Published : 19 Nov 2017 11:44 AM
Last Updated : 19 Nov 2017 11:44 AM
நவம்பர் 19 இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாள்
செல்வச்செழிப்பும் மேற்கத்திய நாகரிகமும் நிறைந்த மோதிலால் நேருவின் இல்லமான 42 அறைகள் கொண்ட ஆனந்தபவன் மாடியில் விலை உயர்ந்த, மேற்கத்திய உடைகள், இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமானங்கள், இன்னபிற ஆடம்பரப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க காந்தி நாட்டுமக்களுக்கு விடுத்த அறை கூவலையொட்டி ஆனந்தபவனில் அரங்கேறிய இந்தக் காட்சியே சிறு குழந்தையான இந்திரா (இந்து) அறிந்துகொண்ட முதல் அரசியல் நிகழ்வு.
12 வயதுப் போராளி
1921-ல் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் அமர்ந்துகொண்டு, அலகாபாத் நீதிமன்ற நடவடவடிக்கைகளைக் கவனிக்க முயன்றுகொண்டிருந்தார் நான்கு வயது இந்து. அதன் இறுதியில் தாத்தாவுக்கும் தந்தைக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அதுவே அவருக்குப் பழகிவிட்டது. ஒருகட்டத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் இந்திரா, “வீட்டில் எல்லோரும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க” என்று பெருமிதத்தோடு சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.
நாட்டுக்காக ஒரு குடும்பமே சிறைச்சாலைக்குச் செல்வது பெருமைதான். ஆனால் சிறுமி இந்திராவின் வாழ்வில் நேரு குடும்பத்தின் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். அன்புசெலுத்த, அருகிலிருந்து கவனித்துக்கொள்ள, குடும்பத்தினர் யாரும் இல்லாத சூழல் அந்தச் சிறுமியின் வாழ்வில் தீராத தனிமையையும் மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தியது. அதுவே அவரை இறுக்கமானவராகவும் மாற்றிவிட்டது. இதன் தாக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
ஐந்து வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள சிறார்களைக் கொண்டு தானே உருவாக்கிய ‘வானர சேனை’யோடு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் இந்திரா. அப்பொழுது அவருக்கு 12 வயது! கடிதங்கள், ரகசிய ஆவணங்களைக் காவல்துறையின் அடக்குமுறையை மீறி தலைவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, தடியடியில் காயம்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது என்று நீண்டது ‘வானர சேனை’யின் பணி.
உறுதிமிக்க காதல்
இந்திரா ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு பயின்றபோது, பெரோஸ் காந்தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்சில் மாணவராயிருந்தார். அதற்கு முன்பே ஓர் இளம் சுதந்திரப் போராட்ட வீரராகவும், உடல்நலமற்ற கமலா நேருவின் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட தனக்கு, அக்கறையோடு உதவியவராகவும் இந்திரா அவரை அறிந்தே இருந்தார். பிறகு இந்த அறிமுகம் காதலானது. 24 வயது இந்திரா, பெரோஸ்காந்தியைத் திருமணம் செய்ய விரும்புவதாகத் தந்தையிடம் தெரிவித்தார். பெரோஸ் பார்சி மதத்தைச் சேர்ந்தவர், இந்திரா இந்து மதத்தைச் சேர்ந்தவர். நவீன சிந்தனைகொண்ட நேரு இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடியவர் அல்லர். ஆனால் தன் அன்பு மகள் இன்னும் நிதானமாகத் தனது துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்திராவின் உறுதியால் தந்தை இறங்கிவந்தார். ஆனால் நாட்டின் பல இடங்களில் இருந்தும் இந்தக் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு வந்தது. காந்திக்கும், நேருவுக்கும் எதிர்ப்புக் கடிதங்கள் குவிந்தன. இந்திரா அசைந்துகொடுக்கவில்லை. இறுதியில் காந்தி தலையிட்டு, அனைவரையும் அமைதிப்படுத்தி திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார். மார்ச் 26, 1942-ல் திருமணம் நடந்தது. அடுத்த ஆறே மாதத்தில் இந்திரா காந்தியும் பெரோஸ் காந்தியும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஓராண்டு சிறை சென்றனர்.
தேடிவந்த பொறுப்புகளும் பதவிகளும்
இந்தியா விடுதலை அடைந்ததும் பிரதமர் நேருவின் வீட்டு நிர்வாகம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை மற்றும் உள்நாட்டு மதக் கலவரத்தில் அகதிகளானவர்களுக்கு காந்தியோடு சேர்ந்து பணியாற்றுதல், தனது தந்தையோடு வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்திரா ஏற்கவேண்டியிருந்தது. இது அவருக்கு அரசியல், வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திரம் தொடர்பான பயிற்சியாக அமைந்தது. அதீத கடமையுணர்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் இந்திரா அவற்றில் ஈடுபட்டார்.
நேரு மரணமடைந்தபோது, ஆனந்த பவனம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. குடியிருக்க வீடுகூட இல்லாத நிலையில்தான் நேரு இந்திராவை விட்டுச் சென்றிருந்தார். நேருவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவர்களின் வற்புறுத்தலால் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரானார். பிறகு நடந்தது வரலாறு!
பொதுத்தேர்தலுக்கு 13 மாதங்களே இருந்த நிலையில் சாஸ்திரியின் எதிர்பாராத மரணம் நிகழ்ந்தது. காமராஜர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டு இந்திரா காந்தியின் பெயரை முன்மொழிந்தார். மக்கள் செல்வாக்கு மிகுந்த நேருவுக்குப் பிறகு, நாடு முழுவதும் இந்திராவே எளிய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். ஜனவரி 19, 1966-ல் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து பதவியேற்க ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இந்திரா காந்தி மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்ல நெடுநேரமானது.
மூன்றாண்டுகளில் சீனா, பாகிஸ்தான் என இரண்டு போர்கள், நேரு, சாஸ்திரி இருபெரும் தலைவர்களின் மரணம், மழையின்மை, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, உலக சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத சூழல், தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என்று மிகவும் நெருக்கடியான, சவால்கள் மிகுந்த சூழ்நிலையிலேயே இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் சாதனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.
அவசர நிலைப் பிரகடனம் அவரது வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிற தைரியமும் இந்திராவுக்கு இருந்தது. தேர்தலில் தோல்விக்குப் பிறகும் மூன்றே ஆண்டுகளில் இந்திரா காந்தியால் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடிந்தது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 374 இடங்களில் மகத்தான வெற்றியடைந்தது.
உயிரினும் மேலான கொள்கை
1984-ல் பஞ்சாபில் பொற்கோயில் வளாகத்துக்குள் புகுந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க ஆபரேஷன் புளூ ஸ்டார் உத்தரவில் கையெழுத்திடும்போதே, தனது மரண சாசனத்தில் கையெழுத்திடுகிறோம் என்பதை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது, ஆபரேஷன் புளூ ஸ்டார் வெற்றியடைந்தது.
இதைத் தொடர்ந்து இந்திராவின் சீக்கியப் பாதுகாவலர்களால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரித்தது. உயிரையே இழக்க நேர்ந்தாலும் மதத்தின் அடிப்படையில் தனது பாதுகாவலர்களை மாற்ற இந்திராகாந்தி மறுத்துவிட்டார். மாறாக தனது மரணத்தை வரவேற்கக் காத்திருந்தார். மரணத்துக்கு முந்தைய இரவு ஒடிசாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, “எனது வாழ்வு இந்த நாட்டின் சேவையில் முடியுமானால் நான் கவலைப்பட மாட்டேன். இன்று நான் மரணமடைந்துவிட்டால் என் ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இந்தத் தேசத்தை வலிமைப்படுத்தும்” என்றார்.
மறுநாள் பிரகாசமான இலையுதிர்கால காலைப்பொழுதில் இந்திரா காந்தி மிகவும் நம்பிய பாதுகாவலர்கள் ப்யாந்த் சிங், சட்வந்த் சிங் இருவரின் துப்பாக்கிகளிலிருந்து 33 குண்டுகள் இந்திராகாந்தியின் உடலைத் துளைத்தன. இந்தியாவின் இரும்புப் பெண்மணி, வலிமையான பிரதமர் மதச்சார்பின்மைக்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார். உயிரைவிட கொள்கை முக்கியம் என்பதை நிரூபித்தார். ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு படிக்கச் சென்று, முடிக்காமல் தந்தையை கவனித்துக்கொள்ள பாதியில் திரும்பிவந்த இந்திரா, தானே ஒரு வரலாறானார்!
-கட்டுரையாளர், செய்தித் தொடர்பாளர், தமிழக காங்கிரஸ் கமிட்டி
தொடர்புக்கு: jothimani102@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT