Published : 05 Nov 2017 11:46 AM
Last Updated : 05 Nov 2017 11:46 AM
தே
வையில்லாதவை என நாம் ஒதுக்கும் பல பொருட்கள் இறுதியாகப் பழைய பேப்பர் கடைக்கோ குப்பைத் தொட்டிக்கோ சென்றுவிடுகின்றன. ஆனால், சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த ஷாலினி, இதுபோல் ஒதுக்கப்படும் பொருட்களை அழகான கைவினைப் பொருட்களாக மாற்றிவிடுகிறார்.
எல்லாமே பயனுள்ளவை
“பொதுவாக எல்லோருக்கும் வீட்டில் அலங்காரப் பொருட்களை வைத்திருக்கப் பிடிக்கும். இதற்காகவே சிலர் நிறைய செலவும் செய்வார்கள். ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி வைப்பதைவிட நமக்குப் பிடித்த பொருட்களை நாமே செய்யலாமே என்று தோன்றியது. அதன் பிறகு கைவினைப் பொருட்கள் செய்ய முயன்றேன்.
அதேநேரம் வீட்டில் தேவைப்படாது என ஒதுக்கிவைக்கும் நாளிதழ்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கார்ட் போர்டு போன்றவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினேன். இதனால் எந்தப் பொருளையும் தூக்கி எறிவதில்லை. ஒரு சிறு பொருள்கூட ஏதோ ஒரு கைவினைப் பொருள் செய்ய உதவும் என எடுத்து வைக்கிறேன். தேவையில்லாதது என எதுவுமில்லை” என்கிறார் ஷாலினி.
இணையம் செய்த உதவி
தேவையில்லாத பொருட்களைக்கொண்டு கைவினைப் பொருட்களைச் செய்வதை ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் வாயிலாகக் கற்றுக்கொண்டிருக்கிறார் ஷாலினி. “தினமும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் வலைத்தளங்களை ஆராய்ந்து கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அப்படித்தான் எனக்குக் கைவினைப் பொருட்கள் செய்ய உத்வேகம் கிடைத்தது” என்கிறார் ஷாலினி.
பழைய பொம்மைகளை வைத்துச் செய்யப்பட்ட நீரூற்று, காகிதத்தால் செய்யப்பட்ட பேனா ஸ்டாண்ட், பிளாஸ்டிக் பாட்டில்களில் செய்யப்பட்ட இதய வடிவ அலங்காரப் பொருள் என இவர் கைவண்ணத்தில் பல பழைய பொருட்கள் புதிய வடிவத்தில் அழகாகக் காட்சி தருகின்றன.
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT