Published : 05 Nov 2017 11:43 AM
Last Updated : 05 Nov 2017 11:43 AM
தி
ரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது புதிதல்ல என்றாலும் குறிப்பிட்ட சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கச் சொல்லி அரசியல் கட்சிகளும் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களும் நெருக்கடி கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானதாகவே இருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் ‘மெர்சல்’ படத்துக்கு வந்த எதிர்ப்பைப் போலவே பாலிவுட்டில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கும் எதிர்ப்பு வலுத்துவருகிறது.
வலுக்கும் எதிர்ப்பு
‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்களை எதிர்த்து பாஜகவினர் வைத்த வாதங்களைப் பார்த்தால் சமூக அமைதிக்கே பங்கம் வந்துவிடுமோ என்று தோன்றியது. ஆனால், திரைப்படத்தைப் பார்த்த பலரும் ‘ஒன்றுமே இல்லாத விஷயத்தை எதிர்ப்பு என்கிற பெயரில் ஊதிப் பெரிதாக்கி இந்தப் படத்துக்கு வெற்றி தேடித்தந்துவிட்டனர்’ என்று சமூக ஊடகங்களில் எழுதிக் குவிக்க, அதையொட்டி காட்சி ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளும் நடந்தன. ‘இந்த எதிர்ப்பு, படத்தை ஓடவைப்பதற்காக நடந்த மறைமுக ஆதரவாக இருக்குமோ’ என்றும்கூட சிலர் மீம்ஸ் போட்டிருந்தனர். தற்போது ‘பத்மாவதி’ படத்துக்குத் தடை கேட்டு எழுகிற குரல்களையும் இப்படித்தான் பார்க்கத் தோன்றுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு ராஜஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. ராஜபுத்ர ராணி பத்மாவதியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் வரலாற்றைத் திரிக்கும் நோக்கிலும் அந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது என்று ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகளிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்து மதத்தையும் இந்து மதப் பெண்களையும் தவறாகச் சித்தரிப்பதாகச் சொல்லி விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள ராஜபுத்ர இனத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்களும் இந்தப் படத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துவருகின்றனர். குஜராத்தில் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் படம் வெளியானால் மாநிலத்தில் அமைதி கெடும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகக்கூடும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துவருகின்றனர்.
குஜராத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் அமைப்புக்கு ‘ராஷ்டிரிய ராஜபுத்ர கர்னி சேனை’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பிருக்கின்றனர். அதில், “எங்கள் எதிர்ப்பைப் பார்த்து ராஜஸ்தானில் படத்தைத் திரையிடவில்லை. அதேபோல் இங்கேயும் படத்தைத் திரையிடக் கூடாது. மீறினால் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கருத்துரிமைக்கு எதிராக
எதிரெதிர் திசையில் செயல்படும் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் இந்தப் பட எதிர்ப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சங்கர்சிங் வகேலா, இந்தப் படத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க, ஆளும் பாஜகவினரோ தேர்தல் ஆணையத்திடமும் மாநிலத் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்திருக்கிறார்கள்.
“படம் வெளியாவதற்கு முன் ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்குத் தனியாகத் திரையிட வேண்டும். அவர்கள் கருத்தைத் தெரிவிக்கப் போதிய வாய்ப்பு கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத பதற்றத்தைத் தடுக்கலாம்” என்று அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பத்மாவதி’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் அல்லது குஜராத் தேர்தலுக்குப் பிறகு வெளியிடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் குஜராத் பாஜக பிரமுகரும் ஷத்ரிய தலைவருமான ஐ.கே.ஜடேஜா. “எங்கள் கட்சியைச் சேர்ந்த ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் படத்தில் ராஜபுத்ர ராணியையும் வரலாற்றையும் திரித்துச் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். அலாவுதீன் கில்ஜியை ராணி பத்மாவதி சந்திக்கவேயில்லை என்று வரலாறு சொல்கிறது” என்கிறார் ஜடேஜா.
ஆனால், ஆளும் கட்சியினரும் அதிகார வர்க்கத்தினரும் தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகத் தனி மனித உரிமைகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் தலையிடும் போக்கு கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளியாகுமா வெளியானாலும் எதிர்ப்பு வலுக்குமா என்பதெல்லாம் இதற்கு மேல் நடைபெறும் காட்சிகளைப் பொறுத்தே அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT