Published : 08 Oct 2017 12:02 PM
Last Updated : 08 Oct 2017 12:02 PM
ஒவ்வொரு துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதுபோல ஓவியத் துறையிலும் புதுமையான பல மாற்றங்கள் உருவாகிவருகின்றன. அந்த வகையில் ஜென்டாங்கிள் (zentangle) என்ற புதுவிதமான ஓவியக் கலை தற்போது உலக அளவில் பிரபலமாகிவருகிறது. இந்தியாவிலும் தடம் பதித்திருக்கும் இந்த ஓவியக் கலையில் சிறந்து விளங்குகிறார் கோவையைச் சேர்ந்த வசுதா ஸ்ரீதர்.
சிலர் பொழுதுபோக்காக ஓவியம், கைவினைக் கலை ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால், வசுதாவோ கைநிறையச் சம்பளம், வெளிநாட்டு வாசம் எனத் தான் பார்த்துவந்த ஐ.டி. வேலையைத் துறந்துவிட்டு தற்போது முழுநேர ஓவியப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
“எனக்குச் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் விருப்பம். ஆனால், படிப்புதான் முக்கியம் எனப் பெற்றோர் வலியுறுத்தியதால், அப்போது ஓவியம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்து முடித்ததும் ஆஸ்திரேலியாவில் ஐ.டி. துறையில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம், புதிய ஊர் என ஒவ்வொரு நாளும் புதுமையாகக் கழிந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வட்டத்துக்குள் அகப்பட்டுக்கொண்டதுபோலத் தோன்றியது. மேலும், தனிப்பட்ட காரணங்களால் அதிக மன உளைச்சலும் ஏற்பட்டது. என் மனநிலையை மாற்றுவதற்காகத் தொடங்கியதுதான் இந்த ஓவியப் பயணம். ஜென்டாங்கிள் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஓவியம் வரைவதன் அடிப்படைகூடத் தெரியாத எனக்கு ஜென்டாங்கிள் ஓவியங்கள் மிகவும் எளிமையாக இருந்ததோடு, மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவின.முழுவதுமாக ஓவியத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் முடிவெடுத்த மறுநாள் காலையே வேலையை விட்டுவிட்டேன்” என்று ஓவியத்துக்குள் நுழைந்த கதையைப் பகிர்ந்து கொகிறார் வசுதா.
தியானமும் ஓவியமும்
இந்த ஓவியக் கலை தன் மனதுக்கு அமைதியைத் தருகிறது என்கிறார் வசுதா.
“இயந்திரகதியில் நகரும் வாழ்க்கை முறையால் எல்லோருக்கும் மன உளைச்சல் அதிகமாக உள்ளது. சிறுவர்கள்கூடத் தற்போது மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதற்காகப் பலர் தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஜென்டாங்கிள் ஓவிய முறையும் ஒருவகையில் தியானம் போலத்தான். உங்களுக்கு ‘ i, c, o, u, s’ ஆகிய ஐந்து ஆங்கில வார்த்தைகள் தெரிந்தால் போதும். இந்த ஓவிய முறையைக் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் ஜென்டாங்கள் ஓவியத்துக்கென்று சில வரைமுறைகள் உள்ளன. அதை ஒருமுறை கற்றுக் கொண்டாலே போதும், யார் வேண்டுமாலும் இந்த ஓவியங்களை வரைய முடியும். மனதை ஒருநிலைப்படுத்தி வரைந்து முடிக்கும்போது நமக்கு தியானத்தின் அமைதி கிடைப்பதோடு அழகான ஓர் ஓவியமும் கூடுதலாகக் கிடைக்கும். இந்தக் ஓவிய முறையை ஓவியம் தெரியாதவர்கள்கூட மிக விரைவிலேயே கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் உற்சாகமாக.
வகுப்பறையான வலைத்தளம்
தமிழகத்தில் மிகச் சொற்பமான கலைஞர்களே ஜென்டாங்கிள் ஓவிய முறையை
அறிந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஓவியக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்காகத் தனக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திவருகிறார் வசுதா. “இந்த ஓவியக் கலையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கற்றுத் தரத் தயாராக இருக்கிறேன். என் பல மாணவர்களுக்குச் சமூக வலைத்தளங்கள் வழியாகக் கற்றுக்கொடுத்துவருகிறேன். இந்த எளிமையான ஓவிய முறையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஓவியங்கள் அழியாத ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவை” என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் முடிக்கிறார் வசுதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT