Last Updated : 21 Jan, 2018 12:44 PM

 

Published : 21 Jan 2018 12:44 PM
Last Updated : 21 Jan 2018 12:44 PM

நேர்காணல்: சுதா ரகுநாதனும் இன்னும் சில பாடல்களும்!

“என் வெற்றிலைப் பெட்டிச் செல்லம், ஒரு டேப்ரெக்கார்டர், சுதா ரகுநாதனின் பாடல்கள் அடங்கிய சில காசெட்கள் இவை இருந்தால் போதும்; ஆளில்லாத தீவிலும் நான் வாழ்ந்துவிடுவேன்” - சுதா ரகுநாதனைப் பற்றி மறைந்த இசை விமர்சகர் சுப்புடு எழுதிய வரிகள் இவை.

சங்கீதக் கலாநிதி, இசைப் பேரறிஞர், நாட்டின் உயரிய பத்ம விருதுகளைப் பெற்றிருக்கும் சுதா ரகுநாதன், எம்.எஸ். சுப்பு லட்சுமிக்குப் பின் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு பாடிய பெருமையையும் பெற்றுள்ளார். மார்கழி இசை விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருந்தவருடனான உரையாடலிலிருந்து…

ஒவ்வொரு கச்சேரிக்கான பாடல்களையும் கூட்டத்தைப் பார்த்த பிறகுதான் தேர்வு செய்வீர்களா; உங்கள் வெற்றிக்கு அதுதான் காரணமாகக் கூறப்படுகிறதே?

பெரும்பாலும் அப்படித்தான். ‘தீர்மானமாக எந்ததெந்தப் பாடல்களைப் பாட இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு லிஸ்ட் கொடுத்துவிடுங்கள். அதை அச்சடித்துக் கொடுக்கப்போகிறோம்’ எனச் சில விழாக் குழுவினர் கேட்பார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, என்ன பாடப் போகிறேன் என்று முன்தீர்மானம் செய்துகொள்வதில்லை. சில இடங்களில் ஆண்டுதோறும் கச்சேரி செய்வோம். அதுபோன்ற இடங்களில் முந்தைய ஆண்டு அங்கு என்னென்ன பாடல்களைப் பாடினோம், அதிலிருந்து மாறுபட்டு தற்போது எந்த மாதிரியான பாடல்களைப் பாடலாம் எனத் திட்டமிட்டுக்கொள்வேன்.

இது என்னுடைய குருநாதர் எம்.எல்.வி. அம்மாவின் பாணி. “நாளைய கச்சேரிக்கு என்ன பாட்டெல்லாம் பாடலாம், நான் பிராக்டீஸ் செய்துக்கறேன்” எனக் கேட்டால், “நாளைக்கு ஆடியன்ஸ் பல்ஸ் என்னவென்று பார்த்துட்டு அதுக்கேற்ப பாடலாம்” என்பார். ரசிகர்களுக்காகத்தானே நிகழ்ச்சி. நமக்கு வேண்டிய பாடல்களைப் பாட வேண்டுமானால் வீட்டிலேயே பாடிக்கொள்ளலாமே!

ஒரு கச்சேரியின் வெற்றிக்கு ரசிகர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியம்?

ஒரு கலைஞரின் குரல் வளம், நேர்த்தியான பங்களிப்பு, பாடல் தேர்வு, நேர நிர்வாகம் இவையெல்லாம் ஒரு கச்சேரியின் வெற்றிக்கு 50 சதவீதம் உதவுகின்றன என்றால், கலைஞரின் வித்வத்துக்குத் தகுந்த முறையில் உற்சாகமான வரவேற்பை அளித்து உயர்ந்த ரசனையை வெளிப்படுத்தி ரசிப்பதன் மூலம் ஒரு கச்சேரியின் வெற்றிக்கு ரசிகர்களும் 50 சதவீதம் பங்காற்றுகிறார்கள். ஒரு கச்சேரியின் வெற்றியில் சரிபாதி ரசிகர்களே என உறுதியாகச் சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவின் ஓமெட் இசைத் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றால், அதில் இந்தியாவின் சார்பாக ஒரு கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடுவதைப் பார்த்து அடுத்த ஊரில் நடக்கும் இன்னொரு விழாவுக்கு அழைப்பார்கள். அதனால்தான் அரங்கத்தில் 50 ரசிகர்கள் இருந்தாலும் சரி, 500 பேர் இருந்தாலும் சரி வித்வத்தில் குறை இருக்கக் கூடாது என என் மாணவர்களிடம் சொல்வேன்.

பெருவாரியான ரசிகர்களைச் சென்றடைவதற்கு முந்தைய தலைமுறையில் ஆல்பங்கள் முக்கியப் பங்கு வகித்தன. தற்போது அந்த இடத்தில் எது இருப்பதாக நினைக்கிறீர்கள்?

1980-களில் தொடங்கி 2000வரை காசெட்களில் தொடங்கி சி.டி.கள்வரை ஆடியோ உலகத்துக்கு எனத் தனி மவுசு இருந்தது. காசெட்களில் சி.டி.களில் நான் பாடியிருக்கும் பாடல்களைக் கேட்பவர்கள், அவர்கள் ஊரில் நான் கச்சேரிக்குச் செல்லும்போது திரளாக வந்து கேட்பதும் அப்போதுதான் நடந்தது. நான் கணிசமான அளவுக்கு ரசிகர்களைப் பெறுவதற்கு காசெட்கள், சி.டி.கள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளன. அப்போதெல்லாம் கணிசமான அளவில் விற்பனையான சி.டி.கள் எல்லாம் இப்போது ஆமை வேகத்தில் விற்கின்றன. இப்போது அந்த இடத்தைச் சமூக வலைத்தளங்கள் பிடித்திருக்கின்றன.

