Published : 31 Dec 2017 11:34 AM
Last Updated : 31 Dec 2017 11:34 AM

வான் மண் பெண் 38: இயற்கையை ஆவணப்படுத்தும் தாரா!

யற்கையை நேசிப்பவர்களுக்கும் பாதுகாக்கிறவர்களுக்கும் நடுவே இயற்கையை ஆவணப்படுத்துவதற்கு இன்று மிகச் சிலரே இருக்கிறார்கள்.

இயற்கை என்பது உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் ஆதிஅறிவு. காடுகள், நதிகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பலவற்றைப் பற்றிய புரிதல் இருந்தால்தான் அவை நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் பாதுகாக்கப்படும். அதற்காகவே இயற்கையை ஆவணப்படுத்த வேண்டும்.

இவ்வளவு அவசியமான ஆவணப்படுத்துதலைச் செய்துவருபவர்களில் தாரா காந்தி, முக்கியமானவர். காந்தியின் பேரனும் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தியின் மனைவி இவர்.

வசீகரித்த இயற்கை

திருவான்மியூரில் இருக்கும் வீட்டில் தாராவைச் சந்தித்தோம். கல்கத்தாவில் 1949-ல் பிறந்த தாராவுக்குச் சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. “வேலை நிமித்தமாக என் அப்பா அவ்வப்போது இடம்மாற்றப்படுவார். பள்ளிக் கல்வியை முடித்தபோது மொத்தமாக எட்டுப் பள்ளிகள் மாறியிருந்தேன்” என்கிறார்.

மாற்றலாகிச் சென்ற ஒவ்வோர் இடத்திலும் அந்தப் பகுதியின் இயற்கைச் சூழலை இவர் அவதானித்துக்கொண்டே இருந்திருக்கிறார். புதிய வகைத் தாவரங்கள், காட்டுயிர்கள், பறவைகள் என ஒவ்வொன்றும் இவரை வசீகரிக்க, இயற்கை மீதான ஈர்ப்பு கல்லூரிக் காலத்திலும் தொடர்ந்தது. எனவே, மும்பை சோஃபியா கல்லூரியில் விலங்கியல் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சில காலம் நுண்ணுயிரியல் பரிசோதனைக் கூடம் ஒன்றில் பணியாற்றினார். 1971-ல் திருமணம் நடந்தது. இவருடைய கணவருக்கும் அவ்வப்போது பணி நிமித்தமாக இடமாற்றம் வந்துகொண்டே இருந்ததால் சுமார் 12 ஆண்டுகள் குடும்பத்தை நிர்வகிப்பதிலேயே நாட்கள் கழிந்தன.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருப்பது என்று தோன்ற, மேற்படிப்பு படிக்க முடிவெடுத்தார். மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்’ (பி.என்.ஹெச்.எஸ்.) அப்போது நிதிநல்கையுடன் கூடிய ஆய்வுப் படிப்பை அறிவித்திருந்தது. 33 வயதில் அந்தப் படிப்புக்கு தாரா காந்தி விண்ணப்பித்தார்.

சாலிம் அலியின் வழியில்

அப்போதெல்லாம் தேர்ந்தெடுத்த துறையில் கள ஆய்வு செய்துதான் முதுநிலைப் பட்டம் பெற முடியும். தாரா தேர்ந்தெடுத்ததோ விலங்கியல். எனவே, காடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தாக வேண்டும். தன்னால் காடுகளுக்கெல்லாம் செல்ல முடியுமா, என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று போற்றப்படும் சாலிம் அலியின் கீழ் கற்கும் வாய்ப்பு இதன் மூலம் அவருக்குக் கிடைத்தது.

“சாலிம் அலியின் மாணவி என்ற உணர்வே எனக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. அப்போது அவருக்கு 89 வயது. அந்த வயதிலும் பறவைகள் மீதும் இயற்கை மீதும் ஒவ்வொரு நாளும் தீராத ஆர்வத்துடன் இருந்தார்” என்று அவர் மீதான வியப்பு மாறாமல் பேசுகிறார் தாரா.

அப்போது தாரா சென்னையில் இருந்ததால் அவரது ஆய்வும் சென்னையைச் சார்ந்து இருக்க வேண்டும். சாலிம் அலியின் வழிகாட்டுதலில் வண்டலூர் பூங்காவில் உள்ள புதர்க் காடுகளில் ஆய்வைத் தொடங்கினார். அங்கு அப்போது யூகலிப்டஸ் மரங்கள், முந்திரி மரங்கள் ஆகியவை இருந்துள்ளன. “இவ்வாறான பூங்காக்களில் காணப்படும் பறவைகள் பற்றியும் அசலான காடுகளில் காணப்படும் பறவைகள் குறித்தும் ஒப்பாய்வு செய்வதுதான் என் பணி” என்கிறார் தாரா.

