவிட்டது. “இப்போ பாதுகாப்பான பயணத்துக்கு என் ஆட்டோவைத் தேடி பயணிகள் வர்றாங்க” என்று பவானி பெருமையுடன் சொல்கிறார்.
சில மாதங்களில் சொந்தமாகப் புதிய ஆட்டோ வாங்க வேண்டும் என தாட்கோ மூலம் மானியக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். பேட்ஜ் (பொது உபயோகத்துக்கான வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ் பெற வேண்டும் என்பது விதி) இல்லாமல் மானியக்கடன் தர முடியாது என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
அரசு வேலை கனவு
இவரைப் பற்றித் தெரிந்துகொண்ட அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர், அப்போதைய கிருஷ்ணகிரி ஆட்சியர் மூலம் 1000 டாலர் பணத்தை அனுப்பி வைத்தார். அதன் மூலம் பழைய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். “முகம் தெரியாத அந்த வள்ளல் கொடுத்த பணத்தால் என் வாழ்க்கையில் புது விடியல் பிறந்தது. ஆட்டோவுக்கு ராம் ராமானுஜம்னு அவர் பெயரையே வச்சிட்டேன். என் நன்றியை இப்படித்தான் என்னால வெளிப்படுத்த முடிஞ்சது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
தொழில்முறை ஆட்டோ ஓட்டுநர்கள் பேட்ஜ் பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் இவர் விட்டுவைக்கவில்லை. பேட்ஜ் பெறுவதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. பள்ளிக்கூடமே போகாத பவானி, தனித் தேர்வு மூலம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். “மகள், மகன்களோடு நானும் படித்தேன். 2014-ல் 8-வது பாஸ் பண்ணேன். ரெண்டு வருஷத்துக்கு முன்பு பேட்ஜ், கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் ரெண்டையும் வாங்கிட்டேன். அதுக்கப்புறம் தாட்கோவில் மானியக்கடன் மூலம் புது ஆட்டோவையும் வாங்கிட்டேன்” என்று சொல்லும் பவானியின் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்கிறது.
பவானி தற்போது ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் பெற்று அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளார். அரசு வாய்ப்பளித்தால் அரசுப் பேருந்து ஓட்டுநர் அல்லது அரசு வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் ஆவலுடன் காத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT