Published : 10 Dec 2017 10:24 AM
Last Updated : 10 Dec 2017 10:24 AM

வான் மண் பெண் 35: சட்டம் கற்காத நீதி ‘நாயகி!’

நீ

ரின்றி அமையாது உலகு என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அந்தச் சொற்றொடருக்கு முன்னால் ‘மாசுபட்ட’ என்ற சொல்லைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். காற்று, நில மாசுபாடுகளைக் காட்டிலும் நீர் மாசுபாடு மிகவும் ஆபத்தானது. காரணம், நீர் கரைக்கும் தன்மையைக் கொண்டது.

நீர் மாசுபாட்டைப் பற்றிப் பேசும்போது திருப்பூர், வேலூர் எனத் தமிழகத்திலேயே அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக வேலூரில், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாலாறு சீர்கெட்டது. இங்கு வேலூரைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு. வேலூரில் எந்தவிதமான ரசாயனத்தால் நீர்நிலைகள் சீர்கெட்டனவோ, அதே ரசாயனத்தால்தான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹிங்க்லி எனும் பகுதியின் நீர்நிலைகளும் சீர்கெட்டன.

வேலூருக்கும் ஹிங்க்லிக்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த ரசாயனம்… குரோமியம்! அந்த ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்தான் எரின் ப்ரொகோவிச் என்ற ‘நாயகி!’

10chnvk_erin2.jpgபட்டம் சூடிய ‘அழகி’

1960 ஜூன் 22 அன்று அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் பிறந்தார் எரின் ப்ரொகோவிச். இவருடைய தந்தை ஃப்ராங்க் பேட்டீ, தொழிற்சாலை ஒன்றில் பொறியாளராக இருந்தார். இவருடைய தாய் பெட்டி ஜோ, பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

எரினுக்கு ‘டிஸ்லெக்ஸியா’ எனும் கற்றல் குறைபாடு இருந்தது. அதனால், அவரது பெற்றோர் அவரை மிகவும் செல்லமாக வளர்த்தனர். அவர்கள் கொடுத்த சுதந்திரம், எரினை, சகலவிதமான விளையாட்டுத் தனங்களிலும் அச்சமில்லாமல் ஈடுபட வைத்தது. அந்தத் துணிச்சல் காரணமாகத்தான், கன்சாஸ் மாகாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருந்த அவரை, 1981-ம் ஆண்டு ‘மிஸ் பசிபிக் கோஸ்ட்’ அழகிப் போட்டியில் பங்கேற்கத் தூண்டியது. அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அழகிப் போட்டிகள் தனக்கான களம் அல்ல என்பதை உணர்ந்த எரின், அதிலிருந்து விலகினார். அழகியாகப் பட்டம் சூடிய அடுத்த ஆண்டே, ஷார் பிரவுன் என்பவருடன் எரினுக்குத் திருமணமானது. இரண்டு குழந்தைகளும் பிறந்தன. கருத்து வேறுபாடுகள் காரணமாக 1987-ம் ஆண்டு அந்தத் தம்பதி விவாகரத்துப் பெற்றது. மூன்று குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட எரின், குடும்பத்தைக் காப்பாற்றத் தனியார் நிறுவனம் ஒன்றில் செயலராகப் பணிக்குச் சேர்ந்தார்.

விபத்து தந்த திருப்புமுனை

அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக, அந்த விபத்து அமைந்தது. எரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இன்னொரு கார் எரினின் கார் மீது மோதியது. அந்த விபத்துக்கான நஷ்ட ஈட்டைப் பெறுவதற்காக எட் மேஸ்ரி எனும் வழக்கறிஞரைச் சந்தித்தார் எரின். அந்த வழக்கில் வெற்றிபெற்றாலும், மிகவும் குறைந்த இழப்பீடே வழங்கப்பட்டது.

அந்தப் பணத்தைக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ முடியாது என்பதால், அந்த வழக்கில் வாதாட அவர் நியமித்த வழக்கறிஞரின் அலுவலகத்திலேயே மிகவும் குறைவான ஊதியத்துக்கு எரின், வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, ‘பசிபிக் கேஸ் அண்ட் எலெக்ட்ரிக்’ எனும் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகாலமாக ஹிங்க்லி பகுதியில் உள்ள நீர்நிலைகளை எல்லாம் மாசுபடுத்தி வந்திருப்பதை அறிந்தார்.

10chnvk_erin3.jpgright

அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எல்லாம் முழுமையாகப் படித்து அந்த நிறுவனத்தின் தகிடுதத்தங்கள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். 1905-ல் சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் முக்கியப் பணி, இயற்கை எரிவாயு எடுப்பது. 1952-ல், ஹிங்க்லி பகுதியில் அந்நிறுவனம், நீரேற்று நிலையம் ஒன்றை அமைத்தது.

அதிலுள்ள இயந்திரங்களின் வெப்பத்தைத் தணிக்க, ‘குளிரூட்டி கோபுர’மும் அமைக்கப்பட்டது. அந்தக் கோபுரத்தின் உதிரி பாகங்கள் துருப்பிடித்துப் போகாமல் இருக்க ‘ஹெக்ஸாவேலண்ட் குரோமியம்’ எனும் ரசாயனத்தை அந்நிறுவனம் பயன்படுத்தியது. ரசாயனம் கலந்த கழிவுநீரை, அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்க விட்டது அந்நிறுவனம்.

இதனால் அப்பகுதி நீர், மாசுபட்டது. அந்த நீரைப் பயன்படுத்திய மக்களைப் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கின. அந்த நிறுவனம், உண்மை வெளியே கசிந்துவிடாமல் இருக்க, அந்த மக்களுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டது. அந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் படித்த எரின், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்தித்தார். அந்த நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டைப் பெறுவதற்கு உதவியாக இருந்தார்.

ஆஸ்கர் வென்ற சேவை

முறையான சட்டக் கல்வி ஏதுமில்லாமல், தன்னுடைய சொந்த முயற்சியால், இந்த வழக்கு தொடர்பான சட்ட நுணுக்களைக் கற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஆங்கிலத்தில் ‘டைரக்ட் ஆக்‌ஷன் லாசூட்’ என்பார்கள். அதாவது, ஒரு நிறுவனம் செய்யும் தவறுக்காக, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல், அது காப்பீடு செய்திருக்கும் காப்பீட்டு நிறுவனத்தின் மீதே நேரடியாக வழக்கு தொடுப்பதுதான் ‘டைரக்ட் ஆக்‌ஷன் லாசூட்’.

சுமார் 650 பேர், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று, நிறுவனத்துக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர வைத்தார். காரணம், இவ்வாறான, ‘டைரக்ட் ஆக்‌ஷன்’ வழக்குகளில், இவ்வளவு சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. 10, 20 பேர்தான் என்றால், அந்த வழக்கு தோல்வியடைந்துவிடும். எனவே, அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இந்த வழக்கில் ஈடுபடுத்துவது முக்கியமானது. அதைச் சாதிப்பதற்கு, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எரின் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்.

இறுதியில் 1996-ல், பாதிக்கப்பட்டவர்களுக்கு 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,998 கோடி ) இழப்பீடாக வழங்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றில், ‘டைரக்ட் ஆக்‌ஷன் லாசூட்’ வழக்கின் மூலம் இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து 2000-ல், ‘ஓஷன்ஸ் லெவன்’ போன்ற பல பிரபல படங்களை இயக்கிய ஸ்டீவன் சோடெர்பெர்க், ‘எரின் ப்ரொகோவிச்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கினார். எரின் கதாபாத்திரத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருந்தார். அந்த ஆண்டு அவருக்கு, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை அந்தப் படம் பெற்றுத் தந்தது.

நிஜமான நாயகியோ எந்த விருதையும் எதிர்பார்க்காமல், தற்போதும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x