Published : 17 Dec 2017 10:39 AM
Last Updated : 17 Dec 2017 10:39 AM
ஃபே
ஷன் டிசைனிங் படிக்காமலேயே அனுபவத்தாலும் பயிற்சியாலும் அழகிய வேலைப்பாடுகளுடன் பிளவுஸ்களைத் தைக்கிறார் என். ராதா. பாளையங்கோட்டையைச் சேர்ந்த இவருக்குத் திருமண சீஸனில் இரவு பகலாக பிளவுஸ் டிசைனிங் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. ராதாவின் நேர்த்தியான தையல் கலைக்கு ரசிகர்கள் பலர். திருமணம் முடிந்து வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் குடியேறியவர்கள்கூடத் துணிகளை ராதாவுக்கு கொடுத்தனுப்பி, தங்களுக்குப் பிடித்த டிசைனில் பிளவுஸ்களைத் தைத்து வாங்கிச் செல்கிறார்கள்.
தையல் தொழிலும் அதன் தொடர்ச்சியாக டிசைனர் பிளவுஸ் தயாரிப்பும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பொருளாதார முன்னேற்றத்தை அளித்ததாக ராதா சொல்கிறார்.
அனுபவமே ஆசான்
“பத்தாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறேன். வருமானத்துக்காகத் தையல் தொழிலில் ஈடுபட முடிவெடுத்து, ஓரிரு மாதங்கள் தையல் பயிற்சிபெற்றேன். பின்னர் அனுபவத்தால் பல்வேறு தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். 1981-ல் திருநெல்வேலி கனரா வங்கியில் ரூ.1, 200 கடன் பெற்று தையல் இயந்திரம் வாங்கித் துணிகளைத் தைத்துக் கொடுத்துவந்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் மாதந்தோறும் சிறு தொகையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தினேன். பெண்களுக்கான துணிகளை ஒருசில ஜவுளிக் கடைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தைத்துக் கொடுத்தேன். 15 ஆண்டுகளுக்கு முன் டிசைனர் பிளவுஸ் தைக்கத் தொடங்கினேன். பிளவுஸ் கட்டிங்கும் விதவிதமான டிசைன்களும் பெண்களுக்கும் பிடித்துப்போயின. பிறகு மணப்பெண்களுக்கு டிசைனர் பிளவுஸ், விழாக் காலங்களில் சிறுமியருக்கான பட்டுப்பாவாடை உள்ளிட்டவற்றைப் பல்வேறு வேலைப்பாடுகளுடன் தைத்து வருகிறேன் என்கிறார்.
மனநிறைவு தரும் வேலை
தப்போது இணையத்தில் டிசைன்களைப் பார்த்து அவற்றைப் போன்ற பிளவுஸ்களைப் பெண்கள் விரும்புவதாகச் சொல்லும் ராதா, அதையும் செய்துகொடுக்கிறார். மேலும் மணப்பெண்களுக்கான பிளவுஸ்களைத் தைத்துக்கொடுப்பது இவரது சிறப்பம்சம்.
“என்னோடு லதா, மகாலெட்சுமி, கனகலெட்சுமி, லட்சுமி, ராமலெட்சுமி, வள்ளி ஆகியோரும் அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய மணப்பெண்ணுக்கான பிளவுஸை தைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மணநாள் எவ்வளவு முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நாளில், தான் அணியும் ஆடைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெண்ணும் சிரத்தை எடுத்துக்கொள்வார். அந்த மணப்பெண்ணுக்கு மனநிறைவைத் தரும் வகையில் பிளவுஸைத் தைத்துக் கொடுப்பதுதான் எனக்கும் மனநிறைவு” என்று சொல்கிறார் ராதா.
படங்கள்:
அ.அருள்தாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT