Published : 08 Oct 2017 12:20 PM
Last Updated : 08 Oct 2017 12:20 PM

முகங்கள்: நீதியை வென்றெடுத்த பெண்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு கிராமத்தின் அரசுப் பள்ளி ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் தலைமை ஆசிரியராக இருந்த ஆரோக்கியசாமி என்பவருக்குக் கடந்த மாதம் 55 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2011-ம் ஆண்டில் சட்டப் போராட்டத்தைத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தந்திருப்பதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், அந்தச் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆகியோரின் பங்கு அளப்பரியது.

அறிவொளியால் கிடைத்த அறிமுகம்

பொதும்பு கிராமத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்விப்பட்ட மறு கணத்திலிருந்து அதற்கான சட்ட நடவடிக்கைக்காகப் போராடத் தொடங்கியவர் பொன்னுத்தாய். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இவர், தீப்பெட்டித் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு அறிவொளி இயக்கம் மூலம் கல்வி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதன் மூலம் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அந்த ஊரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை இடித்து சிமென்ட் தொழிற்சாலை கட்டுவதற்கான திட்டத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடி கழிவறையைக் காப்பாற்றியிருக்கிறார். பல போராட்டங்களில் முன்னின்று பங்கேற்றுள்ளார்.

“ஜூன் 2011-ல் பொதும்பு கிராமத்தின் கிளைச் செயலாளர் அமிர்தவல்லி மூலமாக இந்தப் பிரச்சினை பற்றித் தெரிந்துகொண்டேன். அந்தக் கிராமத்துக்குச் சென்று குழந்தைகளுடன் பேசி தகவல்களைத் திரட்டினோம். பல கட்டங்களில் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவரைப் பெற்றவரின் பெயரிலும் என் பெயரிலும் இந்த வழக்கைப் பதிவுசெய்தோம்” என்று இந்த வழக்குக்குள் தான் நுழைந்த விதத்தை விவரிக்கிறார் பொன்னுத்தாய்.

முட்கள் நிறைந்த பாதை

நீதிக்கான இந்தப் போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சவால் களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

“காவல்துறை சரியாக நடவடிகை எடுக்கவில்லை. அதையடுத்துப் பள்ளி முற்றுகைப் போராட்டம் நடத்திய பின்புதான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. அதற்குப் பின் எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய பிறகும் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் பொதும்பு கிராமத்துக்கு வந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அதையடுத்து ஆரோக்கியசாமி சரணடைந்தார். இதற்கிடையில் போராட்டங்களை நடத்தியவர்களை விலைக்கு வாங்க முயல்வது, ஏளனமாகப் பேசி அவமதிப்பது ஆகியவற்றைச் செய்யப் பணம் கொடுத்து ஆட்களை நியமித்தார் ஆரோக்கியசாமி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தவர்கள். அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்துவிடும் என்று பெற்றோரை மிரட்டி பின்வாங்க வைக்கவும் முயன்றார்கள்.

காவல்துறையினர் இரவு நேரங்களில் விசாரணை என்று வீட்டுக்குச் செல்வது, ஆண் காவலர்களை அனுப்புவது என அச்சுறுத்திக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு விஷயத்துக்கும் உயர் நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை நடத்த வேண்டியிருந்தது” என்கிறார் அவர்.

ladiesjpg

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்

பெண்களின் உரிமைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறார் ஆகியோருக்கான உரிமைகள் மீறப்படும் வழக்குகளை மட்டுமே கையிலெடுப்பதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் நிர்மலா ராணி. “ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலில் சட்டம் பயின்றேன். சில ஆண்டுகள் நிருபராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

ஊடகவியலாளருக்கான கள அனுபவமும் சட்ட அறிவும் இருப்பது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. நான் ஆஜராகும் வழக்குகள் தொடர்பாகக் களத்துக்குச் சென்றுவிடுவேன். இந்த வழக்கில்கூட சாட்சிகளைக் கலைக்கும் முயற்சிகளை நேரில் சென்று புகைப்படம் எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன்” என்கிறார் நிர்மலா ராணி.

தீர்ப்பின் வரலாற்று முக்கியத்துவம்

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை வழக்குகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதை விவரிக்கிறார் நிர்மலா ராணி.

