Published : 13 Aug 2023 08:23 AM
Last Updated : 13 Aug 2023 08:23 AM
பெரும்பாலான வீடுகளில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததுமே அதுவரை இருந்த உபசரிப்பும் கவனிப்பும் முற்றிலும் மறைந்துவிடுகின்றன. குழந்தைக்கு நல்லது செய்வதாக நினைத்து மருத்துவர்களின் ஆலோசனையின்றித் தாங்களாகவே பல்வேறு கைமருந்துகளைத் தாய்க்குக் கொடுக்கும் பழக்கம் தவறு. குழந்தை பிறந்த ஆறு மாதத்துக்குத் தாய்ப்பாலே போதும். தாய்ப்பால் பற்றாக்குறை இருக்கும் தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றுப்பால் தரலாம். குழந்தை போஷாக்குடன் இருக்க வேண்டும் என்பதற்காக பவுடர் பாலைக் கொடுப்பதும் தவறு.
ஒவ்வொரு தாயின் உடல்வாகும் பிரசவ அனுபவமும் ஒவ்வொரு விதமாக அமையும். குழந்தையின் எடையும் செயல்களும் அப்படித்தான். ஆனால், பலரும் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, தாயைக் குறைசொல்வது தவறு. இது தாய்க்குப் பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சில நேரம் அதன் பாதிப்பு தீவிரமடையவும் கூடும்.
பச்சிளங்குழந்தை அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், எதற்கெடுத்தாலும் அது பசிக்குத்தான் அழுகிறது என்று சொல்லி கட்டாயப்படுத்திப் பாலூட்டச் சொல்வதும் தாயின் மனதைப் பாதிக்கக்கூடும். மகிழ்ச்சியான சூழலில் அமைதியான மனநிலையில் பாலூட்டுவதுதான் தாய் - சேய் இருவருக்கும் நல்லது.
தாயின் மார்பகக்காம்புகளும் ஆளுக்கேற்ப மாறும். மார்பகக் காம்பில் 30 விநாடிகளுக்கு மேல் வலித்தால் அதில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். அதற்குச் சிகிச்சை அளிக்காமல் தொடர்ச்சியாகப் பாலூட்டுவதால் அங்கே ரத்தம் கசிந்து, குழந்தைக்குப் பாலூட்ட முடியாத நிலைகூட ஏற்படலாம். இதை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பிரச்சினையைத் தீவிரமாக்கிக் கொள்ளும் பெண்களும் உண்டு. தயக்கம் ஏதுமின்றி மகப்பேறு மருத்துவரை அணுகித் தீர்வு காண்பதே நல்லது.
குழந்தை உருவானதுடன் தந்தையின் கடமை முடிந்து விடுவதில்லை. குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் சரிபாதி பங்கு உண்டு. வேலைக்குச் செல்லும் தாய்மார்களாக இருந்தால் தாய்ப்பாலைச் சேகரித்து வைக்கும் உபகரணத்தின் மூலம் தாய்ப்பாலை எடுத்து வைக்க உதவலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால் தாய்மார்களால் தங்கள் குழந்தைக்குப் பாலூட்டும் காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமையும்.
- ஏ. சாந்தி பிரபு, தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT