Last Updated : 03 Dec, 2017 12:26 PM

 

Published : 03 Dec 2017 12:26 PM
Last Updated : 03 Dec 2017 12:26 PM

முகம் நூறு: கல்லிலே கலைவண்ணம் காணும் ஆனந்தி

லகை வியக்கச் செய்யும் இந்தியக் கலைநுட்பங்களில் ஐம்பொன் சிலை தயாரிப்பும் ஒன்று. கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலைதான் ஐம்பொன் சிலைகளின் பிறப்பிடம் எனக் கருதப்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய சிற்பக் கலைஞர்கள் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக ஐம்பொன் சிலை தயாரிப்பு பெரும்பாலும் ஆண்களிடமே இருக்கிறது. பெண்களுக்குக் கிட்டத்தட்ட எந்தப் பங்களிப்பும் இல்லை. பரம்பரையாக வந்த கலைஞர்களே பெரும்பாலும் ஐம்பொன்சிலை வார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்த தலைமுறை ஆண்களையே இந்தத் தொழிலுக்குப் பழக்குகிறார்கள் என்பதும் இதற்குக் காரணம்.

அரிதான வருகை

பல நூறாண்டுகளாகத் தொடர்ந்த இந்த நிலையைச்சற்று மாற்றியிருக்கிறார் ஆனந்தி. சுவாமிமலை மேட்டுத்தெருவில் வசிக்கும் இவர், சிலை தயாரிப்பில் கரு வார்ப்பது தொடங்கி நகாசு செய்து கண் திறப்பதுவரை அத்தனை பணிகளையும் பிசிறில்லாமல் செய்து வியக்கவைக்கிறார்.

திருமால் சிலைக்காக மெழுகு செய்துகொண்டிருந்த ஆனந்தியிடம் பேசினால் வார்த்தைகளில் உற்சாகம் தெறிக்கிறது.

“ஐம்பொன் சிலை செய்யறதுல பேர் போன குடும்பங்கள்லாம் சுவாமிமலையில இருக்கு. எங்க வீட்டுக்காரர் சின்ன வயசுலேயே அவங்ககிட்ட வேலைக்குப் போயிட்டார். ஓரளவுக்குத் தொழில் கைகூடினதுமே ஈரோட்டுல உள்ள ஒரு சிலை கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. குடும்பத்தோட கிளம்பிட்டோம். இவரோட வருமானத்துல மட்டும் வாழ்க்கையை ஓட்ட முடியலை. ஏதாவது வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணினேன்.

வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு பாக்குறதில எனக்கு நம்பிக்கையில்லை. பெண்களுக்கு அறிவுல எந்தக் குறைபாடும் இல்லை. நாலஞ்சு வருஷம் நல்லா ஓடுச்சு. சொந்த ஊருக்கு வரணும்னு என் வீட்டுக்காரருக்கு ஆசை. அதனால சுவாமிமலைக்கே வந்துட்டோம். இங்கே நாங்களே ஒரு பட்டறையைப் போட்டோம். தொடக்கத்துல அவருக்கு உதவியா சில வேலைகள் செஞ்சேன். அப்படியே ஒவ்வொரு வேலையா கத்துக்கிட்டேன். இப்போ பத்து ஆண்டுகளைக் கடந்தாச்சு. அவருக்கு இணையா எல்லா வேலையும் செய்யுறேன்” என்கிறார் ஆனந்தி.

சிலை செய்யும் நுட்பங்கள்

கண்ணால் கண்டால் கருத்தில் ஒட்டிக்கொள்வதல்ல சிலைத் தொழில். விடாத ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. ஐம்பொன்னில் அழகு காட்டும் ஒரு சிலைக்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது. முதற்கட்டமாக மெழுகில் கரு உருவாக்கப்படும். இது சாதாரண மெழுகல்ல. ஒருவகை மரத்தில் உருகி வழியும் பாலக்காட்டு மெழுகு. அதோடு சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொள்கிறார்கள். கைக்கு வாகாக வரும் இந்த மெழுகை வைத்துத் தேவையான அளவுக்கு ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து வகைப்படுத்தி, அந்த மெழுகு விக்கிரகத்தின் மேல் பூசி மோல்டு (வார்ப்பு) செய்ய வேண்டும். கீழ்ப்பகுதியில் மட்டும் சிறிய துளை அவசியம். பின்னர், அதை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும்.

“நல்லா சூடாக்கும்போது அந்த மோல்டுக்கு உள்ளே இருக்கிற மெழுகு அப்படியே உருகி ஓட்டை வழியா கீழே வந்துடும். மோல்டு மட்டும் கூடு போல இருக்கும். அந்தக் கூட்டைத் திரும்பவும் நல்லா சூடு பண்ணி பழுக்க வைக்கணும். அதே நேரத்துல ஐம்பொன்னையும் உருக்கணும்” என்கிறார் ஆனந்தி.

ஐம்பொன் என்றால் பேருக்குத்தான் பொன். 70 சதவீதம் செம்பு, 20 சதவீதம் பித்தளை, 10 சதவீதம் ஈயம் என்பதுதான் கணக்கு. வெள்ளியும் தங்கமும் வசதியைப் பொறுத்தது.

“ஐம்பொன்னை உருக்குறதுக்கு மூசைன்னு ஒரு அடுப்பு இருக்கு. அதுல கரியைப் போட்டு அதிகபட்ச வெப்பத்துல உருக்கணும். அதே நேரம் அந்த மோல்டு கூட்டையும் செக்கச் சிவக்க சூட்டுலயே வச்சிருக்கணும். ஐம்பொன் உருகி தண்ணியா நிக்குற நேரத்துல கவனமா எடுத்து மோல்டுல இருக்கிற சின்ன ஓட்டை வழியா உள்ளே ஊத்தணும். ஓட்டையோட முகப்பு வரைக்கும் ஊத்தி முடிச்சதும் அப்படியே ஒரு ஓரமா வச்சி ஆறவிடணும். ஒருநாள் கழிச்சு சுத்தியலை வச்சு மண்ணைத் தட்டி உடைச்சா, உள்ளுக்குள்ளே கருவுல இருந்த உருவம் உலோகத்துல பிசிறு தட்டி நிக்கும். அதை அரம் வச்சு ராவி, சீவிளி வச்சு சீவணும். தேவையான பாகங்கள் ஏதும் தேஞ்சுறக் கூடாது. பாலிஷான பிறகு நகாசு வேலை. அதுதான் ரொம்ப முக்கியமானது. எல்லாம் முடிஞ்சு கண்ணு தொறக்கணும்” என்று சிலை வடிக்கும் நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டார் ஆனந்தி.

ஆனந்தியின் மகன் அரவிந்தனும் சிலை வடிவமைப்பில் சிறப்பாகச் செயல்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்குத் தமிழக அரசு பூம்புகார் நிறுவனம் சிறந்த கைவினைஞர் விருது வழங்கியுள்ளது.

இப்படிச் சிலைகளைச் செய்துவந்த ஆனந்தி உடல்நலம் சரியில்லாததால் கடந்த ஆண்டு தனது பட்டறையை மூடிவிட்டார். அறுவைசிகிச்சை முடிந்ததும் சில மாதங்களாக முடங்கிக் கிடந்த வாழ்க்கையை மீண்டும் தொடங்க ஏதுவாகச் சிலை செய்யும் தொழிலுக்குத் திரும்பியிருக்கிறார். போதிய முதலீடு இல்லாமல் தவித்துவந்தாலும் ஐம்பொன் சிலையைத் தோற்கடிக்கும் நம்பிக்கைப் பொலிவு அவரது பேச்சில் தெரிகிறது.

படங்கள்:வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x