“சிறார் மீதான பாலியல் குற்றங்களில் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்த வழக்குகளிலேயே சாட்சிகளைக் காப்பாற்றுவது கடினம். பாதிக்கப்பட்ட இத்தனை மாணவிகளைப் பாதுகாத்து சாட்சி சொல்ல வைத்தோம். அதோடு இந்தக் குற்றம் பாக்ஸோ சட்டம் வருவதற்கு முன்பு நடந்த்து. இதற்குப் பொருந்திய சட்டங்கள் போதிய வலுவில்லாதவை.

நானறிந்தவரை சிறார் மீதான பாலியல் வன்முறை வழக்கில் இத்தனை பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கையில் வலுவில்லாத சட்டங்களை வைத்துக்கொண்டு முழுதாக நீதிமன்ற விசாரணை நடத்தி குற்றவாளிக்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக்கொடுத்திருப்பது இதுவே முதல் முறை” என்கிறார் அவர்.

பல பெண்களின் வெற்றி

இந்த சட்டப் போராட்டத்தில் வேறுபல பெண்களுக்கும் பங்கிருக்கிறது. “தொடக்கத்தில் எங்களிடம் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்லத் தயாராக இருந்தார்கள். ஆனால், போலீஸ் விசாரணையில் பெயர், முகவரி எல்லாம் கேட்டபின் பலர் பின்வாங்கிவிட்டனர். கடைசியாக எங்களிடம் இருந்தது சுமார் 20 பேர்தான். கடைசிவரை உறுதியாக நின்று போராடிய அந்தக் குழந்தைகள்தான் உண்மையான போராளிகள்” என்று பெருமைபொங்கச் சொல்கிறார் நிர்மலாராணி,

மதுரை மாவட்ட எல்.ஐ.சி. துணைக்குழுவைச் சேர்ந்த ஊழியர்கள், நீதிமன்ற வழக்குக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் தமிழ் தெரியாத விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல உதவிகளைச் செய்ததை நினைவுகூர்கிறார் பொன்னுத்தாய். அரசுத் தரப்பு வழக்கறிஞர் பரிமளாதேவி, மாதர் சங்க ஊழியர்கள் மற்றும் பொதும்பு கிராம மக்கள் பலரும் தங்களது நீதிப் போராட்டத்துக்கு உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

தீர்ப்புக்குப் பின்

இந்த வழக்கு நடக்கும்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்குத் திருமணம் நடந்துவிட்டது. தீர்ப்பால் கிடைக்கப்போகும் அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்களின் உயர்கல்விக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து பொதும்பு கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற நிர்மலாராணியும் பொன்னுத்தாயும் மற்ற பெண்களும் உறுதி எடுத்துள்ளனர். அதிலும் இவர்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்.

நீதிபதியின் பரிவு, ஊடகங்களின் கண்ணியம்

எவ்வளவு வலுவான சட்டங்கள் இருந்தாலும் வழக்கை நடத்தும் நீதிபதி நுண்ணுணர்வோடும் அதைக் கையாண்டால்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. “நீதிபதி சண்முகசுந்தரம், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்ணியத்துடனும் பரிவுடனும் நடத்தினார். எதிர் தரப்பு வழக்கறிஞர்கள்கூட எந்த இடத்திலும் குழந்தைகள் முகம்சுளிக்கும்படியான கேள்விகளைக் கேட்கவில்லை” என்று நிர்மலா ராணி, பொன்னுத்தாய் இருவரும் பாராட்டுகின்றனர்.

மதுரை ஊடகங்களின் செயல்பாட்டையும் நிர்மலாராணி பாராட்டுகிறார். “அடையாளம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தால் பல குழந்தைகளின் பெற்றோர், அரசு கொடுத்த நஷ்டஈட்டைக்கூட வாங்க மறுத்துவிட்டனர். ஆனால், ஒரு குழந்தையின் அடையாளம்கூட வெளியே தெரியவில்லை. அந்த அளவு ஊடகங்கள் இதை மிகக் கவனமாகவும் அதே நேரத்தில் போதுமான அக்கறையுடனும் கையாண்டன” என்கிறார் நிர்மலாராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x