Published : 22 Oct 2017 12:55 PM
Last Updated : 22 Oct 2017 12:55 PM
படித்த பெண். அடுத்தபடியாக படித்து வேலைக்கு போகும் பெண்… இவளது சமுதாய மதிப்பு அல்லது நிலை என்ன என்பதைப் பார்ப்போம். 1821-ல் பெண்களுக்கான தமிழகத்தின் முதல் பள்ளி சென்னையில் திறக்கப்பட்டது என்றும் 1829-ல் முதன்முறையாக பல்கலைக்கழக தேர்வு எழுத பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் அறிகிறோம். உடனே, 1820-களிலிருந்தே பெண்கள் அனைவரும் படிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று நம்பக் கூடாது. பெண் கல்விக்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் அன்று தொடங்கப்பட்டிருந்தன, அவ்வளவுதான். அதன்பின் நீண்ட போராட்ட வரலாறு பெண் கல்விக்காக நடத்தப்பட்டிருக்கிறது.
கேலிச்சித்திரமான படித்த பெண்
50 ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிவந்த தமிழ் இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் படித்த வேலைக்கு போகும் பெண்ணைப் பற்றி எவ்வளவு பெரிய எதிர்சித்திரம் சமுதாயத்தில் தீட்டப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரியவரும். அவற்றில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்களைப் பார்த்தாலே போதும். அப்போது பெண்களின் கைப்பையை ‘வானிட்டி பேக்’ என்று சொல்வார்கள்.
படித்த பெண்ணை உருவகப்படுத்தும் ஓவியங்கள் அனைத்தும் பெரும்பாலும் கேலிச்சித்திரம் போலவே இருக்கும். வித்தியாசமான கூந்தல் அலங்காரம், வானிட்டி பேக்குடன்தான் அந்த சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. பெண்ணுக்கு படிக்கவும் வேலைக்குப் போகவும் கொடுக்கப்பட்ட அனுமதி இந்த சமுதாயத்துக்கு எவ்வளவு அஜீரணக் கோளாறை ஏற்படுத்தியது என்பதற்கு இந்த ஓவியங்களே சாட்சி.
இதன் தொடர்ச்சி திரைப்படங்களில் வெளிப்பட்டது. பெரும்பாலும் படித்த பெண்களின் திமிரை அடக்குவதே அன்றைய கதாநாயகர்களின் இலக்கணமாகவும் ஆக்கப்பட்டிருந்தது. இவற்றின் விளைவாக படித்த பெண்கள் கூடுதல் பணிவுடன் சமுதாயத்தில் வாழ உளவியல் ரீதியாக நிர்பந்திக்கப்பட்டார்கள். ‘நான் படித்த பெண்தான், ஆனால் திமிரோடு நடந்துகொள்ள மாட்டேன்’ என்று அவர்கள் தங்கள் ஒவ்வொரு செயல் வழியாகவும் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
திருப்பத் திரைப்படங்கள்
இந்தச் சித்திரம் மாறுவதற்கே பல ஆண்டுகள் பிடித்தன. அதன் பின்னரே படித்து வேலைக்குப் போகும் பெண் குடும்பத்தின் உண்மையான பலம் என்பதை எடுத்துரைக்கும் முக்தா சீனிவாசன் இயக்கிய ‘சூரியகாந்தி’ போன்ற படங்கள் வரத் தொடங்கின. அந்தப் படத்தில் நடித்ததற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பெரியார் பாராட்டி கவுரவித்தார். அதையும் தாண்டி வேலைக்கு என்று வீதிக்கு வரும் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி சுரண்டத் துடிக்கிறது என்பதை கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ திரைப்படமும், பெண்ணின் குடும்பமே பொருளாதாரரீதியாக அவளைச் சுரண்டுவதை அவர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படமும் காட்சிப்படுத்தின. இந்தப் படங்கள், படித்து வேலைக்குப் போகும் பெண்ணின் சுமை மிகுந்த போராட்ட வாழ்க்கை பற்றி எடுத்துரைத்தது ஒரு திருப்பம் என்று சொல்லலாம்.
கூடுதல் மன உளைச்சல்
இன்று வேலைக்கு போகும் பெண் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டாள். அதுவும் நகர வாழ்க்கையில் பெண் வேலைக்கு போகாவிட்டால் செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினம் என்கிற நிலையில் வேலைக்கு போகும் பெண்ணை தொடர்ந்து தீயவளாகக் காட்ட அல்லது கருத இந்த சமுதாயத்தால் முடியவில்லை என்பது உண்மைதான்.
ஆனாலும் வேலைக்குப் போகும் பெண்களுக்கென்று உளவியல்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
வெளி உலகம் என்பது இன்றளவும்கூட ஆண்களுக்கானதுதான். அதில் மிகுந்த தயக்கத்துடனே பெண் நுழைகிறாள். இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு வர வேண்டும் என்றுதான் அவளுக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வர மட்டுமே அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்கிற மாய வலை எப்போதும் அவளைச் சூழ்ந்திருக்கிறது.
அலுவலகத்தில் ஆண் தனது இடத்தையும் அடையாளத்தையும் தேடுகிறான். உண்மையில் அலுவலகமே அவனது உலகம். அவனது எதிர்காலக் கனவுகள், லட்சியங்கள் அவனது பணியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. வீடு என்பது இந்த இடத்தில் அவனது ஆளுமையை நிலைநிறுத்த அவனை பராமரித்து அனுப்புகிற இடம். ஆனால், பெண்ணுக்கு வீடுதான் உலகம். இந்த அடிப்படை வேறுபாட்டின் சுமையுடன்தான் பணி உலகத்துக்குள் ஓர் ஆணின் போட்டியாளராகவும் வருகிறாள் பெண்.
தடைகளும் வரையறைகளும்
படித்த பெண் என்பவள் குடும்பத்துக்கு ஆபத்து என்கிற அக்காலப் பார்வை மாறியிருந்தாலும், இன்றைக்கு வீட்டுக்கு வெளியே தன்னுடைய இடத்தை எடுத்துக்கொண்டுவிட்ட ஒரு போட்டியாளராகவும் பெண்ணை பார்க்கத் தொடங்கியிருக்கிறது ஆண் சமுதாயம். அந்தப் போட்டியை தவிர்ப்பதற்காகவே அவர்கள் பல நேரம் வீடுதான் பெண்ணின் உலகம் என்பதை உரத்து சொல்ல முயல்கிறார்கள்.
வேறு பலர் அவளின் இரட்டை சுமைக்காக அனுதாபம் கொள்வதாக பாவனை செய்கிறார்கள். ஆனாலும் அந்த இரட்டைச் சுமையை குறைக்க வேண்டும் என்று சொல்லும்போது வீட்டுச் சுமையை குறைக்க வேண்டுமென்று அவர்கள் சொல்வதில்லை. சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஆண்கள், இந்த மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். ஒரு பெண் வண்டி ஓட்டுவதை சாலையில் பார்த்துவிட்டால் பெரும்பாலோர் அவளை உடனே முந்திச் செல்ல முற்படுகிறார்கள்.
ஒரு பெண்ணிடம் பின்தங்குவதை ஆண் ஏற்றுக்கொள்ள மறுப்பதையே இது காட்டுகிறது. இதே மனநிலைதான் அலுவலகப் போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது.
உண்மையில் பல பெண்கள் தங்கள் வேலைவாய்ப்பை குடும்ப வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்பாக மட்டுமே பார்த்து, பதவி உயர்வுப் போட்டிகளில் அதிகமாக ஈடுபடுவதில்லை. ஒரு சில பெண்களே தங்கள் பணி உயர்வை லட்சியமாக ஆக்கிக்கொள்கிறார்கள். அந்த ஏணியில் ஏறிச் சென்று உச்சம் தொடத் தங்களுக்கும் முழு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவர்கள் மட்டும்தான் ஆணாதிக்க மனநிலை என்றால் என்ன என்பதை எதிர்கொள்கிறார்கள், உணர்கிறார்கள். பதவி உயர்வுக்கு மட்டும் என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டாம். தாங்கள் பார்க்கும் பணியை உண்மையாக நேசித்து அதைத் தங்கள் வாழ்க்கை என்று நினைக்கத் தொடங்கினாலே, இந்த எதிர்ப்பலையை பெண் உணர முடியும்.
விஷ்ணுபிரியா என்கிற காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொள்ள நேர்ந்தது எதனால்? ஒரு பெண் எந்த இடத்திலும் வரையறைகளுக்குள் தன்னை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தச் சமுதாயம் மறைமுகமாக உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரல் தவறாமல் எல்லாப் பெண்களின் காதிலும் விழுகிறது.
அதை அலட்சியம் செய்யும் பெண்களை தண்டிக்க இந்த சமுதாயம் தயங்குவதில்லை. இவற்றின் விளைவாகவே பெண்கள் உயர்பதவிகளுக்கு வருவதில் தடை ஏற்படுகிறது. ஆனால் இத்தனையையும் தாண்டி பெண்களின் சாதனை உலகம் விரிவடைந்துகொண்டேதான் வருகிறது.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT