Published : 22 Oct 2017 12:55 PM
Last Updated : 22 Oct 2017 12:55 PM
பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களை ஓரளவு பார்க்க முடிகிறது. உள்ளடங்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களைப் பார்ப்பது அரிது. எத்தனையோ துறைகளில் பெண்கள் தடம் பதித்தாலும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபடவில்லை. அந்தத் தொழிலில் உள்ள சிரமங்களும் பாதுகாப்பற்ற நிலையும் இதற்கு முக்கியக் காரணம். இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலையில் ‘ஆட்டோ திருமகள்’ என்ற அடைமொழியுடன் கம்பீரமாக வலம்வருகிறார் ரோஜா.
தந்தையின் வழியில்
காக்கிச் சட்டை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டுவதற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். சவாரிக்கு இடையே நமக்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கிப் பேசினார். “என் அப்பா முருகன், ஆட்டோ டிரைவர். அம்மா சாந்தி, திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளி. என் பெற்றோருக்கு நான் நான்காவது மகள். அக்காக்களுக்குத் திருமணமாகிவிட்டது. தம்பி, தனியார் கல்லூரியில் படிக்கிறான். எங்களை வளர்த்ததில் எங்கள் அம்மாவின் பங்கு அதிகம்” என்று சொல்லும் ரோஜா, பிளஸ் 2 வரை படித்திருக்கிறார். தன் அப்பாவிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டார்.
அன்பின் பலம்
குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்ததாகச் சொல்லும் ரோஜா, இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல், சுயமாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற உத்வேகத்துடன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருக்கிறார். “ஐந்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். பல தரப்பு மக்களைச் சந்தித்துள்ளேன். பயணம் இனிமையா இருக்கு” என்கிறார்.
எப்போது ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்றாலும், இவரை செல்போனில் தொடர்புகொண்டு அழைக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவரிடமும் அன்பாகப் பேசும் தனது குணம்தான் அதற்குக் காரணம் என்று நம்புகிறார் ரோஜா.
எதிர்ப்பும் ஆதரவும்
புதிதாக எதையாவது செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்தே இன்றைய நிலையை ரோஜா எட்டியிருக்கிறார் . “நான் இந்தத் தொழிலில் நுழைந்ததும் சில ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண் என்பதால் என் மீது இரக்கப்பட்டு பலர் என் வாடிக்கையாளராகக்கூடும் என அவர்கள் நினைத்தார்கள்” என்கிறார் ரோஜா. அதேநேரத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற ஆட்டோ ஓட்டும் சகோதரர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். அவர்களது ஒத்துழைப்பால், திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. “எதிர்காலத்தில் இங்கு ஆட்டோ ஓட்டவரும் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது” என்று நம்பிக்கையுடன் சொல்லும் ரோஜா, மூன்று பெண்களுக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்தும் உள்ளார்.
தினமும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை ஆட்டோ ஓட்டும் ரோஜா, கிரிவலத்தின்போது பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் பவுர்ணமி நாளில் மட்டும் இரவு பகல் பாராமல் ஆட்டோ ஓட்டுவதாகச் சொல்கிறார். “இரவுப் பணியில் இருக்கும் காவல்துறையினரால் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்.
அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காவல்துறையினர், என்னிடம் அன்பாகவே பேசுவார்கள். சிலர் அறிவுரைகளும் சொல்வார்கள். அது எனது தொழிலுக்கு உதவியாக இருக்கிறது” என்கிறார்.
இயலாதவர்களுக்கு உதவி
திருவண்ணாமலை நகரத்துக்குள் மட்டுமல்லாமல் அருகில் சேத்துப்பட்டு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்வரை வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்கிறார். மாற்றுத்திறனாளிகளிடமும் முதியோர்களிடமும் இவர் கட்டணம் வசூலிப்பது இல்லை.
“அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யும்போது மன அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நாலு பேருக்கு உதவ வேண்டும். அதுதான் ஒருவரை நல்ல நிலைக்கு உயர்த்தும். இதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கிறேன்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.
மறுத்த வங்கிகள்
ரோஜா ஓட்டுவது வாடகை ஆட்டோதான். ஒரு நாளைக்கு டீசல் செலவு, வாடகை போக ரூ.300 வரை கிடைக்கிறதாம். பள்ளி மாணவர்களை தினசரி அழைத்துச் செல்வதால், குடும்பப் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க முடிகிறது என்கிறார். “சொந்தமாக ஆட்டோ வாங்கலாம் என்று கடனுதவி கேட்டுச் சென்றபோது அனைத்து வங்கிகளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக்கழித்துவிட்டன. அதனால், வங்கிக் கடன் பெறும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். சொந்த ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்கிற ஆசை மட்டும் உள்ளது. ரூ.3 லட்சம் தேவை. அந்த அளவுக்குப் பெரிய தொகையை என்னால் புரட்ட முடியாது. உதவிக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார்.
உயரிய லட்சியம்
ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தாண்டி ரோஜாவுக்கு ஓர் உயரிய லட்சியமும் இருக்கிறது. “பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதற்காக இல்லம் தொடங்க முடியவில்லை என்றாலும், சில குழந்தைகளையாவது தத்தெடுத்து என் வீட்டில் பாதுகாத்து வளர்ப்பேன். என் லட்சியத்துக்குத் தடையாக இருக்கும் என்பதால், திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்கிற முடிவுடன் இருக்கிறேன்” என்று உறுதியுடன் சொல்கிறார் ரோஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT