Published : 08 Oct 2017 12:02 PM
Last Updated : 08 Oct 2017 12:02 PM
எல்லாவற்றையும் என்னிடம் முழுதாகப் பகிர்ந்துகொள்ளும் என் நண்பனுக்கும் அவனுடைய இணையருக்கும் நாளும் சண்டைதான். சண்டையில் எத்தனை விதம் உண்டோ அத்தனை விதங்களிலும் சண்டை போட்டுச் சாதனை படைப்பவர்கள் அவர்கள்.
சில சண்டைகளுக்குப் பிறகு இருவரும் நாள் கணக்கில் ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பார்கள். அவன் முகத்தில் அந்த ஜாடை எப்படியோ எனக்குத் தெரிந்துவிடும். ‘‘என்னலே… மறுபடி சண்டையா’’ என்று கிளறினால், “அட விடப்பா நீ வேற...” என்று தவிர்ப்பான். “சரி... என்னான்னுதான் சொல்லேன். சொன்னா பாரமாவது குறையுமில்லே” என்று நான் சொல்ல, உடனே கொட்ட ஆரம்பித்துவிடுவான்.
“நீங்கள்லாம் கல்யாணமாகி எப்படிச் சந்தோசமா இருக்கீங்க? ரெண்டு நாள் சண்டை போட்டாலும் பாக்கி அஞ்சு நாள் நல்லிணக்கமா வாழுறீங்க. எனக்கு ஏழு நாளும் சனி, எட்டாம் நாளும் சனி. அவ வாயைத் தொறந்தா இங்கே ரத்தம் கொட்டும் (நெஞ்சைப் பிடித்துக்கொள்வான்). புருசன்கிற மரியாதையைக்கூட நான் எதிர்பார்க்கலை. ஒரு சக உயிரை இப்படியெல்லாம் பேசலாமான்னு அவ மனசிலே ஒரு நிமிஷம் தோணாதா?”
பல நேரம் அவன் கதையைச் சொல்லி முடிக்கு முன் இரண்டு முறையாவது அழுதுவிடுவான். நமக்கும் மனசு சங்கடமாகிவிடும். “சரி வா, நானும் கூட வாரேன்” என்று அவனோடு கிளம்புவேன். வீட்டு வாசலில் என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து ‘வாங்கண்ணே’ என்று அன்புடன் உபசரித்து நிற்பார் இணையர். ‘அக்கா எப்படி இருக்காங்க.. கூட்டிட்டே வர மாட்டேன்றீங்க...’ என்று பொய்யாய்க் கோபிப்பார். எங்களை வரவேற்பறையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே காப்பி போடப் போவார். அந்த இடைவெளியில், “எல்லாம் நடிப்பு” என்று ரகசியக் குரலில் என்னிடம் உதட்டைப் பிதுக்குவான். ஆனால், அவன் மனைவியோ நான் விடைபெறும்வரை அன்பின் சொரூபமாகத்தான் நின்றார்.
“ஏண்டா நாயே... வரும்போதே ஃபிரெண்டைக் கூட்டிட்டு வந்தா உன்னை விட்ருவேன்னு பார்த்தியான்னு ஆரம்பிச்சு நீ போன அஞ்சாவது நிமிசமே ஆரம்பிச்சுட்டா” என்று மறுநாள் வந்து என்னிடம் சொல்லி நேற்றைய சித்திரத்தை அழிப்பான். அவன் சொல்வதை நான் அப்படியே நம்புவதில்லை. அது அவனுக்கும் தெரியும்.
ஞாயிறு நன்று
என் இணையரை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை பூராவும் அவர்களோடு அவர்கள் வீட்டில் இருந்தோம். நாலு பேரும் சேர்ந்து பேசிச் சிரித்தபடி சமைத்தோம். நல்ல சாப்பாடு, நல்ல பேச்சு, நல்ல மதியத் தூக்கம், நல்ல மாலை நேரத்து ஃபில்டர் காப்பி என எல்லாமே நல்லாத்தான் போனது.
“நேத்து மதியம்தான் நான் வயிறாரச் சாப்பிட்டிருக்கேனப்பா.. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியச் சோறு எனக்கு அவமானச்சோறுதான்” என்று திங்கட்கிழமை வந்து அந்த ஞாயிற்றுக்கிழமைச் சித்திரத்தை அழிப்பான். “சாப்பிட வான்னு அவ சொன்னதே இல்லை. கொட்டிக்க வான்னுதான் சொல்வா” என்பான். இவன் சொல்வது உண்மையா அல்லது கண்டதெல்லாம் காட்சிப்பிழையா என்கிற குழப்பம் எனக்கு அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு நிதானத்துக்கு வர முடியவில்லை.
ஒருநாள் மாலை நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “என்னப்பா” என்றேன். ஆனால், அவன் பேசவில்லை. அவன் மனைவி சத்தமாக அவனைத் திட்டுவது கேட்டது. “இப்பவாச்சும் என்னை நம்பு” என்று அவன் செல்போனை ஆன் பண்ணி என்னைக் கேட்க வைத்திருக்கிறான். அவர்களின் உரையாடலை அவர்களின் நலனுக்காக ஒட்டுக்கேட்டேன்.
அதற்கப்புறமும்கூட ஒருநாள் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் மனைவியும் வாங்கண்ணே என்று அன்றலர்ந்த மலர்போல என்னை வரவேற்றார். இத்தனை களேபரத்துக்கும் நடுவில் அவர்களுக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் ஒருபக்கம் வளர்ந்துகொண்டிருந்தார்கள். ‘‘அது மட்டும் எப்படிடா’’? என்று கேட்டபோது, “அதெல்லாம் பயந்து பயந்து பெத்த பிள்ளைக” என்று ஆரம்பித்துத் தாம்பத்திய வாழ்க்கை பற்றி தான் கொண்டிருந்த கனவுகள் எல்லாம் சிதைந்த துக்கத்தைக் கொட்டினான். வெறும் இச்சை போட்ட பிச்சைதான் ரெண்டும் என்று வெறுப்புடன் முடித்தான். “உன் எதிர்பார்ப்புக்கு அவ இல்லைன்னா அவளை ஏன் குத்தம் சொல்றே.. உன் எதிர்பார்ப்பையும் குத்தம் சொல்லலாமில்லே” என்றேன்.
கொல்லும் வார்த்தைகள்
வெறுப்பின் உச்சத்தில் சில நேரம் சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது காணாமல் போய்விடுவான். நாலு நாள் அவளைச் சாவட்டும் என விட்டுவிட்டு அப்புறமாகத் தாடியுடன் வருவான். இரண்டாவது முறை அவன் கோபித்துக்கொண்டு காணாமல் போனபோது இதுதான் சமயம் என்று அவன் மனைவியிடம் உடைத்துப் பேசினேன்.
“அடிக்கடி இப்படிச் சண்டை போடுவீங்களா”
“வீடுனு இருந்தா ஒரு சண்டை சத்தம் இல்லாமலாண்ணே இருக்கும்” இப்படி ஆரம்பித்த ஃபார்மலான உரையாடல் நீண்ட நேரத்துக்குப் பின் மனம் திறந்தது.
“நானும் வேலைக்குப் போகிறவள்தானே. அடுப்படி வேலைக்குப் பக்கத்திலேயே வர மாட்டார். அதிகபட்சம் ரெண்டு பசங்களையும் குளிக்கவைப்பார். நல்லவேளையா பெண் குழந்தை இல்லை. இல்லைன்னா அதையும் நான்தான் பார்க்க வேண்டியிருக்கும். காலையிலே காபி யோடு பேப்பர் படிக்க உட்கார்ந்தா குளிங்க குளிங்கன்னு நான்தான் விரட்டணும். பேப்பரை நைட் வந்து படிக்கலாமில்லே. நீங்க வந்து ஒருவாட்டி சொல்லிட்டுப் போனதிலே ஒரு நாலு நாள் அடுப்படிக்கு வந்தார். காய்கறி நறுக்கித்தாங்க என்றால் ஒரே சைசில் நறுக்குவதில்லை. உனக்கு அடி ஸ்கேல் வச்சு அளந்தா வெண்டைக்காயை நறுக்க முடியும்னு கோவிச்சுட்டுப் போனவரு திரும்ப அடுப்படிப் பக்கமே வாரதில்லே. தப்பிக்கிற டெக்கினிக்குண்ணே அது.
ஒருவாட்டி சிங்கப்பூரிலிருந்து கணேசன் வந்தான்னு சொல்லி குடிச்சிட்டு வந்தார். எங்க அக்கா மாப்பிளை குடிச்சு குடிச்சேதான் எங்க அக்காவைச் சாவடிச்சார். குடிக்கிறதுலே அவ்ளோ சந்தோஷம் இருந்தா, அதை ஏன் எங்களுக்கும் பிள்ளைங்களுக்கும் தர மாட்டேன்கறீங்க, நாங்களும் உங்க சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கிறோமேன்னு சொன்னேன் (பயந்து பயந்துதாண்டா அன்னிக்கு ஒரே ஒரு பெக் அடிச்சேன். அடிச்ச சந்தோஷமும் இல்லே. அடிக்காமலே இருந்திருக்கலாம்.. அதுக்காக என்னைக் குடிகார நாயாகவே ஆக்கிட்டாடா).
இப்படிக் கோவிச்சுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போறாரே.. இது பெரிய கெட்டிக்காரத்தனமான்னு கேக்குறேன். எனக்குக் கோபம் வந்து நானும் கோவிச்சுட்டுப் போகட்டா? பொம்பளை அப்படிப்போக மாட்டாங்கிற தைரியம்தானே?”
அவரது வசவுகளுக்குப் பின்னால் சில உண்மையான பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும், மோசமான வார்த்தைகளில் தினமும் பேசுவது தப்புதான். வெக்கையான சூழல் எந்நேரமும் வீட்டில் நிலவினால் மென்மையான உணர்வுகள் கருகிப்போகுமே. அது குழந்தைகள் மனதையும் பாதிக்குமே என்பதை அவர் கடைசியில் ஏற்றுக்கொண்டார். “அவரு செய்கையாலே என்னை டார்ச்சர் பண்றார். அது வெளியே தெரியாது. நான் வார்த்தைகளாலே பேசறது மட்டும் தப்பாப் போகுது… இத்தனைக்கும் மேலே நான் தானே எல்லாமே அவருக்குச் செய்றேன்” என்றார்.
திட்டுகளுக்கு அப்பால் அவன் மீது அவருக்கு நேசம் இருந்ததை அடையாளம் காண முடிந்தது. அவர் கொட்டித் தீர்க்கிற வசவுகளால் ‘24 மணி நேரமும் அவ ஞாபகமாகவே இருக்க வேண்டியிருக்கு’ என்று அவன் ஒருமுறை புலம்பியது நினைவுக்கு வந்தது. அதற்காகத்தானோ இந்தச் சுடுசொற்கள் என்பதாக ஒரு மின்னலடித்தது என் மூளையில். தன் ஜோடியை முழுசாகத் தன் கட்டுப்பாட்டிலும் தன் ஆளுகையின் கீழும் வைத்திருக்க விரும்பும் உளவியலில் இருந்து புறப்படும் திட்டுகளாகவும் அவற்றைப் புரிந்துகொள்ள என் நண்பன் பழக வேண்டும்.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு:tamizh53@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT