Last Updated : 24 Dec, 2017 11:15 AM

 

Published : 24 Dec 2017 11:15 AM
Last Updated : 24 Dec 2017 11:15 AM

நிகழ்வு: வாழ்க்கை மாற்றத்துக்கான கலை நிகழ்ச்சி!

 

ன்பால் உறவாளர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு அளிக்கும் சேவையில் நீண்ட காலம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ‘சகோதரன்’ அமைப்பும் தோழி, ஐ.டி.ஐ. உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளும் இணைந்து திருநங்கைகளின் கலாச்சாரத் திருவிழாவைச் சமீபத்தில் சென்னையில் நடத்தினார்கள்.

திருநங்கைகள் குழுவினரின் நாட்டுப்புறக் கலைவிழாக்கள், பல்வேறு தனித் திறன் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியும் நடைபெற்றது. திருநங்கை குஷி, மிஸ். திருநங்கை 2017-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிரவீணாவும் ஸ்வாதியும் பிடித்தனர்.

பொதுச் சமூகத்தின் புரிதல்

இதுபோன்ற விழாக்களால் என்ன பயன் என்று கேட்டால், “பொதுமக்களிடையே திருநங்கைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த அமைப்பு. தமிழ்நாட்டில் வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூ், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளை, பொதுச் சமூகத்தில் பல நல்ல விஷயங்களை செய்துவரும் அரிமா உறுப்பினர்கள், இன்னர்வீல் அமைப்பினர், மருத்துவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் இப்படிப் பலரையும் ஒருங்கிணைத்து திருநங்கைகள் குறித்த புரிதலை அதிகரிக்கும் நோக்கிலேயே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.” என்கிறார் இந்தியன் டிரான்ஸ்ஜென்டர் இனிஷியேட்டிவின் (ஐ.டி.ஐ.) நிறுவனரான சுதா. திருநங்கைகளே ஐ.டி.ஐ. அமைப்பின் அமைப்பாளர்களாக இருக்கின்றனர்.

திருநெல்வேலியில் கடந்த மார்ச் மாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். அதில் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மறுநாளே அந்தப் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகள் படிப்பதற்கும் தங்கும் விடுதிக்கும் இலவசமாக இடம் தருவதாக அறிவித்தார். தூத்துக்கடி ஜீசஸ் ரெடின்ஸ் அமைப்பினர் சென்னை சகோதரன் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான மதிய உணவை வழங்கிவருகின்றனர்.

received_821924441207885 திருநங்கை சுதா திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு

திருநங்கைகளின் பிரச்சினைகளைப் பேசுவதோடு அவர்கள் பொருளாதார ரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள் ஐ.டி.ஐ. அமைப்பினர்.

“ஏதாவது ஒரு கவுரவமான வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு திருநங்கைகளிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. இதிலும் சென்னைதான் முன்னணியில் இருக்கிறது. இரண்டு திருநங்கைகள் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக இருக்கிறார்கள். ஒரு திருநங்கை நர்ஸாக இருக்கிறார். இரண்டு பேர் கார்ப்பரேட் செக்டாரில் வேலை பார்க்கின்றனர். ஐந்து பேர்வரை காய்கறி வியாபாரம் செய்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவுரவித்து, அவர்களுக்குப் பணி வழங்கியவர்களையும் பாராட்டுகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பலர் திருநங்கைகளைத் தங்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்துவார்கள் என்னும் நோக்கத்தில்தான் இந்தக் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சென்ற ஆண்டு நடத்திய நிகழ்ச்சியின் வழியாக 25 பேர்வரை வேலை பெற்றிருக்கின்றனர். தற்போது நடத்தியிருக்கும் இந்த விழாவின் மூலம் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சுதா.

அதேநேரம் தமிழக அரசு திருநங்கைகள் எண்ணிக்கை தொடர்பான முழுமையான கணக்கெடுப்பை இன்னும் எடுக்கவில்லை என்று வருந்துகிறார் சுதா.

தேவை சமூக நீதி

நீதித் துறை சார்ந்த பணிகளிலும் திருநங்கைகளைக் கால்பதிக்கவைத்திருக்கிறார்கள் இந்த அமைப்பினர். லோக் அதாலத்தில் சமூகப் பணி செய்பவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கலாம். இந்த அடிப்படையில் மதுரையில் திருநங்கை ஒருவரை லோக் அதாலத் உறுப்பினராக்கி இருக்கிறார்கள். இதை முன்மாதிரியாகக் கொண்டு சென்னை உட்பட எல்லா மாவட்டங்களிலும் லோக் அதாலத்தில் திருநங்கை ஒருவரை உறுப்பினராக்குவதற்கு நீதியரசர் ரசீர் அகமதுவிடம் மனு அளித்துள்ளனர். அதோடு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மத்திய அரசின் திருநங்கைகள் குறித்த சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் மனு அளித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x