யூடியூப் சேனலில் ‘போ.. சம்போ’ என்றோ கல்யாணி ராகம் என்றோ போட்டு என்னுடைய பெயரை சேர்த்துத் தேடினால், நான் பாடியிருக்கும் ஒரு பெரிய பட்டியலே உங்கள் முன் விரியும். பொதுவெளியில் இப்படியொரு வசதியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது தொழில்நுட்பம்.

இசை மும்மூர்த்திகளுக்குக் காலத்தால் முந்தைய தமிழிசை மூவரின் பாடல்களை உங்களைப் போன்ற சிலர் மட்டுமே பாடுகின்றனர். இளம் தலைமுறையினருக்கும் அதைப் பரவலாக்க என்ன வழி?

நிறைய பாணிகளைப் பின்பற்றும் இசைப் பள்ளிகள் இருக்கின்றன. சொல்லிக்கொடுக்கும்போதே எல்லோருடைய கீர்த்தனைகளையும் மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். தமிழர்களாய்ப் பிறந்தவர்கள் தமிழில் நிறைய பாட வேண்டும் என்னும் உணர்வோடு இருக்க வேண்டும். தமிழில் தேவாரம், பிரபந்தம், முத்துத்தாண்டவர், அருணாசல கவி, மாரிமுத்தா பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், பாரதியார், பாரதிதாசன் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. இசை, மொழியைத் தாண்டிய விஷயமாக இருந்தாலும் அவரவர் மொழியில் பாடும்போது அதற்குக் கிடைக்கும் மரியாதையே தனி. இந்த ஆண்டு புதிதாகப் பத்து கீர்த்தனைகளைத் தெரிந்துகொண்டேன் என்றால் அடுத்த ஆண்டு இன்னும் பத்துப் புதிய கீர்த்தனைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இசையில் ஜுகல் பந்தி போன்ற பல முயற்சிகள் பரவலாக நடக்கின்றன. சமீபத்தில் சர்வதேச அளவில் இணைந்து பாடியிருக்கிறீர்கள். அதைப் பற்றி...

ஜெர்மனியில் குளோபல் வோகல் மியூசிக் ஃபெஸ்டிவல் பரிசோதனை முயற்சியாக நடந்தது. அமெரிக்கா, ஹங்கேரி, மடகாஸ்கர் உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து கலைஞர்கள் வந்திருந்தனர். ஒரு வாரத்துக்குத் தினமும் ஆறு, ஏழு மணி நேரம் ஒருங்கிணைந்து பயிற்சியில் ஈடுபட்டோம். இதில் ஒரே மேடையில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த ஏழு பாடகர்களின் இசையைச் சங்கமிக்க வைத்தனர். ஒவ்வொருவரின் இசையிலும் இருக்கும் தனித்தன்மையும் வெளிப்பட வேண்டும்.

அதே நேரம் யாருடைய இசையையும் சிதைக்கக் கூடாது என்பதே அந்த நிகழ்ச்சியின் அடிப்படை அம்சம். நான் பாடிய ‘பிரம்மம் ஒக்கடே’ பாடலை அனைவரும் இணைந்து பாடினர். காட்டில் விலங்குகள் சூழ நடக்கும் திருமணத்தை ஒரு கான்செப்டாக வைத்துக்கொண்டு, தியாகராஜரின் ‘சீதா கல்யாண வைபோகமே…’ பாடலை நான் பாடினேன். அதன் முடிவில் மதுரை மணி அய்யரின் ‘இங்கிலீஷ் நோட்’ பாடினேன். அத்துடன் ஹங்கேரி, மடகாஸ்கரிலிருந்து வந்திருந்தவர்களும் இணைந்து பாட முடிந்தது.

4jpgrightஐ.நா. சபையில் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அடுத்ததாக உங்களின் குரல் ஒலித்திருக்கிறது. அந்தத் தருணம் குறித்து...

அமெரிக்காவின் அட்லாண்டா, டல்லாஸ் போன்ற பல நகரங்களில் என் கச்சேரிகளை ஏற்பாடு செய்து, அதில் வசூலாகும் தொகையைக்கொண்டு 1,000 கேட்ராக்ட் அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்வதற்கு ‘சங்கர நேத்ராலயா’ முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா முழுவதும் பல நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். கடைசியாகத்தான் ஐ.நா. சபையில் என் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று காந்தி ஜெயந்தி, எம்.எஸ். அம்மாவின் நூற்றாண்டையொட்டி ஐ.நா. வெளியிட்ட சிறப்புத் தபால்தலையைப் பெற்றுக்கொண்டேன். எம்.எஸ். அம்மா பாடிய ஐ.நா. சபையில் நானும் பாடியது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

‘என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே’ என்பது போன்ற இனிய திரைப்பாடல்களைத் தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

‘இவன்’ திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் நான் பாடிய ‘என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே’ பாடல் காலம் கடந்து நிற்கக்கூடியது. திரைப்பாடல் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் இளைய தலைமுறையினர் பலர் இந்தப் பாடலை தேர்ந்தெடுத்துப் பாடுகின்றனர்.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய ‘அனல் மேலே பனித்துளி’ பாடலும் பலரது கவனத்தையும் ஈர்த்தது. வஸந்த் இயக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதற்குப் பின்னர்தான் இசைப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதே நேரம், நல்ல பாடல்களைப் பாடுவதற்கான நேரமும் சூழலும் அமைந்தால் நிச்சயம் திரைப்பாடல்களும் பாடுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x