Published : 29 Oct 2017 12:34 PM
Last Updated : 29 Oct 2017 12:34 PM

பார்வை: பெண் ஏன் அழகாக இருக்க வேண்டும்?

டெங்கு மரணங்கள், கந்துவட்டி உயிர்ப்பலிகள், கருத்துச் சுதந்திரம் இவற்றைத் தாண்டி சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகப் பெண்களின் ‘அழகு’ம் சேர்ந்துவிட்டது. சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் மட்டுமே பேசப்பட்ட விஷயத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா என்று தோன்றலாம். இதுபோன்ற விவாதங்கள் நடக்குமிடங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவர்களின் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

எது அழகு என்பதில் தொடங்கி, அழகு குறித்த புரிதலின் அடிப்படையிலேயே அழகு அமைகிறது என்பதுவரை பல்வேறு கருத்துக்களை ஆண், பெண் இருதரப்பிலும் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இரு மாநிலப் பெண்களின் அழகை ஒப்பிட்டு விவாத நிகழ்ச்சி நடத்துவதற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவிக்க, அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி சார்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில் பங்கேற்ற அதன் தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்களும் (அவர்கள் ஆண்கள்) மற்றொரு ஆணும் தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தை முன்வைத்த பெண்களை மட்டம்தட்டிப் பேசியதுடன் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். மாற்று விவாதத்தைத் தூண்டுவதாகக் கருதப்படக்கூடிய நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்களே பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைப் பகிரங்கமாகச் சொன்னது, அந்த நிகழ்ச்சி தயாரிப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

என்றைக்குமே ஒரு பெண் கேள்வி கேட்பதைச் சமூகத்தால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. அதுவும் ஆணை நோக்கிக் கேள்வி எழுப்பப் பெண்ணுக்கு எப்போதும் உரிமை மறுக்கப்படுகிறது. சமூகம் எதைச் சொன்னாலும் அதை வார்த்தை மாறாமல் ஏற்றுக்கொள்வதால்தான் பெண்மை இங்கே மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கும்போது, பெண் தன் ‘பெருமித’த்தை இழந்துவிடுகிறாள்! அதுதான் அந்த நிகழ்ச்சி இயக்குநரின் பார்வையிலும் எதிரொலித்தது.

அழகு குறித்த அலசல்களுக்கு இடையே பெண்ணியவாதிகள் எப்படி இருக்க வேண்டும், இடதுசாரி பெண்ணியவாதிகளாக இருந்தால் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் மொட்டையடித்துக்கொண்டு அழகை சப்பையாக்கிக் கொள்கிறார்களா என்பது போன்ற வலியவந்து அறிவுரை சொல்லும் போக்கையும் கருத்துகளை வாரியிறைக்கும் தன்மையையும் பார்க்க முடிகிறது.

மென்மைதான் பெண்மையா?

பெண்கள் இப்படி இருப்பதுதான் அழகு என்று சொல்லப்படும் வரையறை இன்று, நேற்று முடிவானதல்ல. வரலாறு பதிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அந்த வரையறைகளும் இலக்கணங்களும் தொடங்கிவிட்டன. வில் புருவமும் கயல் கண்களும் மெல்லிடையும் செவ்விதழ்களும் சங்குக் கழுத்தும் இன்னபிற லட்சணங்களும் பொருந்திய பெண்களே அழகு என்கிற எல்லைக்குள் கால்வைக்க முடியும். புராண காலமும் சங்க காலமும் முடிந்து அடுத்துவந்த தலைமுறையினர் தங்கள் பங்குக்கு இந்த லட்சணங்களில் சிலவற்றைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய, பெண்ணுக்கான அழகு விதிகள் காலம்தோறும் மாற்றியமைக்கப்பட்டும் நவீனமயப்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் எல்லாக் காலங்களிலும் நிறமும் மென்மையும் வாளிப்பான உடலுமே பெண்மையின் முக்கிய அடையாளங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.

எப்படி எல்லாப் பெண்களாலும் எப்போதும் இந்த இலக்கணப்படி வாழ முடியும்? நிறமும் அவய அமைப்புகளும் வழிவழியாக வருபவை. அதில் நாமே விரும்பித் தேர்ந்தெடுக்கவோ மாற்றியமைக்கவோ என்ன இருக்கிறது? எதையும் அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதுதானே இயற்கை? ஆனால், பெண்கள் விஷயத்தில் அது நடப்பதேயில்லை. எப்போதும் ஒப்பீடு இருந்தபடியேதான் இருக்கிறது. ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டிய, நுகர வேண்டிய ஒரு பண்டமாகவே பெண்கள் பெரும்பாலும் கருதப்படுவதே இதற்கு அடிப்படை.

அலங்காரச் சிறை

பெண், ஆண் யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்த உடல்வாகும் தோற்றமும் உண்டு. அவற்றில் இது அழகென்றும் இது அசிங்கம் என்றும் எதையும் வகைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. அதேநேரம், புறத்தோற்றத்துக்காக ஒரு ஆண் கவலைப்படும் தருணங்கள் மிகக் குறைவு. பெண்ணோ எப்போதும் தன் புறத்தோற்றம் குறித்த நினைப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள். சிறுவர்களின் அலங்காரம் கால்சட்டை, மேல்சட்டையோடு முடிந்துவிடுகிறது.

சிறுமிகளுக்கோ உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால்வரை நீள்கிறது. அப்படி அலங்கரித்துக்கொள்வதுதான் லட்சணம் என்று குழந்தைப் பருவம் முதலே பெண்களின் மனதில் திணிக்கப்படுகிறது. எப்போதும் தன்னைக் காட்சிப்பொருளாக்கிக்கொள்ள வேண்டும், பிறர் பார்க்கும்படி நாம் தோன்ற வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் பெண்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இந்தப் பின்னணியில் இருந்துதான் அழகு சார்ந்த அனைத்தையும் நாம் அணுக வேண்டும்.

நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் தமிழாசிரியை எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் எதற்காக பூ வைத்துக்கொள்கிறீர்கள்?” என்கிற அவரது கேள்விக்கு, “வாசனைக்காக” என்று சொன்னோம். “சரி, வாசனையே இல்லாத கனகாம்பரத்தை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். நாங்கள், “அழகுக்காக” என்று சொன்னோம். “சரி, உங்கள் தலையில் இருக்கிற பூவை நீங்கள் பார்க்கப் போவதில்லை. பிறகு ஏன் அதை வைத்துக்கொள்கிறீர்கள்?” என்ற ஆசிரியரின் கேள்வி அப்போது எங்களுக்குப் புரியவேயில்லை.

அவரே, “பிறர் பார்க்கத்தானே பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்?” என்று சிரித்தபடியே கேட்டார். அப்போதுதான் ஆண்கள் ஏன் கூந்தல் வளர்ப்பதில்லை, அதில் ஏன் பூ வைத்துக்கொள்வதில்லை என்ற கேள்வி தோன்றியது. அதுவரை ஆண்கள் முடிவெட்டிக்கொள்வதும் பெண்கள் கூந்தல் வளர்ப்பதும்தான் இயற்கை என்று அறிந்துவைத்திருந்த எங்களுக்கு, வேறொரு பாதையைக் காட்டினார் எங்கள் தமிழாசிரியை.

விமர்சனம் என்னும் வன்றை

பெண்கள் கூந்தல் வளர்ப்பதும் தங்களை அலங்கரித்துக்கொள்வதும் அவர்கள் உரிமை என்று சிலர் சண்டைக்கு வரலாம். ஆனால், அப்படி அழகுக்கு அழகு சேர்ப்பது யாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதையும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். காரணம் அழகு அல்லது அழகுக்காகச் செய்துகொள்ளும் செயல்பாடுகளை மையமாக வைத்துதான் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள், மட்டம்தட்டப்படுகிறார்கள், அவமானத்துக்கு ஆளாகிறார்கள்.

தங்களைச் செயற்கை அழகுக்கு உட்படுத்த முடியாத பெண்களும் கறுப்பாக இருக்கும் பெண்களும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். “கறுப்பே அழகு என்று கம்பீரமாக நில்லுங்கள்” என்கிற சப்பைக்கட்டு இங்கே செல்லுபடியாவதில்லை. எத்தனை கம்பீரமாக நின்றாலும் கறுப்புக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்பும் அனைவரும் அறிந்ததே.

சிவப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணத்தில் தொடங்கி வேலைவாய்ப்புவரை முன்னுரிமை கிடைப்பதால்தான் இங்கே சிவப்பழகு சாதனங்கள் கோடிகளைக் குவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிப் பாடப் புத்தகத்தில் ‘வரதட்சிணையின் நன்மைகள்’ என்று தரப்பட்டிருக்கும் குறிப்புகளில், ‘கறுப்பாகவும் அழகில்லாமலும் இருக்கும் பெண்ணுக்குத் திருமணம் ஆவதற்கு வரதட்சிணை உதவுகிறது’ என்பதும் அடக்கம். மாணவர்களுக்கு இப்படிக் கற்றுத்தருகிற நிலையில்தான், நம் சமூகப் புரிதலும் அணுகுமுறையும் இருக்கிறது.

அதனால்தான் கொள்கை சார்ந்தும் கருத்து ரீதியாகவும் விமர்சிக்க வேண்டிய பெண்களை அவர்களது புறத்தோற்றம் சார்ந்து ஆண்கள் விமர்சிக்கிறார்கள். அதற்குச் சமீபத்திய உதாரணம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவரது நிறத்தையும் தோற்றத்தையும் வைத்துச் சொல்லப்படுகிறவை எல்லாமே கீழ்த்தரமானவை, கண்டிக்கத்தக்கவை.

அழகு அடையாளமல்ல

பெண்களிடம் எப்போதும் புறஅழகை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண் மனதின் அழுக்குச் சிந்தனைகளை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால் எப்படியிருந்தாலும் பெண்களின் இயல்புதான் அவர்களின் அடையாளம் என்பதைப் பெண்கள் நினைத்தால் உணர்த்திவிட முடியும். வயதுக்கு ஏற்ப, உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ப அனைவரின் உடலமைப்பும் புறத்தோற்றமும் மாறுவதுதான் இயற்கை.

கருநிறமும், குறைவான கூந்தலும், தெற்றுப்பல்லும், பிள்ளைப்பேறால் ஏற்பட்ட தழும்பும், சரிந்த வயிறும், நாற்பதைக் கடப்பதற்கு முன்பே தென்படும் நரைமுடிகளும், கண்ணின் கீழே நிரந்தரமாகிவிடும் கருவளையமும், மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் பருமனும், தோல் சுருக்கமும் இப்படி இன்னபிறவும் அசிங்கமும் அல்ல அடையாளமும் அல்ல.

அவற்றை மாற்றுவதற்கு மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்து என்ன ஆகப்போகிறது? அவை இயல்பு, இயற்கை, அதுதான் நாம் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணம் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப் போவதில்லை. எக்காலத்திலும் அழியாத தெளிவான சிந்தனையையும் தீர்க்கமான செயல்பாடுகளையும்விடவா இந்தப் புறத்தோற்றம் முக்கியம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x