Published : 17 Dec 2017 12:36 PM
Last Updated : 17 Dec 2017 12:36 PM
பெண்களையும் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. இன்று பல துறைகளில் பெண்கள் நுழைந்திருப்பதுகூடப் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால், சமூகக் கட்டமைப்புகளால் இன்றும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தளைகளால் நிகழும் துன்பச் சம்பவங்களும் அவற்றை உடைக்க முயலும் போராட்டத்தின் நம்பிக்கைதரும் நகர்வுகளும் எப்போதும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு அப்படி நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு இது:
உரிமைக் குரல்
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. வயதான பெண்கள் முதல் இளம் பெண்கள்வரை ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். வெளிச்சம் இன்றி இரவெல்லாம் சென்னை மெரினா கடற்கரையில் இருந்தபோதும் போராட்டக் களத்தில் ஒரு பெண்ணும் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை. அந்த வகையில் பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்புக்கு உதாரணமாகவும் இந்தப் போராட்டம் விளங்கியது.
இயற்கைப் போராளி
பெண்களை இயற்கையின் கொடைகளோடு ஒப்பிடும் நம் நாட்டில், மரங்களை வெட்டுவதை எதிர்த்துப் போராடிய 20 வயதுப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த லலிதா, சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆண்டின் முதல் பாதியில் அவரை உயிருடன் தீவைத்துக் கொன்றனர்.
இரவும் எங்களுடையதே
பெங்களூரு நகரில் புத்தாண்டு நாளன்று ஏராளமான பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறலைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ‘I will go out’ என்ற வாசகம் தாங்கிய பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது. நாட்டின் முக்கிய மாநகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் ‘பகலும் நமதே இரவும் நமதே, இரவை ஆக்கிரமியுங்கள், பெண்கள் மீதான வன்முறையை நிறுத்துங்கள்’ என்பது போன்ற முழக்கங்களுடன் பெண்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விழிப்புணர்வு வீடியோ
ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதையொட்டி கேரள அரசின் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ‘NO, GO, TELL’ என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோவில் நடிகர் நிவின் பாலி தோன்றினார். நல்ல தொடுதல், தவறான தொடுதல், யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனே அதைத் தடுத்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்கள் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.
அத்துமீறிய சோதனை
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதன்முறையாகத் தமிழகத்தில் நடத்தப்பட்டது. தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் மிக மோசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முழுக் கை சட்டையுடன் வந்த மாணவர்களின் சட்டைகளைக் கிழித்ததும் மாணவிகளின் உள்ளாடைகளைச் சோதனை செய்ததும் மனிதத் தன்மையற்ற செயல்பாடு என மாணவர்கள் குற்றம்சாட்டினர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மோசமான சோதனை குறித்து விளக்கம் அளிக்குமாறு சி.பி.எஸ்.சி. அமைப்புக்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
துணிச்சல் பெண்கள்
மத்தியப்பிரதேச மாநிலம் குருகிராம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நடைபெறவிருந்த கொள்ளையை இரண்டு பெண் ஊழியர்கள் தடுத்துநிறுத்தினார்கள். வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை அங்கிருந்த விம்லா தேவி, பூனம் இருவரும் நாற்காலியால் அடித்து, அவர்களிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து மற்றவர்களின் துணையோடு மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாவட்டக் காவல்துறை ஆணையர் சந்தீப் கிர்வார் திருடர்களைத் பிடித்த துணிகரச் செயலுக்காக இருவரையும் கவுரவித்தார்.
இயற்கை இழிவானதா?
வகுப்பு இருக்கையில் மாதவிடாய் கறை படிந்துவிட்டதற்காகப் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியை வகுப்பு ஆசிரியர் பல மாணவர்கள் முன்னிலையில் கண்டித்துள்ளார். இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அழிக்க முடியாத பணி
சிறுபான்மையின, தலித் மக்களுக்கு ஆதரவாகவும் மதவாதத்துக்கு எதிராகவும் வலிமையான எழுத்து மூலம் பிரச்சாரம் செய்துவந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற கௌரியை அவரது வீட்டு வாசலிலேயே மர்ம மனிதர்கள் சுட்டுக்கொன்றனர். இந்தப் படுகொலை குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சிறந்த எழுத்தாளரான கௌரி லங்கேஷ் இறந்தாலும் மக்களுக்காக அவர் எழுதிய எழுத்துகள் தற்போதும் உயிர்ப்புடன் அவர் விட்டுச்சென்ற பணியைச் செய்துவருகின்றன.
வீட்டுக் காவலிலிருந்து விடுதலை
இஸ்லாமிய மதத்துக்கு மாறி தனக்குப் பிடித்தவரைத் திருமணம் செய்துகொண்ட கேரள மாணவி ஹாதியா, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இடைநின்ற கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு முன் அவர் பெற்றோரின் வீட்டுக் காவலில் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து, கல்லூரி முதல்வரின் பாதுகாப்பில் விட்டுள்ளது.
கல்லூரி விடுதியில் தங்கியுள்ள அவரை அவ்வப்போது அவருடைய பெற்றோரும் கணவரும் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
அதிர்ச்சியளித்த தீர்ப்பு
வரதட்சிணைக் கொடுமை வழக்கில் விசாரணை இல்லாமல் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரைக் கைதுசெய்யக் கூடாது என ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மீண்டும் உறுதிப்படுத்தியது.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை சட்டம், வரதட்சிணைக் கொடுமைச் சட்டம் போன்றவை மேலும் வலுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவரும் நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT