Published : 24 Dec 2017 11:16 AM
Last Updated : 24 Dec 2017 11:16 AM

வானவில் பெண்கள்: உடல்நலனை முன்னிறுத்தும் இனிப்புகள்

கிறிஸ்துமஸ் தாத்தா, நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், மான், புத்தாண்டு வரவேற்புப் பலகை எனப் பல்வேறு வடிவங்களில் சுவையான சாக்லேட்டுகள் செய்து அசத்திவருகிறார் சுஜாதா.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கணவருடைய தொழிலில் இணைய விரும்பாமல் சுயதொழிலில் ஈடுபடும் நோக்கில் புதுமையான முயற்சியில் இறங்கினார். “சிறு வயது முதலே புதுமையான முயற்சிகளில் ஈடுபடவும், தனித்துச் செயல்பட வேண்டுமென்பதிலும் ஆர்வமாக இருப்பேன். அதனால் கிரியேட்டிவ் ரைட்டிங் அண்டு தியேட்டர் ஆர்ட்ஸ், கிராஃபிக் டிசைனிங், பியூட்டிஷியன் எனப் பலவற்றைப் படித்தேன். குழந்தை பிறந்த பின்னர் ஆசிரியர் பணியைத் தொடர முடிவில்லை. அப்போதுதான் வீட்டில் இருந்தபடியே பிஸ்கட், சாக்லேட், கேக் ஆகியவற்றைச் செய்யத் தொடங்கினேன்” என்கிறார்.

கேடில்லாத கேக்

இந்தத் தின்பண்டங்களைச் செய்ய ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்சி எடுத்துக்கொண்டார் சுஜாதா. “பொதுவாகக் கடைகளில் விற்கப்படும் கேக்குகளில் ‘கேக் இம்ப்ரூவர்’ என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுபோன்ற ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. அதனால் நான் உடலுக்கு உகந்த பொருட்களை வைத்தே கேக் செய்துவருகிறேன். கேக் மீது வைக்கப்படும் பொம்மைகளையும் நானே செய்வேன். ரசாயனப் பொருட்களையும் செயற்கை வண்ணங்களையும் சேர்க்காமல் இருப்பதால் இவற்றுக்குத் தனிச் சுவை கிடைக்கிறது. இதனாலேயே பலரும் கேக், சாக்லேட்டுகளைச் செய்துதருமாறு கேட்கத் தொடங்கினார்கள். அப்படித்தான் தொடங்கியது கேக் பிசினஸ்” என்கிறார் அவர்.

16cb_xmas4முகநூல் மூலம் விற்பனை

கடை வைப்பதில் ஆர்வமில்லாத சுஜாதா The Sweet Pop - Chocs N Cakes என்ற பெயரில் ஒரு முகநூல் பக்கத்தைத் தொடங்கி அதில் தன்னுடைய தயாரிப்புகள் குறித்த விபரங்களை பதிந்து விற்பனை செய்துவருகிறார். “முகநூலில் எனது தயாரிப்புகளைப் பார்த்துவிட்டு, தமிழகம் மட்டுமின்றி, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கேரளா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்தும்கூட ஆர்டர்கள் வருகின்றன.” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சுஜாதா.

சாக்லெட் தயாரிப்பில் இவர் 80 சதவீதம் கோகோவைப் பயன்படுத்துகிறார். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது என்றும் சொல்கிறார். கடைகளில் செய்யப்படும் சாக்லெட்டுகளில் 50 சதவீதம் மட்டுமே கோகோ பயன்படுத்தப்படுகிறதாம். இவர் சர்க்கரையும் அதிக அளவில் சேர்ப்பதில்லை. மேலும் கற்பூரவல்லி, லெமன் பாம் ஆகியவற்றைக் கொண்டு மூலிகை சாக்லெட் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் சுஜாதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x