அந்த ஆய்வுக்காக வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது இவருக்குத் துணையாக சையது அப்துல்லா ஹுசைன் எனும் பிரபல பறவையியலாளர் இருந்தார். அவருடன் வெயில், மழை, பகல், இரவு பாராமல் காடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார். “அப்போதெல்லாம் ஏதோ பெரிய ஆய்வில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக்கொள்வேன். உண்மையில் சாலிம் அலியும் ஹுசைனும் பயிற்சி என்ற பெயரில் என் ஆர்வத்தைப் பரிசோதித்திருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது. பெண்ணாக, அதுவும் தாயாகிவிட்ட பிறகும் என்னால் எவ்வளவு தூரம் ஆய்வுப் பணியில் ஈடுபட முடியும் என்பதை அவர்கள் சோதித்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றினேன்” என்று பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் தாரா.

ஆய்வுப் பணியை நல்லவிதமாக முடித்தாலும் இவரது ஆய்வறிக்கை அவ்வளவு சிறப்பாக வரவில்லை. எனவே, அப்போது சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த சஞ்சீவ் ராஜ், பிரபல இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் போன்றோரின் உதவியை நாடினார். “அந்நேரத்தில்தான், இயற்கையை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். அவர்களின் உதவியால் ஆய்வறிக்கையை சாலிம் அலியிடம் சமர்ப்பித்தேன். அதைப் பார்த்த அவருக்கு முழு திருப்தி உண்டானது. அந்த ஆய்வறிக்கையில் அவர் கையெழுத்திட்டார். அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்” என்று சொல்லிவிட்டுச் சற்று நேரம் அமைதி காத்தார்.

வாழ்க்கை என்பதே சூழலியல்தான்

தனது மேற்படிப்புக்குப் பிறகு இண்டாக், உலக இயற்கை நிதியம் (WWF), சென்னை இயற்கையியலாளர் சங்கம் (Madras naturalist society), இந்தியக் காட்டுயிர் அறக்கட்டளை (WTI) போன்ற பல அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றியிருக்கிறார் தாரா காந்தி. இப்போதும் அந்தப் பொறுப்புகள் சிலவற்றில் செயலாற்றிவருகிறார். அவ்வப்போது பல்வேறு நாளிதழ்களில் சுற்றுச்சூழல், பறவைகள் குறித்துக் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

சாலிம் அலியிடம் பயின்ற காலத்தில், அதுவரை அவர் எழுதியவற்றையெல்லாம் தொகுக்க வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு உருவானது. “சாலிம் அலியே நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவரது சுயசரிதையும் பறவைகள் குறித்த வழிகாட்டிப் புத்தகங்களும் முக்கியமானவை. என்றாலும், பல்வேறு நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றில் எழுதியவை, பல்வேறு நிகழ்வுகளில் அவர் ஆற்றிய உரைகள், தனிப்பட்ட முறையில் சிலருக்கு அவர் வழங்கிய நேர்காணல்கள் போன்றவை அதுவரை யாராலும் தொகுக்கப்படாமல் இருந்தன.

நான் அவற்றைத் தொகுக்க நினைத்தேன். இந்தப் பணிக்கு சாலிம் அலியின் உறவினரும் பிரபல பறவையியலாளருமான சஃபர் ஃபதே அலியும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவும் உதவினார்கள். அதன் விளைவாக, ‘எ பேர்ட்ஸ் ஐ வியூ’ என்ற தலைப்பில் சாலிம் அலியின் தொகுக்கப்படாத எழுத்துகள் இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்தன!” என்று சொல்லும் தாரா, ‘பேர்ட்ஸ், வைல்ட் அனிமல்ஸ் அண்ட் அக்ரிகல்சர்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பறவைகளாலும் காட்டுயிர்களாலும் விவசாயம் எப்படியெல்லாம் வளர்கிறது, பாதிக்கப்படுகிறது என்பது பற்றி அந்தப் புத்தகத்தில் தாரா விரிவாக விளக்கியுள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் ஆலோசகராக தாரா பணியாற்றியிருக்கிறார். “அப்போது கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டியிருந்தது. அதற்காகப் பல கிராமங்களுக்குச் சென்றேன். அங்கு பறவைகள், காட்டுயிர்களால் அப்பகுதி விவசாயம் எப்படி மாறுகிறது என்பதை ஆராய்ந்தேன். அதன் விளைவே இந்தப் புத்தகம்” என்று சொல்லும் தாரா, இன்றைய தலைமுறையினருக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்கிறார்.

“இன்றைக்கு ஒருவர் சூழலியலாளராகப் பணியாற்றுவது மிகப் பெரிய விஷயம். நான் வளர்ந்த காலத்தில் பறவை நோக்குதல் என்பது ஒரு பொழுதுபோக்குச் செயல் மட்டுமே. என் தலைமுறை சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலை இணைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைய தலைமுறையினர் அப்படி இணைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில் சுற்றுச்சூழல் பற்றித் தனியே கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வீட்டுக் குழாயைத் திருகுகிறீர்கள், நீர் கொட்டுகிறது. அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். இப்படி, ஒவ்வொரு விஷயத்தையும் அது எங்கிருந்து தொடங்குகிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் இன்னொரு விஷயத்தோடு இணைத்துப் பாருங்கள். இதைச் செய்தாலே போதும். இயற்கையுடன் உங்களை இணைத்துப் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். வாழ்க்கை என்பதே சுற்றமும் சூழலும்தானே!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x