Published : 03 Dec 2017 12:27 PM
Last Updated : 03 Dec 2017 12:27 PM
ப
ருவநிலை மாற்றம் தொடர்பான 23-வது உலகளாவிய மாநாடு, ஜெர்மனி நாட்டில் உள்ள பான் (Bonn) நகரத்தில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவு ஒன்றும் புதிதல்ல. 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், அப்போதைய பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைத்து, புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தியா உட்பட பல நாடுகள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டன. ஆனால், சில மாதங்களுக்கு முன், இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ‘எங்களால் பசுங்குடில் வாயுக்களைக் குறைக்க முடியாது, குறைக்க மாட்டோம்’ என்பதுதான் அதன் அர்த்தம். பாரிஸ் மாநாட்டின்போது எடுக்கப்பட்ட முடிவை எப்படியாவது சாத்தியப்படுத்த வேண்டும் என்று இந்த பான் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவைச் சாத்தியப்படுத்த முடியுமா என்பது வேறு விஷயம். ஆனால், அந்த முடிவைச் சாத்தியமாக்குவதற்குப் பல நாடுகளும் முயன்றுவருகின்றன. முக்கியமாக, தீவுகளாக உள்ள நாடுகள். அதில் ஒன்றுதான் பபுவா நியூ கினி. பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்தத் தீவுக்குப் பாதுகாவலராக இருக்கிறார் உருசுலா ரக்கோவா.
உலகுக்குச் சொல்லும் கடமை
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கார்டெரெட் தீவுகளில் பிறந்தவர், உருசுலா ரக்கோவா. தற்போது பபுவா நியூ கினியில் வாழ்ந்துவருகிறார். சிறு வயதில் கடலில் நீந்தி விளையாடியவருக்கு, அந்தக் கடலே தங்களை அழிக்கப் போகிறது எனும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மனிதச் செயல்பாடுகள் காரணமாக வெளியாகும் கரியமில வாயு, மீதேன், குளோரோ ஃப்ளூரோ கார்பன் போன்ற பசுங்குடில் வாயுக்களால் பூமி சூடாகிறது. இதன் காரணமாக, துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. அவ்வாறு உருகும் நீர் கடலில் கலந்து, கடல்மட்டம் உயர்கிறது. இந்த நீர்மட்ட உயர்வால், பல நிலப் பகுதிகள் மூழ்கடிக்கப்படுகின்றன. பபுவா நியூ கினியும் இதற்குத் தப்பவில்லை.
“அங்கு 6 தீவுகள் இருந்தன. இப்போது அது 7 தீவுகளாக மாறியுள்ளது. அதாவது, கடல், பெரும்பகுதி நிலத்தை மூழ்கடித்துவிட்டது துண்டுதுண்டாக்கிவிட்டது” என்கிறார் உருசுலா. நம்மில் பலருக்குப் பருவநிலை மாற்றம் என்பது வெறும் செய்தியாகவே உள்ளது. ஆனால், பபுவா நியூ கினி போன்ற தீவு நாட்டு மக்களுக்கு, அன்றாட வாழ்க்கையே சவாலாகிவிட்டது.
இந்த விஷயங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல, 2006-ம் ஆண்டு ‘துலேல் பெய்ஸா’ எனும் அமைப்பைத் தொடங்கினார் உருசுலா. அந்தப் பெயருக்கான அர்த்தம், ‘புயலை எதிர்த்துப் பயணித்தல்’!
வல்லரசுகள் செய்யும் துரோகம்
உலக மக்கள்தொகையில் பூர்வகுடி இனங்களைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதத்தினர்தான். அவர்களில் பெரும்பாலோர் தீவு நாடுகளில்தான் வாழ்கிறார்கள். உயரும் கடல் மட்டத்தால், அவர்கள் தங்களின் பூர்விகத்தை விட்டு, வேறு இடங்களுக்குப் புலம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இவர்களைத்தான் ‘சூழலியல் அகதிகள்’ என்கிறார்கள் சமூகவியலாளர்கள். பபுவா நியூ கினியிலேயே சுமார் 2,700 பேர், தங்களின் பூர்விகத்தைவிட்டு, கடல் நீர் தங்கள் வீடுகளுக்குள் புகாத அளவுள்ள உயர்ந்த நிலப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
அந்தத் தீவுகளில் வளரும் முக்கியமான உணவுப் பொருள் ‘ஸ்வாம்ப் தரோ’. நமக்கு அரிசியைப் போல, உருசுலா வாழும் தீவுகளில் உள்ள மக்களுக்கு இதுதான் உணவு. ஆனால், கடல் நீர் இவர்களின் வயல்களில் புகுந்துவிடுவதால், நிலம் உவர்தன்மையடைந்துவிட்டது. தற்போது, இதர நாடுகள் வழங்கும் அரிசிக்கு அந்த மக்கள் பழக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
“நாங்கள் எங்கள் ஊரில் கார் ஓட்டுவதில்லை. எங்களுக்கு இன்னும் மின்சார வசதிகூட இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் கொண்டிருக்கும் பணக்கார நாடுகள், பூமி சூடாவதற்குக் காரணமாக இருக்கின்றன. அவர்களின் அன்றாடச் செயல்பாடுகள் எங்கள் வாழ்க்கையையே பாதிக்கின்றன” என்கிறார் உருசுலா.
புள்ளி விவரங்கள் அல்ல
பருவநிலை மாற்றத்தால் பபுவா நியூ கினி பாதிப்படைவதற்கு, ஆஸ்திரேலியா ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. காரணம், பசிபிக் பகுதியில், அந்த நாடுதான் மிக அதிக பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுகிறது. எனவே, அப்படிப்பட்ட பொருளாதார வல்லரசு நாடுகள், பபுவா நியூ கினி போன்ற தீவுகளுக்குப் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவ வேண்டும் என்பது பல காலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கை. ஆனால், வல்லரசுகள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
“பருவநிலை மாற்றம் என்பது புள்ளிவிவரங்கள் மட்டுமே அல்ல. அது மனித உரிமை தொடர்பானதும்கூட!” என்கிறார் உருசுலா. 2006-ம் ஆண்டு, கார்டெரெட் தீவுகள் பெருமளவு கடலில் மூழ்கின. அப்போது, அங்கிருந்த மக்களைப் படகில் அழைத்துச் சென்று, போகன்வில் எனும் பகுதியில் மீள்குடியேறச் செய்தார்.
அந்த மக்களின் மறுவாழ்வுக்காக 2015-ம் ஆண்டு ‘போகன்வில் கொகோவா நெட் லிமிட்டெட்’ எனும் காபி விதைச் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை அவர் தொடங்கினார். அந்தப் பகுதியில் காபி விதைகள்தாம் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே, அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த நிறுவனத்தை உருசுலா தொடங்கினார்.
“நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். முக்கியமாக, சுயசார்புடன் வாழ நினைக்கிறோம். எங்கும் எப்போதும் எங்கள் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் நீடித்த ஒரு வாழ்க்கையை வாழ ஏங்குகிறோம். ஆனால், கடல் எங்களை விடுவதாக இல்லை!” என்கிறார் உருசுலா. தன்னுடைய பணிகளுக்காக பல சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும் இவர், பருவநிலை மாற்றத்தின் சாட்சியமாக விளங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT