Last Updated : 15 Oct, 2017 12:24 PM

 

Published : 15 Oct 2017 12:24 PM
Last Updated : 15 Oct 2017 12:24 PM

பெண்ணும் ஆணும் ஒண்ணு 25: சிந்தனைகளை மாற்றுவதே நவீனம்!

பெண்ணின் திருமண வயது 18. பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தகுதியான வயதும் சட்டப்படி 18 தான். ஆனால், மிக விசித்திரமாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் உட்பிரிவு 2-ல் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கின்படி 15 முதல் 18 வயது வரையுள்ள மனைவியுடன் கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்று கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் ‘மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம்’ என்று உச்ச நீதிமன்றம் தற்போது கூறியிருக்கிறது. இதனால் சட்டப் பிரிவு 375 மாற்றப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், இதைத் தீர்மானமாக உச்ச நீதிமன்றம் கூறுவதற்கே இத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றன.

குழந்தைத் திருமணம் குற்றம் என்று சட்டம் உள்ள ஒரு நாட்டில் இந்தப் பிரிவு மறைமுகமாகக் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறது என்கிற வாதத்தை (வழக்குத் தொடர்ந்த தொண்டு நிறுவனம் ‘இண்டிபென்டன்ட் தாட்ஸ்’ வைத்த வாதம்) ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அட்சய திருதியை அன்று கூட்டங் கூட்டமாகக் குழந்தைகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், அதே நேரம் 18 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் தங்கள் கணவன்மாரால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படுவது குறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று கையை விரித்திருக்கிறது.

கவலையளிக்கும் புரிதல்

திருமண உறவுக்குள் ஒருவர் மீது பாலியல் உறவு திணிக்கப்படலாமா என்பது குறித்த பலரது புரிதல் கவலையளிக்கிறது. திருமண உறவுக்குள் அந்த உரிமை ஆணுக்கு இருக்கிறது என்றே எல்லோரும் நினைக்கின்றனர். இது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்கள் அந்தரங்கம் சார்ந்த உரிமை என்ற புரிதல் ஏற்படவே இல்லை. இன்னொரு புறம் திருமண அமைப்புக்குள் ‘தாம்பத்திய உரிமையை இருபாலரில் யார் வேண்டுமானாலும் சட்டபூர்வமாகவே வற்புறுத்தி பெற முடியும், அது சரியான செயலே’ என்றும் நினைக்கிறார்கள். இது அடிப்படையில் மனித உரிமைக்கு விரோதமான செயல் என்பதை மிகச் சிலரே உணர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த விவாதங்களை எதிர்கொள்வோர் ‘திருமண வாழ்க்கைக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டாமா?’ என்று கேட்கிறார்கள். இது போன்ற உரிமைக் குரல்கள் எந்த அளவுக்குக் கடுமையான சூழல்களிலிருந்து எழுகின்றன என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. சில குறிப்பிட்ட தருணங்களில் ஒருவருக்குத் தேவைப்படாவிட்டாலும் மற்றவரது தேவைக்காக சம்மதிப்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

கடுமையான பிறப்புறுப்பு மற்றும் காயங்களுடன் மருத்துவமனைக்கு வரும் பெண்கள், அந்தக் காயங்களுக்குத் தங்கள் கணவனே காரணம் என்று வாக்குமூலம் தருகிறார்கள். ஆனால், காவல்துறையினர் இதைக் குற்றமாகப் பதிவுசெய்ய முடியாது. இந்தச் சூழலின் பின்னணியில் இந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ஆண்கள், பெண்களைத் தாக்க வேண்டும் என்றால் அவர்களின் இறுதி வன்முறை வடிவம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலாகவே இருக்கிறது. ஆனால், ‘இது கணவன் மனைவிக்கிடையிலான சொந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று சொல்வது எவ்வளவு அதிர்ச்சி தரத்தக்கது? “பெண்கள் பிரச்சினைகளை, பெண்கள் விடுதலையைப் பற்றிப் பேசும்போது ஓர் ஆண், தன் மனைவியை நினைத்துப் பார்க்காமல் தன் தாயை, சகோதரியை, மகளை நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று பெரியார் சொன்னதை இந்த இடத்தில்தான் நாம் மிக அதிகமாக நினைவுகூர வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல

திருமணம் என்பது அடிப்படையில் ஓர் ஆணுக்குப் பெண்ணை தாரை வார்ப்பது என்பதன் முழுப் பொருளில்தான் சட்டமும் இந்தப் பிரச்சினையை அணுகுகிறது. நமது நாட்டில் மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றிலும் இது விவாதப் பொருளாகவே இருக்கிறது. அமெரிக்காவில் 1970-களில்கூட அந்த நாட்டின் நீதிபதிகள், ‘இது கணவனது உரிமை. திருமணத்தின்போது இந்த உரிமையை அந்த ஆணுக்குத் தர பெண் ஒப்புக்கொண்டிருக்கிறாள்’ என்றே சொல்லிவந்திருக்கிறார்கள். பல மேலை நாடுகளில் பெண்ணிய இயக்கப் போராட்டங்களுக்குப் பின் இந்த நிலை மாறியிருக்கிறது. ஆனால், இன்றும் இந்தியா உட்பட 36 நாடுகளின் சட்டத்தில் இந்த நிலை தொடர்கிறது.

பெண்ணைத் துரத்தும் நிர்ப்பந்தம்

உண்மையில் திருமண அமைப்புக்குள் பாலுறவுக்கான செயற்கையான நிர்ப்பந்தம் எப்போதும் நிலவிவருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே அவளது கர்ப்பம் குறித்து சமுதாயம் கேள்விகளை எழுப்பத் தொடங்குகிறது. உயர் படிப்பு படித்திருந்தும் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்குள் குழந்தை பெறவில்லையென்றால், கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிக் கூண்டில் தான் ஏற்றப்படுவதை உணர்கிறாள் பெண். குழந்தையின்மைக்கு ஆண்களும் காரணமாக இருக்க முடியும் என்பதையே இந்தச் சமுதாயம் வெகு தாமதமாகத்தான் உணர்ந்திருக்கிறது. அதனால்தான் ‘மலடி’ என்ற சொல்லுக்கிணையான ஆண்பால் சொல் இல்லை.

ஒரு குழந்தையைப் பெற்றுத் தன்னால் தாயாக முடியும் என்று நிரூபிக்காவிட்டால் தனது வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்கின்ற மனநிலை தோன்றுவதை இன்றுவரை பெண்களால் தவிர்க்க முடியவில்லை. அவளுக்கு அவள் படிப்பு, எதிர்காலக் கனவு எல்லாம் மறந்துபோகிறது. குழந்தை பெறும்வரை வேறெதிலும் கவனம் செலுத்த முடியாதவள் ஆகிறாள். தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பணியிலிருந்து நின்றுவிடுகிறார்கள். கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள்கூட இந்த ஒரே பிரச்சினைக்காகத் தவிக்கும் பெண்கள் உண்டு. இதில் உடலை வாட்டி வதைக்கும் மருத்துவத் துன்புறுத்தல்களுக்கு ‘சிகிச்சை’ என்று பெயர் சொல்கிறார்கள். பெருநகரங்களில் நாளும் பல்கிப் பெருகுகின்றன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். புதிதாக ‘வாடகைத் தாய்’ எனும் ஒரு தொழில் பெண்களுக்கு அறிமுகமாகிறது. ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்னும் புறநானூற்றுக் காலத்தின் தொடர்ச்சிதானே இவை யாவும்? பெண் என்பவர் ஒருபுறம் பாலியல் நுகர்வுப் பொருள் மற்றொருபுறம் பிள்ளை பெறும் கருவி என்பதைப் புதுப்பிக்கத்தானே இத்தனை நவீனமும் பயன்படுகிறது? நவீனம் என்பதை நாம் தொழில்நுட்பம் என்று புரிந்துகொள்கிறோம். ஆனால், உண்மையில் புரையோடிப்போன பழைய சிந்தனைகளை மாற்றுவதுதான் நவீனம்!

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x