Published : 22 Oct 2017 12:52 PM
Last Updated : 22 Oct 2017 12:52 PM

எசப்பாட்டு 06: தீயில் இறங்க மறுக்கும் சீதைகள்

 

மு

ம்பையை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கொண்டாடும் விழாக்களில் ஒன்று ‘சூர்ப்பனகையின் மூக்கறுக்கும் விழா’. சூர்ப்பனகை என்பவளை பொய் வழக்குப் போட்டு அப்பாவி ஆண்களை குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழும் வரதட்சிணைக் குற்றச் சட்டம் 498ஏ-ன் கீழும் குற்றவாளியாக்கும் பெண்களின் குறியீடாக அவர்கள் முன்வைக்கிறார்கள். இதை அவர்கள் வேடிக்கைக்காகவோ ஊடக வெளிச்சத்துக்காகவோ செய்யவில்லை. கடுமையான ஆத்திரத்தோடுதான் செய்கிறார்கள்.

அவள் பொய்யுரையைக் கேட்டு ராமன் மீது போர் தொடுத்த ராவணன் உருவ பொம்மையையும் அன்று அவர்கள் எரிக்கிறார்கள். ராவணன் என்பவன் பெண்களுக்கு ஆதரவான சட்டங்களின் குறியீடாக முன்வைக்கப்படுகிறான். இந்த நிகழ்வின் பின் உள்ள இந்துத்துவக் கதையாடல்,சொல்லாடல்கள் பற்றித் தனியாகப் பேசலாம். பேச வேண்டும். அத்துடன் ‘சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும்’ சில பெண்களின் ‘வஞ்சக’த்தைப் பொது விதியெனச் சித்தரிக்க முயல்கிறார்கள். அது ஒருபக்கம்.

தங்கள் மனைவிமார்களின் குறியீடாக சூர்ப்பனகையை இந்த ஆண்கள் முன்வைக்கும் உளவியல் எவ்விதம் உருவானது? திருமணம் என்கிற சமூக நிறுவனத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் வெளிப்பாடாக இதைப் புரிந்துகொண்டு மேலும் விவாதிப்பதும் அவசியம். நம்முடைய நாட்டில் திருமணங்களும் மணமகன்/மணமகள் தேர்வும் எப்படி நடக்கின்றன என்கிற கேள்வியும் இங்கு கவனிக்கப்பட வேண்டும்.

சாதியைப் பேணும் ஏற்பாடு

முறை மாப்பிள்ளை, முறைப் பொண்ணு என்கிற உறவும் உரிமையும் வெகுகாலம் நீடித்திருந்த சமூகம் நம்முடையது. யார் முறை மாப்பிள்ளை என்பதில் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் வேறுபாடுகள் இருக்கும். ‘அத்தை மகனே போய் வரவா..அம்மான் மகனே போய் வரவா…’ என்று பாடுவது ஒரு சமூகம் எனில் எங்க ‘அக்கா பெத்த முக்காத்துட்டே வாடி...’ என்று அக்காள் மகளை முறைப்பெண்ணாகப் பார்ப்பது, இன்னொரு சமூகமாக இருக்கும்.

முறை மாப்பிள்ளை என யாரும் இல்லாவிட்டால் வெளி வட்டத்தில் வரன் தேடப்போவார்கள். தூரத்து உறவில்கூட ஆள் சிக்காவிட்டால் சொந்த சாதியில் நம் உட்பிரிவுக்குள் சிக்குகிறதா என்று பார்ப்பார்கள். உட்பிரிவுக்குள்ளும் அமையவில்லை என்றால் கல்யாண முறை உள்ள உட்பிரிவுகள் என்று ஒரு பட்டியலை ஒவ்வொரு சாதியிலும் வைத்திருப்பார்கள். அந்தப் பட்டியலுக்குள் தேடுவார்கள்.

அதிலும் ஒண்றும் தேறவில்லை என்றால் ‘சரி போய்த் தொலையட்டும்.. நம்ம சாதின்னு இருந்தாச் சரிதான்’ என்று சாதிக்குள் மண உறவை அமைக்கும் சமரசத்துக்கு இறங்கி வருவார்கள். இயக்கங்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் மனுசனுக்கும் மனுசிக்குமானவையாக அமைவதுண்டு.

ஆனால், இந்த எல்லா ‘ஏற்பாட்டுத் திருமணங்களிலும்’ ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைப்பது சமூகம்தான். அச்சமூகம் முற்போக்கானதாகவும் இருக்கலாம். பிற்போக்கானதாகவும் இருக்கலாம். திருமணம் என்பது எப்போதும் சமூக ஏற்பாடாகவே இருக்கிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தாங்களே தம் விருப்பத்துக்கும் அலைவரிசைக்கும் பொருத்தமான இணையைத் தேர்வு செய்துகொள்வது என்பது இன்றைக்கும் இந்தியாவில் நடைமுறைக்கு வராத பெருமூச்சுக் கனவுதான்.

மனைவிக்கான சமூகக் கட்டளை

உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு சொன்ன ஒரு புகழ்பெற்ற வாசகம் உண்டு, “கணவன் என்பவன் ஒரு பெண்ணுக்கு வாய்த்த பதிலிதான். அப்பெண்ணின் கற்பனையிலும் எதிர்பார்ப்பிலும் சித்திரமாக அவள் மனதில் உருவாகியிருந்த அந்தக் கணவன் இல்லை இவன். அவனுக்கு மாற்றாகக் கிடைத்த பதிலிதான் இவன்”.

இதை அப்படியே ஆணுக்கும் பொருத்திப் பார்க்கலாம்தான். வித்தியாசம் என்னவெனில், ஆணுக்குக் கூடுதலாகச் சில பெண் பார்க்கும் படலங்கள் வாய்க்கும். ஆண் பார்க்கும் படலங்கள் பெண்ணுக்கு வாய்ப்பதில்லை. இன்று இணையத்தில் உலவும் மேட்ரிமோனியல் வலைத்தளங்கள் அதில் ஒரு சிறு உடைப்பை ஏற்படுத்திப் பெண்ணுக்கும் பல ஆண்களைப் ‘பார்க்கும்’ வாய்ப்பை வழங்கியிருக்கின்றன.

இந்த ‘சமூகக் கல்யாணம்’ கணவன் மனைவிக்கான கடமைகளையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்தக் கடமைகளில் முக்கியமானவைகளாக கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். இணைந்து மனிதகுல மறுஉற்பத்தி செய்ய வேண்டும். நிலவும் சமூக வழக்கத்துக்கும் சமூக அமைப்புக்கும் பொருந்துகிறவர்களாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

ஆண் வேலைக்குப் போக வேண்டும். பெண் இல்லத்தரசியாக, இல்லாளாக, மனையாளாக, மனையாட்டியாக, வீட்டம்மாவாக, வீட்டுக்காரியாக, குடும்ப விளக்காக, குத்துவிளக்காக, ஊதுபத்தியாக, மெழுகுவர்த்தியாகத் தான் கரைந்து வீட்டுக்கு ஒளி தரவேண்டும். சமூகத்தின் இந்தக் கட்டளை ஆண்டவன் கட்டளையாகவும் மடைமாற்றம் செய்யப்பட்டு நம் தலையில் ஏற்றப்பட்டுள்ளது.

எதிர்த்து பேசுபவள் சூர்ப்பனகை

நல்ல தர்மபத்தினி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றுண்டு:

‘கார்யேஷுதாசி

கரணேஷு மந்திரி

ரூபேஷு லட்சுமி

க்ஷமவா தரித்ரி

போத்யேஷு மாதா

சயனேஸு வேஸ்யா

சமதர்ம யுக்தா

குலதர்ம்பத்தினி’

-சேவை செய்வதில் தாசியைப் போலவும், யோசனை சொல்வதில் மந்திரியைப் போலவும், அழகில் லட்சுமியைப் போலவும், மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும், நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

இன்றைய நவீன ஜனநாயக யுகத்தில் உருவாகும் பெண் இப்படிக் கணவனுக்கான ‘முழுநேர சேவையாளாக’ தன்னைச் சுருக்கிக்கொள்ள ஒப்புவதில்லை. அதுதான் ஆணுக்கு எரிச்சலூட்டி, சீதையாக தீயில் இறங்கு என்று கூறும்போது இறங்கும் பெண்ணாக இல்லாமல் எதிர்த்துப் பேசுகிறாளே என்று அவளைச் சூர்ப்பனகை என்கிறது.

ஃபிராய்டு சொன்னதுபோல ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழாமல் சமூகம் உருவாக்கும் பதிலிகள் சேர்ந்து வாழும் வாழ்க்கையாக நம் குடும்ப வாழ்க்கை இருக்கும்போது, போதாமைகள் உணரப்படுவதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போவதும் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் நிராசைகளும் அதன் அடிப்படையில் எழும் கோபங்களும் வெறுப்புகளுமாக வாழ்க்கை புளித்துப்போகிறது.

எப்போதும் தொடரும் மூக்கறுப்பு

ஆண் தலைமையேற்பவனாகவும் பெண் முற்றிலுமாக ஒரு ‘குடும்ப சேவிகா’ ஆகவும் கட்டமைக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு குறித்து எந்தக் குற்ற உணர்வும் கொள்ளாமல் இந்தக் குடும்ப அமைப்பைக் கட்டமைக்கும் சமூக அமைப்பின் மீது கோபம் கொள்ளாமல் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கக் கிளம்புவது என்ன நியாயம்?

தேசப் பிரிவினையின்போது பல்லாயிரம் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டதும் பெண் குறியில் பிறைச்சந்திரன் உருவமும் திரிசூலத்தின் உருவமும் சூட்டுக்கோலால் வரையப்பட்டதும் காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீசிப் பெண் முகம் சிதைக்கப்படுவதும் அழகாயிருப்பதால் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையை மொட்டையடித்து வீட்டுக்குள் பூட்டிவைத்த ஒரு விருதுநகர் மாவட்டக் கணவனின் முடியறுப்பதும் எனக் காலம் காலமாகவும் இன்றைக்கும் நம் பெண்கள் மூக்கறுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த வரலாற்றின் மீது நின்று தங்கள் குடும்பத்தையும் மனைவியையும் பார்க்காமல், என்றைக்கோ நிகழும் விதிவிலக்கான பொய்வழக்குகளை மட்டுமே பூதாகரமாக்கிச் சுருங்கி நிற்பது என்ன நீதி?

ஆண்களெல்லாம் ஒருபோதும் ராமர்களும் அல்லர். பெண்களெல்லாம் சூர்ப்பனகைகளும் அல்லர்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர்,எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x