Last Updated : 05 Nov, 2017 11:40 AM

 

Published : 05 Nov 2017 11:40 AM
Last Updated : 05 Nov 2017 11:40 AM

வட்டத்துக்கு வெளியே: பொதுநலப் பணியாற்றும் திருநங்கைகள்

 

மா

ற்றுப் பாலினத்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்றும் அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இருந்தாலும் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறு விதமான புறக்கணிப்பையும் ஒடுக்குமுறையையும் சந்தித்துவருகின்றனர். சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தங்களால் ஆனதைச் சமூகத்துக்குச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் சில திருநங்கைகள் செயல்பட்டுவருகின்றனர்.

தூய்மையின் தூதுவர்கள்

சென்னை சூளைமேட்டில் செயல்படும் ‘சகோதரன்’ என்கிற அமைப்பின் மூலம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவர்களாகத் திருநங்கைகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்துத் தெரு நாடகம் மூலம் இதுவரை 90 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றில் கிடைத்த தொடர்பின் மூலம் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வீடுதோறும் கழிப்பறையின் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பு, ‘சகோதரன்’ அமைப்பின் ஒரு பிரிவான இந்திய திருநங்கைகள் அமைப்புக்குக் (Indian Transgender Initiative) கிடைத்திருக்கிறது.

05CHLRD_TG (2) சுதா

சகோதரன் அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாகத் திருநங்கைகள் பற்றி மக்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணத்தை மாற்றும் பணியைச் செய்துவருகிறது. அதே நேரத்தில் திருநங்கைகளைப் பொதுநலப் பணிகளில் ஈடுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதால், பெண் சிசுக் கொலை, சிறுவயதுத் திருமணம் ஆகியவற்றுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்டத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதையடுத்து மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஓர் அங்கமான வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டும் என்கிற திட்டம் குறித்த விழிப்புணர்வைத் தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.

“முதலில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான கிராமங்களைத் தேர்வு செய்தோம். பின்னர், விழிப்புணர்வு நிகழ்ச்சி சுவையாகவும் உயிரோட்டத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டோம். அதற்கேற்றவாறு பன்முகத் திறன் கொண்ட 10 திருநங்கைகளை நான்கு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்தோம். அவர்களுக்கு இரண்டு நாட்கள் தீவிர பயிற்சி அளித்தோம்” என்று கழிப்பறைகள் கட்டுவதற்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் பணியைத் தொடங்கியது பற்றி விளக்குகிறார் அந்த அமைப்பின் தலைவி சுதா.

விழிப்புணர்வு தந்த வசனங்கள்

அரியலூர் கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பறையாட்டமும் தெரு நாடகமும் நடத்தப்பட்டன. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாவிட்டால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவது, இளம் பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கச் செல்லும்போது ஏற்படும் சிரமங்கள், கருவுற்ற பெண்கள் பகல் நேரங்களில் மலம் கழிக்க முடியாமல் போவதால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை விளக்கி 40 நிமிட தெரு நாடகம் நடத்தினார்கள். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை நினைவுகூர்கிறார் சுதா.

கிராமியப் பாடல்களை நாடகத்தில் இணைத்து அதன் மூலம் சொல்ல வந்த செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். “எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. குழந்தைகளுக்காக ஏங்குபவர்கள் ஏராளம். எனவே, உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வீடுதோறும் கழிப்பறை கட்டுங்கள்” என்று திருநங்கைகள் உருக்கமாகப் பேசியது பெண்களை வெகுவாக ஈர்த்தது என்கிறார் சுதா.

வீட்டில் கழிப்பறை கட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும், எந்த அரசு அதிகாரியை அணுக வேண்டும், அதற்கு வழங்கப்படும் மானியம் எவ்வளவு (ரூ.12 ஆயிரம்), என்ன தகுதி இருக்க வேண்டும் எனக் கழிப்பறை கட்டுவதற்கான முக்கியமான தகவல்களை நாடக வசனங்களாக மக்களுக்குத் தெரியப்படுத்தியது நல்ல பலனைத் தந்ததாகச் சொல்கிறார் சுதா. ஒவ்வொரு கிராமத்திலும், “என் வீட்டில் கழிப்பறை இல்லை. என் குழந்தைகள் நலனுக்காக உடனே கழிப்பறை கட்டுவேன்” என்று கிராம மக்கள் உறுதிமொழி ஏற்பதோடு நிகழ்ச்சியை முடித்திருக்கிறார்கள். .

05CHLRD_TG (3)right

அரியலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 60 கிராமங்களிலும் இந்த விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியுள்ளனர்.

டெங்குவைத் தடுக்கும் பணியில்

இந்த நிகழ்ச்சிகள் மூலம் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவர்கள் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயமும் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சுதா. தற்போது தமிழகத்தில் பல உயிர்களைப் பறித்திருக்கும் டெங்கு போன்ற கொள்ளைநோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சகோதரன் அமைப்பினர் தயாராக இருப்பதகாச் சொல்கிறார்.

கவுரமான வேலைவாய்ப்புடன் சமூகப் பணியாற்றத் துடிக்கும் இந்த திருநங்கைகளில் பலரை அவர்களது குடும்பத்தினர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதுபோல் சமூகமும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற பொதுநலப் பணிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவது பற்றிப் பரிசீலிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x