Last Updated : 06 Jul, 2014 09:00 AM

 

Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

இந்தியாவுக்காக விளையாடுவதே லட்சியம்

உற்சாகமாகத் தொடங்கி, சூடுபிடித்து வருகிறது உலகக் கோப்பை கால்பந்தாட்டம். கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, “தேசிய மகளிர் அணி கால்பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று இந்தியாவுக்காக கோல் அடிக்க வேண்டும்” என்பதே என் லட்சியம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பீமபாய்.

சென்னை, வியாசர்பாடியில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற குடிசைப் பகுதியில் இருந்து, கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்திருக்கிறார் பீமபாய். வாட்ச்மேனாகப் பணிபுரியும் தந்தை, குழந்தைகளின் கனவுகளுக்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்யும் தாய் என வறுமை பேசும் குடும்பம் இவருடையது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 453 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். கல்வியில் லட்சியம் மருத்துவராவது என்றால் விளையாட்டில் லட்சியம் தேசிய மகளிர் கால்பந்தாட்ட‌ அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது.

“என் அண்ணன் ஃபுட்பால் விளையாடுறதைப் பார்த்துட்டுத்தான் எனக்கும் அதுல ஆர்வம் வந்தது. 'ஸ்டெட்ஸ்' அமைப்புல இருக்கிறவங்க எங்களுக்குப் பயிற்சி தர்றாங்க. ஃபுட்பால் நல்லா விளையாட சத்தான சாப்பாடு முக்கியம். எங்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கும்போது, சத்தான சரிவிகித சாப்பாட்டுக்கு எங்கே போறது? காலையில் இரண்டு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு கிரவுண்டுக்குப் போனா, மூணு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். அப்புறம் சாயந்தரம் ஸ்கூல்விட்டு வந்ததும் திரும்ப மூணு மணி நேர பிராக்டீஸ்” என்று சொல்லும் பீமபாய் தன் திறமையால் மாநில கால்பந்தாட்டக் குழுவில் இடம் பிடித்திருக்கிறார். 'அண்டர் 12', 'அண்டர் 16' பிரிவுகளில் பங்கேற்று விளையாடி யிருக்கிறார். கால்பந்தாட்ட மைதானத்தில் தடுப்பாட்டக் காரராக‌ (டிஃபென்ஸ்) விளையாடுவது பீமபாயின் அடையாளம்.

பீமபாய் மட்டுமல்ல, இவரைப்போல இன்னும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் திறமை இருந்தும் போதுமான வசதியும் வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் விளையாட்டுத்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x