Published : 01 Oct 2017 12:16 PM
Last Updated : 01 Oct 2017 12:16 PM
உ
லக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நோய்க்கான காரணங்கள்
மாறிவரும் உணவு முறை, சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறையில் மாற்றம், மரபுவழித் தாக்கம் போன்றவை புற்றுநோய்க்கான முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. நம் நாட்டில் கிராமப்புறங்களில் மார்பகப் புற்றுநோயால் தாக்கப்படும் பெண்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை எனத் தெரியாமல் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரை அணுகும் மோசமான நிலை உள்ளது. இதனால் அவர்கள் நோயைக் கண்டறியும் முன்பே இறந்துவிடும் பரிதாபச் சூழ்நிலையும் நிலவுகிறது.
அறிகுறிகள்
மார்புக் காம்பில் இருந்து ரத்தம் வடிதல், மார்பகம் சிவந்துபோவது, மார்பகம், காம்புப் பகுதியில் தோல் உரிதல், மார்பகத்திலும் கைக்கு அடியிலும் கட்டிகள் தோன்றுவது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மார்பகப் புற்றுநோய் வரும் என்பதில்லை. இளம் தாய்மார்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும். குறிப்பாக 25-40 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவரிடம் சென்று மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மார்பகத்தில் ஏற்படுகிற சிறிய மாற்றங்களைக்கூட உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய சிறந்த, எளிய வழி மார்பக சுயபரிசோதனை ஆகும்.
எப்படி சுயபரிசோதனை செய்வது?
மார்பக சுயபரிசோதனையைக் கண்ணாடி முன்னால் நின்று செய்து பார்ப்பது நல்லது. வலது மார்பகத்தைப் பரிசோதனை செய்யும்போது இடது கையையும், இடது மார்பகத்தைப் பரிசோதனை செய்து பார்க்கும்போது வலது கையையும் பயன்படுத்த வேண்டும். உடைகளைக் களைந்து கையின் மூன்று விரல்களில் லேசாக சோப்பு, தேங்காய் எண்ணெய், குளிப்பதற்குப் பயன்படுத்தும் ஜெல் ஆகியவற்றில் ஒன்றைத் தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் கைக்கு அடியிலிருந்து மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் நன்றாக மார்பகத்தை அழுத்திக் கட்டிகள் போல் ஏதேனும் தென்படுகிறதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். மார்புக் காம்புகளில் இருந்து நீர் அல்லது ரத்தக் கசிவு ஏற்படுகிறதா என்று காம்புப் பகுதியைக் கசக்கிப் பார்க்க வேண்டும். பின்னர் படுத்தபடி ஒரு கையை மேலே தூக்கி மற்றொரு கையால் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும்.
மார்புப் பகுதியில் கட்டிகள்போல் இருந்து வலி இல்லையென்றால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல்தான் இருக்கும். கட்டிகள் நன்றாக வளர்ந்த பிறகுதான் வலிக்கத் தொடங்கும்.
மமோகிராம் தெரபி
40 வயதைக் கடந்த பெண்கள் மார்பக சுயபரிசோதனையில் எந்த அறிகுறியும் இல்லை என்றாலும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மமோகிராம் பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்துவிட்டால் அதைக் குணப்படுத்தும் வழிமுறையும் எளிமையாக இருக்கும்.
பயம் வேண்டாம்
மற்ற புற்றுநோய்களைப்போல் அல்லாமல் மார்பகப் புற்றுநோயை முன்னதாகக் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயம்கொள்ளத் தேவையில்லை. நோயிலுருந்து மீண்டுவந்த பல பெண்கள் வெற்றிகரமாக வாழ்க்கையைத் தொடர்கிறார்ககள். அந்த வகையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான இந்த ‘பிங்க் அக்டோபர்’ மாதத்தில் நம் வீட்டிலிருந்தே விழிப்புணர்வைத் தொடங்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT