Published : 14 Jan 2018 10:59 AM
Last Updated : 14 Jan 2018 10:59 AM

வான் மண் பெண் 40: கதிரியக்கத்தைச் சுமக்கும் பெண்!

அமெரிக்காவை அழிக்கக்கூடிய அணு ஆயுதத்தின் பொத்தான் தன் கைக்கு அருகிலேயே இருப்பதாகச் சொல்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக அவரிடமிருக்கும் பொத்தானைவிடத் தன்னிடம் இருக்கும் பொத்தான் மிகப் பெரியது என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அரசியலில் ஆபத்தானது அணு அரசியல். அந்த அரசியல், சில நாட்டுத் தலைவர்களுக்கு இடையே ஏற்படும் ‘ஈகோ’ மோதல் மட்டுமல்ல. அந்த நாடுகளில் வசிக்கும் மக்களையும் அடமானம் வைக்கும் செயல்.

மின்சாரத்துக்காக என்று சொல்லித்தான் பல நாடுகளும் அணு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அதிலிருந்து எத்தனை யூனிட் மின்சாரம் வந்தது என்று தெரியாது. ஆனால், ஏற்பட்ட அகால மரணங்களின் எண்ணிக்கை அதிகம்.

அணு ஆற்றலால், அணு மின் நிலையங்களால் உலகில் இதுவரை ஏற்பட்ட விபத்துகளில் மிகக் கொடிய விபத்தாக ரஷ்யாவின் செர்னோபில் விபத்து சொல்லப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொகுத்து ‘வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கினார் ஸ்வெட்லானா அலக்ஸிவிச் எனும் பெண் எழுத்தாளர். இந்தப் புத்தகத்துக்கு 2015-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட புத்தகம் ‘ஃபுல் பாடி பர்டன்’. இதை எழுதியவர், க்ரிஸ்டன் ஐவர்சென். அவர் ஒரு பேராசிரியை; பத்திரிகையாளர். எல்லாவற்றுக்கும் மேலாக அணு சக்தியால் உண்டான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்!

புளூட்டோனியத்தின் கதை

இந்த அணு யுகத்தில் ஒரே நேரத்தில் தேவதையாகவும் சாத்தானாகவும் இருக்கும் தனிமம் புளூட்டோனியம். 1899-ல் கதிரியக்கத் தனிமமான ரேடியத்தை மேரி கியூரி கண்டுபிடித்தார். ரேடியத்தை அமெரிக்கா தனது ராணுவத்துக்கு இருளிலும் ஒளிரக்கூடிய கடிகாரங்கள் செய்யப் பயன்படுத்தியது. அந்தக் கடிகாரங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் ரேடியம் வெளியிட்ட கதிரியக்கத்தால் புற்றுநோய் உட்படப் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளானார்கள். எனவே, ரேடியம் வெளியிடும் கதிரியக்கத்துக்கு ஒரு பாதுகாப்பான அளவை அமெரிக்கா நிர்ணயித்தது. அப்படி நிர்ணயித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் புதிதாக ஒரு தனிமத்தைக் கண்டுபிடித்தனர்.

அப்போதுதான் புளூட்டோ கோள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனவே, அந்தப் புதிய தனிமத்துக்கு புளூட்டோனியம் என்று அவர்கள் பெயர்வைத்தார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்து ஆய்விதழில் கட்டுரை வெளியிட அவர்கள் முடிவு செய்தார்கள். புளூட்டோ என்ற பெயரில் ரோமானியக் கடவுள் இருக்கிறார்; அவர் அழிவுக்கான கடவுள். அதுபோல இந்தத் தனிமம் உலகை அழிக்கவல்ல அணு குண்டுகளைத் தயாரிப்பதற்கான தன்மையைக்கொண்டது என்று தெரிந்ததும் அந்தக் கட்டுரையை வெளியிட அவர்கள் விரும்பவில்லை.

14chnvk_kristenbook.jpgஅழிவின் பாதையில்

இந்த நேரத்தில் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி, அணு குண்டுகளைத் தயாரிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இறங்கியிருந்தது. அதைத் தெரிந்துகொண்ட அமெரிக்க இயற்பியலாளர்கள் எட்வர்ட் டெல்லர், யூஜின் விக்னர் இருவரும் அப்போதைய அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு ‘அமெரிக்காவும் அணு குண்டு தயாரிப்பதில் இறங்க வேண்டும்’ எனக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் கையெழுத்திட்டார். பின்னாளில் அதற்காக வருந்தவும் செய்தார்.

1941-ல் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, புளூட்டோனியத்தைப் பயன்படுத்தி அணு குண்டு தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் அமெரிக்கா இறங்கியது. அது பின்னாளில் ‘மன்ஹாட்டன் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டது. 1945-ல் அமெரிக்கா தனது முதல் அணு குண்டைப் பரிசோதித்துப் பார்த்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு ஹிரோஷிமாவும் நாகசாகியும் அழித்தொழிக்கப்பட்டன.

அதற்குப் பின் வந்த 50, 60-கள் பனிப்போர் ஆண்டுகளாக இருந்தன. அமெரிக்காவும் ரஷ்யாவும் அதிக அளவில் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கின. அப்போது ஆயுதங்களைத் தயாரிக்க ரகசியமான இடத்தைத் தேடியது அமெரிக்கா. பலகட்ட தேடல்களுக்குப் பிறகு கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ராக்கி ஃப்ளாட்ஸ் என்ற இடத்தில் 1951-ல் தொழிற்சாலையைக் கட்டியது அமெரிக்கா. அங்குதான் க்ரிஸ்டன் ஐவர்சென் பிறந்தார்.

கதிரியக்கத்தோடு வாழ்தல்

மலைகளும் ஏரிகளும் சூழ்ந்த இடம், ராக்கி ஃப்ளாட்ஸ். அங்கே பெற்றோருடனும் நான்கு சகோதரிகளுடனும் வாழ்ந்துவந்தார் க்ரிஸ்டன்.

அந்தப் பகுதியிலிருந்த பெரும்பாலான குடும்பங்கள், ராக்கி ஃப்ளாட்ஸ் அணு ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்தன. அங்கு அணு குண்டுகள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான ஆனால், ஆபத்தான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டன. ‘அணு குண்டு தயாரிக்கத்தான் நாம் இங்கே வேலை செய்கிறோம்’ என்ற அடிப்படையான தகவல்கூட, அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அமெரிக்க அரசு அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை ரகசியமாக வைத்திருந்தது. போபால் விஷ வாயு விபத்துக்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தைப் பின்னாளில் வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனம், இந்தத் தொழிற்சாலையைச் சில காலம் ஒப்பந்த அடிப்படையில் நிர்வகித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டுவந்தன. அப்போதெல்லாம் புளூட்டோனியம் வெளியேறியது. நேரடியாகத் தோல் மூலமாக புளூட்டோனியம் நம் உடலுக்குள் பாயாது. ஆனால், நாம் சுவாசிக்கும்போதோ அது நீரில் கலந்திருந்து அதை நாம் குடித்தாலோ நம் உடலுக்குள் சென்றுவிடும். பிறகு, புற்றுநோய் தொடங்கிப் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.

அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றிய பலரும் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள். க்ரிஸ்டனும் பாதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் புற்றுநோய் ஏற்படவில்லை. என்றாலும், இன்னமும் கண்டறிய முடியாத ஏதோ ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு அவரது நுரையீரலில் படிந்துவிட்ட புளூட்டோனியம்தான் காரணம். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர்களின் குடும்பத்திலிருந்து யாரும் அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றவில்லை. பிறகு, எப்படி அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்? காற்றில் கலந்துவிட்ட புளூட்டோனியத்தைச் சுவாசித்ததுதான் காரணம்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. ஆனால், எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் சிலரைச் சந்தித்து அவர்களின் கதைகளை க்ரிஸ்டன் தொகுத்தார். அவற்றைச் சொல்லும்போது அந்தத் தொழிற்சாலை இருந்த பகுதியில் தான் வளர்ந்த கதையையும் அவர் சேர்த்தார். கூடவே, அணு சக்தி, புளூட்டோனியம் உள்ளிட்டவற்றைப் பற்றிச் சில ஆய்வுகளையும் இடையிடையே இணைத்தார். அப்படித்தான் உருவானது ‘ஃபுல் பாடி பர்டன்’ புத்தகம். இது 2012-ல் வெளியானது.

அணு ஆயுதங்கள், கதிரியக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஜப்பானிய மொழியில் ‘ஹிபாகுஷா’ என அழைப்பார்கள். அப்படியான ஹிபாகுஷாக்கள் வாழும் நாடுகள் இன்று அதிகம். தமிழ்நாட்டிலும் அப்படி ஒன்று உண்டு. கல்பாக்கம்தான் அது. அடுத்தது கூடங்குளமாகவும் இருக்கலாம்.

‘அமைதியாக இருக்கப்போகிறோமா அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கப் போகிறோமா? இதில் எதைத் தேர்வுசெய்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்’ என்று சொல்லும் க்ரிஸ்டன், இன்றும் அணு சக்திக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x