Last Updated : 19 Nov, 2017 11:35 AM

1  

Published : 19 Nov 2017 11:35 AM
Last Updated : 19 Nov 2017 11:35 AM

பெண்ணும் ஆணும் ஒண்ணு 29: தனியொரு பெண்ணுக்கு இடமுண்டா?

சிறு வயதிலிருந்தே ஓர் ஆணின் நிழலிலேயே பெண் வாழ்கிறாள். இந்த நியதியை ஏற்றுக்கொண்டு வாழும் பெண்களுக்கு எதிர்பாராத பல காரணங்களால் இந்த ஆதரவை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மணமுறிவு, கணவனால் கைவிடப்படுவது, கணவன் இறந்துபோவது என்பது போன்ற சூழ்நிலையில் பெண் தன் நிலை குறித்த கேள்விகளை எதிர்கொள்கிறாள். ஒருவனின் மனைவியாக வாழ்வது துன்பமோ இன்பமோ எளிதானது. எந்தக் கேள்வியுமற்றது. ஆனால், அதிலிருந்து விடுபட்டுத் தனி மனுஷியாக ஒரு பெண்ணுக்கான இடம் என்னவாக இருக்கிறது?

மூடிக்கொள்ளும் கதவுகள்

விவாகரத்து என்பதே இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத சமுதாயத்தில் விவாகரத்தான பெண் எப்படி எதிர்கொள்ளப்படுவார்? ஓர் ஆணின் தோள்பட்டையில் ஒட்டிக்கொண்டுதான் ஒரு பெண் இங்கு மற்ற பெண்களுடன் பிரச்சினையில்லாமல் உறவாட முடியும். இந்தச் சமுதாயத்தில் ஓர் ஆண் எந்த நேரம் வேண்டுமானாலும் பிற பெண் மீது ஆசைப்படலாம். உறவுகொள்ளத் தீர்மானிக்கலாம். ஆனால், பெண்ணின் நிலை அதற்கு நேர்மாறானது. இது ஆணுக்குப் பாலியல் சுதந்திரத்தை வழங்கி, அதே சுதந்திரத்தைப் பெண்ணுக்கு மறுத்து நிற்கும் ஒரு சமுதாயம்.

இந்த உண்மை ஒவ்வொரு மனைவிக்கும் தெரியும். எனவே, மனைவிகள் ஓர் உள்ளார்ந்த அவதியிலேயே இருக்கிறார்கள். தன் கணவன் வேறொரு பெண்ணிடம் போய்விடுவாரோ என்கிற அச்சம் அவர்களுடைய குழந்தைகள் பெரியவர்களாகும்வரை கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களிடமும் குழந்தைகள் பெரியவர்களான பிறகும்கூட சில பெண்களிடமும் தொடர்ந்து நிலவுகிறது. உண்மையில் அவர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை ஓர் ஆணின் காவலின் கீழ் இல்லாத ஒரு பெண்ணுக்குத் திறந்துவிட மறுக்கிறார்கள். எனவேதான் விவாகரத்தான ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் வீட்டுக் கதவுகள் மட்டுமல்ல சமுதாயத்தின் பிற வீட்டுக் கதவுகளும் சேர்ந்தே மூடிக்கொள்கின்றன.

கணவன் வீட்டுக் கதவை திறக்கவோ மூடவோ நீதிமன்றம், சட்டம் இவையெல்லாம் இருக்கலாம். ஆனால், பிற வீட்டுக் கதவுகளுக்கு வெளியே அவள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவளாக நிற்கும்போது அவள் போய் முறையிட எந்த நீதிமன்றம் இங்கு இருக்கிறது?

அவளை மறுக்கவும் முடியாமல் முழுதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவளுடைய பெற்றோர் மட்டுமே எஞ்சி நிற்கிறார்கள். அவர்களது குணமும் நிலையும் பொறுத்து அந்தப் பெண்ணின் மீதி வாழ்நாட்கள் அமைகின்றன. பல இடங்களில் தன் மகள் கணவன் வீட்டில் வாழவில்லை என்பதாலேயே பெற்றோரது வாழ்க்கையேகூட முடங்கிப் போய்விடுகிறது. இந்த நிலைகளெல்லாம்கூட அவளுக்கு மறுமணம் அவசியம் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தக் கூடும். காரணம் தனியொரு பெண்ணுக்கான இடம் எதையும் இந்தச் சமுதாயம் இன்னும்கூட முழுமையாக ஏற்படுத்திவிடவில்லை. இந்த இடத்தை ஏற்படுத்துவதுதான் தான் பெற்ற கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இலக்கு என்பதைப் பெண்களும் இன்னும் உணரவில்லை.

ஆதிக்கத்தின் சூடு

கணவனை இழந்த பெண்களுக்கு விவாகரத்தானவர்களின் நிலையிலிருந்து பெரிய வேறுபாடு இல்லை. இவர்களைக் குறைந்தபட்சம் அனுதாபத்தோடு பார்க்கிறார்கள். அதில்கூடப் பல இடங்களில் கணவன் இறந்ததே மனைவியின் குற்றத்தால்தான் என்று நிரூபிக்கப் பாடுபடுபவர்கள் சிலர் இருந்துகொண்டே இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாகக் கணவன் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கில்லாத விதவை நிலை பெண்ணுக்கு மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

விதவை என்ற சொல்லுக்கு ஈடான ஆண்பாற் சொல் தமிழில் கிடையாது. விதவை என்கிற சொல்லை நமது மொழி வழக்கில் தடைசெய்ய வேண்டும். கணவனை இழந்த பெண்கள் தங்களை யாராவது விதவை என்று குறிப்பிட்டால் கோபத்தோடு அதை மறுக்க வேண்டும். ஊடகங்களில் இந்த மாற்றம் தொடங்கப்பட வேண்டும். ஆனால், நமது திரைப்படங்கள் நடைமுறையில் கைவிடப்பட்ட வெள்ளைச் சேலையை மாற்றவே பல ஆண்டுகள் ஆயின. இப்போதுதான் வெள்ளைச் சேலையை விட்டிருக்கிறார்கள். குங்குமம், மஞ்சள் என்பது போன்ற இன்னும் சில விஷயங்களை வைத்திருக்கிறார்கள்.

‘நான் பாடும் பாடல்’ என்கிற பழைய திரைப்படத்தில் நடிகை அம்பிகா ஒரு விதவையாக நடிப்பார். தன்னை நடிகர் சிவகுமார் காதலித்து மறுமணம் புரிய விரும்புகிறார் என்று தெரிந்ததும் அவர் குங்குமம் வைக்க விரும்பிய தனது நெற்றியில் சூடு வைத்துக்கொள்வார். அந்தச் சூடு, ஆணாதிக்கம் பெண்ணினத்தின் மீது வைத்த சூடு. இன்னும் சூடும் ஆறவில்லை. தடமும் அழியவில்லை.

‘கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்’என்றது தமிழ் மரபு. இதன் கொடூர வடிவம்தான் வடக்கில் சதியாக இருந்தது. இதிலிருந்து விடுதலை கேட்டுத்தான் இந்த மண்ணின் பெண் விடுதலைப் பயணமே தொடங்கியது. சிறுவயதிலேயே கணவனை இழந்து பூவை அகற்றியபோது தன் காலில் கதறிக்கொண்டு வந்து விழுந்த தன் தங்கை மகளைத் தூக்கி நிறுத்தி தானும் அழுத கணம்தான் பெண்களின் நிலை பற்றிப் பெரியார் சிந்திக்கத் தொடங்கிய தருணம். சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் கால திருமணங்களில் பெரும்பாலானவை கணவனை இழந்த பெண்களுக்கு நடந்த மறுமணங்களே. அவை மறுமணம் என்றுகூடப் பல இடங்களில் குறிப்பிடப்படவில்லை.

மறுமணத்தின் பரிமாணம்

கணவனை இழந்த பெண்களின் மறுமணம் வேறொரு பரிமாணமுடையது. அன்று நடந்த மறுமணங்களில் பெரும்பகுதி முதல் திருமணம் சிறுமிப் பருவத்தில் நடந்தது. ஆனால், இன்று நிலைமை வேறு. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. இன்றும்கூடக் கணவனை இழந்த பெண்களை மணக்கும் மனநிலை திராவிட அல்லது பொதுஉடைமை இயக்க இளைஞர்கள் மத்தியில்தான் பரவலாக உள்ளது.

பொதுமனநிலையாக அது இன்னும் உருவாகவில்லை. இந்த நூற்றாண்டில் பெண்கள் பெற்றிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளின் பலனை அவள் கணவனில்லாமல் வாழ முற்படும்போது எந்த அளவுக்கு அவை பயன்படுகின்றன என்ற விகிதத்தைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டியுள்ளது. கல்வியும் வேலைவாய்ப்பும் அந்த வகையில் பெண்களுக்குப் பேருதவி புரிகின்றன. படித்து, வேலைக்குப் போகும் பெண்ணை மீண்டும் ஏற்றுக்கொள்வதில் ஆணின் பெற்றோருக்குமே சற்று நிம்மதி கிடைக்கிறது. சில இடங்களில் வேலைக்குப் போகும் பெண், உற்றார் உறவினரின் சுரண்டலுக்கு ஆளாகிற நிலையும் ஏற்படத்தான் செய்கிறது.

குறுகிய பொதுவெளி

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவளுக்கென்று சமுதாயத்தின் பொதுவெளி மிகக் குறுகியதாகவோ இல்லாமலேயோ இருப்பதுதான். ஒரு பெண் தனித்து வீடு வாடகைக்கு எடுக்க முடியாது. சென்னை போன்ற இடங்களில் தனியாக ஒரு பெண் வீடு பார்க்கச் சென்றால் ஏற்படும் அனுபவங்கள் சொல்லத் தரமுடையவையல்ல. தனியாக உணவு விடுதிக்குச் செல்ல முடியாது. ஒரு விடுதியில் தங்க முடியாது. இந்த நாட்டின் அமைச்சர்களே, ‘தனியாக ஏன் ஒரு பெண் வர வேண்டும்?’ என்று கூச்சமே இல்லாமல் கேள்வி கேட்கிறார்கள்.

‘பொம்பிளைகிட்ட ஓட்டு மட்டும் தனியா வந்து போடணும்னு சொல்றீங்களே…’ என்று திருப்பிக் கேட்கும் வலுவுடன் பெண்கள் இல்லை. இந்த நிலையில் கணவனையே பிரிந்தாலும் ஆண் சமுதாயத்தின் தயவிலேயே பெண் வாழும்படி நேரிடுகிறது. இந்த நிலைகளில் ஒரு விடுதலையாக மறுமணமே நிற்கிறது. ஆனால், பெண் ஒரு பண்டமாகப் பார்க்கப்படுகிற பார்வையின் தொடர்ச்சி இருக்கும்வரை மறுமணம் என்பதும் சவாலானதாகவே தொடர்கிறது.

(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x