Last Updated : 28 Jul, 2014 12:18 PM

 

Published : 28 Jul 2014 12:18 PM
Last Updated : 28 Jul 2014 12:18 PM

உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டுவராதே

பெப்சிகோ தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்திரா நூயி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது பெண்களின் நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது.

பொதுவாக அலுவலகத்தில் நெடுநேரம் வேலை செய்யும் இந்திராவை அன்று இரவு 9.30க்கு சி.இ.ஓ. அழைத்தார். இந்திராவை நிறுவனத்தின் அதிபராக நியமிப்பதாக முடிவெடுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். இந்திராவுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த பெரிய ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிபராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தார்.

உடனே வீட்டுக்குப் போய் இந்த மகிழ்ச்சியைத் தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். பத்து மணி சுமாருக்கு வீட்டை அடைந்துவிட்டார். அம்மா படிக்கட்டின் மேல் நின்றபடி இவருக்காகக் காத்திருந்தார். “அம்மா நான் ஒரு நல்ல செய்தி சொல்லப்போறேன்” என்று கத்தினார்.

“அது இருக்கட்டும், நீ போய் பால் வாங்கி வா” என்றார் அம்மா.

உடனே கேரேஜைப் பார்த்தார் இந்திரா. அவருடைய கணவரின் கார் அங்கே இருந்தது. “அவர் எத்தனை மணிக்கு வந்தார்?” என்று கேட்டார். “எட்டு மணிக்கு” என்று பதில் வந்தது. பால் வாங்கி வரும்படி அவரிடம் சொல்லியிருக்கலாமே என்றதற்கு, அவர் களைப்பாக இருந்தார் என்று பதில் வந்தது. வேலைக்காரர்களிடம் சொல்ல அம்மா மறந்திருக்கிறார். எனவே இப்போது இந்திராதான் போய்ப் பால் வாங்கி வர வேண்டும்.

கடமை தவறாத மகளாகப் பால் வாங்கிவந்து சமையலறையில் வைத்தார் இந்திரா. பிறகு, “நான் பெப்சிகோவின் தலைவராகியிருக்கிறேன். நீ என்னை பால் வாங்கி வா என்கிறாய். என்ன அம்மா நீ?” என்று சொன்னார் இந்திரா.

“நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்துவிட்டால் நீ மனைவி, பெண், மருமகள், அம்மா. எல்லாமே நீதான். அந்த இடத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்ற அம்மா, உன்னுடைய கிரீடத்தையெல்லாம் வீட்டுக்குள் கொண்டுவராதே என்றாராம்.

நீங்க என்ன சொல்றீங்க?

“நாட்டுக்குத்தான் ராணியப்பா, வீட்டுக்கு அவ மனைவியப்பா” என்று ‘பெரிய இடத்துப் பெண்’ என்னும் பழைய படத்தில் ஒரு பாட்டு வரும். காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால், பெண்ணின் நிலை மட்டும் இன்னும் மாறவே இல்லையோ என்று தோன்றுகிறது. இந்திரா நூயி போன்ற மேல்தட்டுப் பெண்களுக்கே இந்த நிலை என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் அனுபவம் என்ன? உங்கள் கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x