Published : 31 Dec 2017 11:36 AM
Last Updated : 31 Dec 2017 11:36 AM

முகம்நூறு: நாற்காலிக்குள் முடங்காத நாயகி

 

னியார் வங்கியின் துணைத் தலைவர், தேசிய நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர், இந்திய வீல்சேர் கூடைப்பந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனப் பன்முக அடையாளங்களுடன் வலம்வரும் மாதவி லதா, மாற்றுத் திறனாளி.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாதுபள்ளி கிராமத்தில் பிறந்த இவர், ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது, போலியோவால் பாதிக்கப்பட்டார். இடுப்பின் கீழ்ப் பகுதி முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துபோனது. மாதவி தன் முதல் அடியைக்கூடச் சக்கர நாற்காலியுடன்தான் தொடங்கினார். ஆனால், அவரது அடுத்தகட்ட நகர்வுகள் அனைத்தும் புலியின் பாய்ச்சல்போல் அதிவேகமாக இருந்தன.

சுமையை மறக்கச் செய்த உறவுகள்

மாதவி லதாவுடைய தந்தை, பள்ளித் தலைமை ஆசிரியர். வீட்டின் கடைக்குட்டியான மாதவிக்கு உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். மற்ற குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதுபோல் மாதவியையும் அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். “நான் உடலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் என்னை உள்ளத்தால் பலமான மனுஷியாக உணரவைத்தவர்கள் என் குடும்பத்தினரும் நண்பர்களும்தான். நடக்க முடியாத என்னை மற்ற குழந்தைகளைப் போல் படிக்கவைத்தார்கள். எந்த விளையாட்டு என்றாலும் நான் இல்லாமல் அதை நடத்த மாட்டார்கள் என் நண்பர்கள். ஓட்டப்பந்தயத்தில்கூட என்னைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள் அவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் என்னைச் சுமையாகக் கருதாத மனிதர்கள் மத்தியில் வளர்ந்ததுதான் நான் தன்னம்பிக்கையுடன் வளர உதவியாக இருந்தது” என உணர்வுபூர்வமாகச் சொல்கிறார் அவர்.

தடைகளைத் தாண்டிய பயணம்

நம் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படைத் தேவைகள் தற்போதுவரை போதுமான அளவில் செய்துகொடுக்கப்படவில்லை. பேருந்து நிறுத்தங்கள், ரயில் நடைமேடைகள், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவை இன்னும்கூட மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இல்லை. இதுபோன்ற அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தாத நிலையில் தினமும் பள்ளிக்குச் சென்றுவருவது மாதவிக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் இருந்தபடியே தனியாக ஆசிரியர் வைத்து படித்துள்ளார். எம்.பி.ஏ. படிப்புடன் நீதித் துறையிலும் பட்டம் பெற்றுள்ளார் அவர். கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாதவி, வங்கிப் பணியில் சேர்வதற்கான படிப்புகளையும் படித்துள்ளார்.

போராடிப் பெற்ற பணி

வங்கித் தேர்வில் இவர் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம்காட்டி அந்தப் பணிக்குத் தகுதியில்லாதவர் என்று தவறான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாதவி, தான் அந்தப் பணிக்குத் தகுதியானவர் என முறையான மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிருபித்தார். அதன் பின்னர், சுமார் 15 ஆண்டுகள் ஹைதராபாத் வங்கியில் பணிபுரிந்தார்.

சாதனைக்கு வித்திட்ட சிகிச்சை

பின்னர், சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் தலைமை மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். இதனிடையே மாதவியின் முதுகுத் தண்டு பகுதியில் அதிக வலி ஏற்பட்டு அவருக்கு பெரிய பிரச்சினையைத் தந்தது. பரிசோதனை செய்து பார்த்ததில் போலியோ நோயின் பிந்தைய தாக்கத்தால் (Post Polio Attack) அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நீண்ட காலம் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதால் முதுகுத்தண்டிலும் நுரையீரலிலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது இத்தனை ஆண்டுகள் அசைக்காமல் இருந்த அவரது கால்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும் என்பதுதான். அதைச் செயல்படுத்துவதற்காக நீர் சிகிச்சையைப் பரிந்துரைத்தார்கள்.

“முதன்முறையாகத் தண்ணீருக்குள் இறங்கியபோது, என் கால்கள் பறவையின் சிறகு போல் மிக லகுவாக இருந்ததை உணர்ந்தேன். என்னால் தண்ணீருக்குள் கால்களை நன்றாக அசைக்க முடிந்தது. இதையடுத்து தைரியமாக நீச்சல் பழகினேன். ஒரு நாள் அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில் தேசிய அளவிலான நீச்சல் போட்டியின் அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. என்னால் மற்ற போட்டியாளர்களைப் போல் நீந்த முடியுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் தைரியமாக அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடிவுசெய்தேன்” என்று சொல்லும் மாதவி, அந்தப் போட்டியில் வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு நாற்பது வயது! போட்டிக்கான நேரம் முடிந்தும் நீச்சல் குளத்திலேயே வெகுநேரம் அவர் நீந்திக்கொண்டிருந்தாராம். அதன் பிறகு, தேசிய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் உட்படப் பல பரிசுகளை மாதவி பெற்றுள்ளார்.

நாம் வெல்வோம்

தன்னைப் போலவே மற்ற மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக ‘yes we too can’ (ஆம் நாமும் வெல்வோம்) என்ற அமைப்பை நடத்திவருகிறார் அவர். விளையாட்டில் ஆர்வமாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நீச்சல் குளம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவதில் முனைப்புடன் இருக்கிறார்.

“சிலர் எனக்கு நல்ல வேலை கிடைத்திருப்பதால்தான் என்னால் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடிந்துள்ளது என நினைக்கிறார்கள். தங்கள் மாற்றுத் திறனாளி பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தத் தயங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு நான் கடந்துவந்த பாதை தெரியாது. அதற்காகதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். என்னைப் போல் பாதிக்கப்பட்ட பல மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து அவர்களது திறமையை வெளிக்கொண்டுவர என்னால் ஆன முயற்சிகளைச் செய்துவருகிறேன்” எனத் தன்னம்பிக்கை மிளிரச் சொல்கிறார் மாதவி லதா.

படம்: ஆர்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x