Published : 17 Dec 2017 10:39 AM
Last Updated : 17 Dec 2017 10:39 AM
ஆ
யிரம் கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மகளிர் திருவிழா அண்ணா கலையரங்கில் டிசம்பர் 10 அன்று நடைபெற்றது. ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் விழாவில் பங்கேற்றனர்.
விழாவைக் காஞ்சிபுரம் சரகக் காவல்துறை துணைத் தலைவர் பி.சி.தேன்மொழி குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பி.கல்பனா, யோகா ஆசிரியர் டாக்டர் புவனேஸ்வரி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக மேடையை அலங்கரித்தனர். மூவரது கருத்துரைகளும் வாசகியருக்குத் தேவையான அறிவுக் குவியலாக இருந்தன.
புகார் அளிக்கத் தயங்காதீர்
சைபர் கிரைம் பிரச்சினைகளையும் அவற்றைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும் என்றும் பி.சி.தேன்மொழி பேசினார்.
“பெண்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான புரிதல் அவசியம். பெண்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பலரிடம் பழகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இதன்மூலம் அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், இது தொடர்பாகக் காவல் துறைக்குப் புகார் அளிப்பதில்லை.
இதனால் சைபர் கிரைம் மூலம் பிடிபட வேண்டிய நபர்கள் பலர் எளிதாகத் தப்பிவிடுகின்றனர். குறைந்தபட்சம் புகார் அளிக்கவில்லை என்றாலும் அது குறித்த ஒரு தகவலைக் காவல்துறையினருக்குத் தெரிவிப்பது அவசியம். இதன்மூலம்தான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இதுபோல் செயல்படுவதைத் தடுக்க முடியும்” என்றார்.
வெளிப்படைத்தன்மைக்கு பெற்றோரே பொறுப்பு
மேலும், பெற்றோர் பெண் குழந்தைகளுடன் நண்பர்களைப் போல் பழக வேண்டும் என்றும் தேன்மொழி வலியுறுத்தினார். “பெற்றோர் பெண் பிள்ளைகளிடம் நட்புடன் நடந்துகொண்டால்தான் அவர்கள் தாங்கள் வெளியில் பழகக்கூடிய நபர்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவார்கள். பெண் குழந்தைகள் கைபேசியில் ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம். அவர்கள் வெளிப்படையாக இருக்கும் வகையில் அவர்களுக்குச் சுதந்திரம் வழங்குவதே பாதுகாப்பானது. நாமும் அவர்கள் என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.
தொடர்ந்து, ‘ஆணுக்குப் பெண் சமமில்லை’ என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தியவர் அதற்குக் கொடுத்த விளக்கம் வாசகியரை ஆர்ப்பரிக்கச் செய்தது. “ஆண்களைவிடப் பெண்கள் பல்வேறு குடும்ப, சமூகப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவற்றை எளிதில் சமாளிக்கின்றனர். பெண்களின் இந்தத் திறமை தனித்துவம் வாய்ந்தது. எனவே, ஆணுக்குப் பெண் சமமில்லை. ஆணைவிடப் பெண்ணே உயர்ந்தவள்” என்றார்.
உடல், மன நலனில் அக்கறை செலுத்துங்கள்
அடுத்ததாகப் பேசிய டாக்டர் பி.கல்பனா, “பெண்கள் தங்கள் உடல், மனநலனைக் காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்” என்று சொன்னார். மேலும், “உடல்நலனைப் பேணிக் காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். ஆரோக்கியமான சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். இவை மனநலனையும் மேம்படுத்தும். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்போது, அலட்சியப்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையை உடனடியாகப் பெற வேண்டும். பெண்கள் நல்ல நண்பர்கள் வட்டம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எல்லாப் பிரச்சினைகளையும் பெற்றோரிடம் பேச முடியாது. புரிந்துகொண்ட நட்பு வட்டம் இருந்தால் பெரிய பிரச்சினைகளைக்கூட எளிதில் எதிர்கொள்ள முடியும்” என்றார்.
இதைத் தொடர்ந்து யோகா ஆசிரியர் டாக்டர் புவனேஸ்வரி, எளிய யோகா பயிற்சிகள் சிலவற்றைச் செய்யக் கற்றுக் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் வாசகியர் அனைவரும் யோகா செய்தனர். யோகாவின் நன்மைகள், அதன் மூலம் நோய்களில் இருந்து உடல்நலனைக் காத்தல் ஆகியவை குறித்தும் இவர் விவரித்தார்.
சிந்திக்கத் தூண்டிய பேச்சரங்கம்
இந்தக் கருத்துரைகளுக்குப் பிறகு, ‘யாருக்கு அதிகச் சுமை? வேலைக்குச் செல்லும் பெண்களுக்கா, இல்லத்தரசிகளுக்கா?’ என்னும் தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. பச்சையப்பன் மகளிர் கல்லூரி பேராசிரியர் எஸ்.சங்கீதா நடுவராக இருந்து பேச்சரங்கை நடத்தினார்.
‘இல்லத்தரசிகளுக்கே’ என்ற தலைப்பில் டி.தேவி பேசினார். இவர் இல்லத்தரசிகளின் பணிகளையும் அவர்களின் சுமைகளையும் எடுத்துக் கூறினார். ‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே’ என்ற தலைப்பில் எஸ்.பாக்கியலட்சுமி பேசினார். வேலைக்குச் செல்லும் இடங்களிலும் குடும்பத்திலும் பெண்களுக்கு ஏற்படும் வேலைப் பளு குறித்து அவர் விளக்கினார்.
உற்சாகமூட்டிய பரிசு மழை
விழாவுக்கு இடையிடையே திருப்போரூர் புதுவினைக் கலைக் குழுவினரின் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் வாசகியரை மகிழ்வித்தன.
மதிய உணவுக்குப் பிறகு வாசகிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பந்து பாஸ் செய்தல், தலையில் ஸ்டிரா செருகுதல், முகத்தில் பொட்டு ஒட்டுதல், பேப்பர் கப் அடுக்குதல், ரப்பர் பேண்ட் மாலை செய்தல், பென்சில் மீது நாணயம் அடுக்குதல், வசனமில்லா நடிப்பு (மைம்) உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்பட்டன. இவை தவிர காஞ்சிபுரம் குறித்தும், ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் அளித்த வாசகியருக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டு மூக்குத்தி அணிந்தவர்கள், கண்ணாடி வளையல் அணிந்தவர்கள், குக்கிராமங்களில் இருந்து வந்தவர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. உத்திரமேரூரை அடுத்த இளநகர் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பவுன் ஜேகம் இருவருக்கும் பம்பர் பரிசு வழங்கப்பட்டது. விழா அரங்குக்கு முதலில் வந்த மெர்லினாவுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா மாலை நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிச்சயப் பரிசு வழங்கப்பட, வாசகியர் மன நிறைவுடன் சென்றனர்.
குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி வைணவ கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள் ஜீவிதா, தாரேஸ்வரி, லோகேஷ்வரி வெங்கடேசன், மனிஷா ஆகியோர் புகைப்படங்களை எடுத்தனர்.
இந்த விழாவை தி இந்துவுடன் இணைந்து தைரோகேர், தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, ஜெப்ரானிக்ஸ், ஹோட்டல் எஸ்.எஸ்.கே.கிராண்ட், மை டிவி ஆகியவை நடத்தின. போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகியருக்கு சாஸ்தா கிரைண்டர்ஸ், பிருத்வி, உடுப்பி ருசி, பச்சையப்பாஸ் சில்க்ஸ், ட்வின் பேர்ட்ஸ், கோகுல் சாண்டல், மந்த்ரா கோல்ட் கோட்டிங்ஸ், செய்யாறு ஸ்ரீகுமரன் ஜுவல்லர்ஸ், அன்னை டேட்ஸ், ராணிப்பேட்டை ஜிகே வேர்ல்டு ஸ்கூல், வெற்றி அரசு ஐ.ஏ.எஸ். அகாடமி, ராஜம் செட்டி அண்ட் சன்ஸ், எஸ்.எம்.சில்க்ஸ், பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் டிஎன்பிஎஸ்சி கோச்சிங் சென்டர், காஞ்சிபுரம் ஐப்ளே ஐலேர்ன் ப்ளே ஸ்கூல் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT