Last Updated : 18 Jun, 2023 07:56 AM

 

Published : 18 Jun 2023 07:56 AM
Last Updated : 18 Jun 2023 07:56 AM

என் பாதையில்: ஓய்வெடுக்கத்தான் மாமியார் வீடா?

என் மனதை நெடுநாள்களாக நெருடிக்கொண்டிருக்கும் நிகழ்வு இது. என்னுடைய தோழி ஒருவருக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜாதகப் பொருத்தம் சரியில்லை எனச் சில வரன்கள் கைவிட்டுப்போக, வழக்கம்போல் பெண்ணைக் குறைகூறிச் சில வரன்கள் நழுவிச்சென்றன. பட்ட மேற்படிப்பு முடித்து நல்ல வேலையில் இருந்தும்கூட நிறத்தை வைத்துக் குறைசொல்லித் தட்டிக்கழித்தனர் சிலர்.

நிராகரிக்க எவ்வளவு காரணங்களைக் கூறினாலும் ஒன்றைத் தவிர மற்றவற்றைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. பெண்ணுக்குத் தந்தை மட்டுமே இருக்கிறார், தாயார் இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன என்பதுதான் அது. பெண்ணுக்குத் தாய் இல்லை; அதனால், இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்றனர் ஒரு வீட்டார். இதெல்லாம் ஒரு காரணமா என்று கேட்க, “என் மகன் மறுவீட்டு விருந்துக்குப் போனால் அவனைக் கவனித்து நல்ல உணவு சமைத்துப்போட மாமியார் இல்லை” என்று அவர்கள் கூறியதைக் கேட்டுத் திகைத்தேன். பெண்ணின் தந்தையும் நன்றாகக் கவனித்துக்கொள்வார் என்றாலும், மாமியார் இருந்து செய்வதுபோல் வராது என்கிறார் அவர்.

தன்னுடைய மகன் எங்கே சென்றாலும் ராஜாவாக நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் அவர், திருமணம் முடிந்து மருமகளை எப்படி நடத்தப் போகிறார் என்பது முரணாக இருந்தது. நல்லவேளையாக என் தோழிக்கு வேறு இடத்தில் அவரை மகளைப் போல் நடத்தும் மாமியார் கிடைத்துவிட்டார். மருமகன்களுக்கு, மாமியார் வீடு என்றாலேயே நன்றாக உறங்கி ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகிவிட்டது. ஆனால், அதே நிலைமை பெண்ணுக்கு இருக்கிறதா? பிறந்த வீட்டில் இளவரசிகளாக வளரும் மகள்கள் பலர், புகுந்த வீட்டில் முதல் நாளே வீட்டுப் பணிப்பெண்ணாக மாறிவிடுகின்றனர்.

பெண்ணியம் பேசும் தாய்மார்கூடத் தங்கள் மகனுக்கு என்றால், அதிலிருந்து விலகி மகன்களுக்குச் சாதகமாகவே நடந்துகொள்கிறார்கள். ஆண்-பெண் பேதமின்றிக் கணவன் - மனைவி இருவரும் சூழலைப் புரிந்துகொண்டு வேலைகளைப் பகிர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தில் இருக்கிறோம். அப்படியானவர்களையும் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன இப்படியான நிகழ்வுகள்.

- தீபா, கோயம்புத்தூர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x