Published : 15 Oct 2017 12:16 PM
Last Updated : 15 Oct 2017 12:16 PM

வான் மண் பெண் 27: நோபல் அமைதிப் புறா!

ஆகஸ்ட் 6, 1945!

முதல் அணுகுண்டு பூமியின் மீது விழுந்தது.

முதல் நொடி, வெண்மையான பிரகாசம். தகிக்கும் வெப்பம்.

முதல் நாள், நகரம் முழுக்க நெருப்பு. மனிதர்களின் தோல் கருகியது.

முதல் வாரத்தில், கதிரியக்கத்தால் பலர் மரணமடைந்தனர்.

முதல் ஆண்டு, கதிரியக்கத்தால் நிலம், நீர், கால்நடைகள், காற்று யாவும் மாசுபட்டன.

முதல் பத்து ஆண்டுகள். அதிர்ஷ்டவசமாகச் சிலர், கதிரியக்கத்தின் காரணமாக ஏற்படும்

புற்றுநோயிலிருந்து தப்பித்தார்கள். ஆனால், நமக்கும் புற்றுநோய் வருமோ என்று

அஞ்சி அஞ்சியே வாழ்ந்தார்கள்.

முதல் தலைமுறை (சுமார் 30 ஆண்டுகள்). அணுகுண்டு வீசப்பட்டபோது, அதில்

பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் எந்தவொரு குறையும் இல்லாமல் பிறந்திருந்தால் ரொம்ப

சந்தோஷப்பட்டார்கள்.

முதல் 70 ஆண்டுகள். அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரையிலும் சிகிச்சை

எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருப்பது ஒருவகையில் ஆச்சரியம்தான்!

இப்படி ஒரு சூழல் நாளை நமக்கும் நிகழலாம். அதனால்தான் பலர் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று போராடிவருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர் பீட்ரிஸ் ஃபின். அணு ஆயுதங்களை இல்லாமல் செய்வதற்காக இவரது தலைமையில் இயங்கும் ‘ஐகேன்’ (அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேசப் பிரச்சாரம்) அமைப்புக்கு 2017-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது!

சர்வதேசக் கல்வி ஆர்வம்

1982-ம் ஆண்டு சுவீடனில் பிறந்தவர் பீட்ரிஸ் ஃபின். சிறு வயதிலிருந்தே சர்வதேசக் கல்வி, சர்வதேசப் பிரச்சினைகள், சர்வதேச உறவுகள் போன்றவற்றின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் புலத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். நாடுகளுக்கு இடையேயான மோதல், சர்வதேசப் பாதுகாப்பு, அணு ஆயுதப் பிரச்சினை ஆகியவை அவர் கவனம் செலுத்திய முக்கியத் துறைகள்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே ‘போர் நிறுத்தத்தில் பெண்களின் சக்தி’ என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றினார். அங்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொண்டதுடன், ஜெனீவாவில் நடந்த அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டிலும் கலந்துகொண்டு, பிற்கால பிரச்சார வாழ்க்கைக்குத் தன்னைத் தகுதிபடுத்திக்கொண்டார். படிப்பு முடிந்த பிறகு சில காலம் வங்கியில் பணியாற்றிவிட்டு, லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் சர்வதேசச் சட்டப் புலத்தில் முதுநிலைச் சட்டம் படித்தார் பீட்ரிஸ்.

அணு ஆயுதங்கள் வேண்டாம்

இன்று, உலகின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகக் கருதப்படுவது பருவநிலை மாற்றம். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரச்சினை, அணு ஆயுதங்கள். அணு ஆயுதங்கள் வெடித்தால் பூமி இப்போதிருக்கும் நிலையைவிடப் பல மடங்கு சூடாகி, உலகின் பருவநிலை மேலும் கொதிநிலையை அடையும். ஆனால், அப்போதிருக்கும் பருவ நிலையால் மனிதர்கள் இறப்பதைக் காட்டிலும் அணு ஆயுதங்கள் வெடிக்கும் நொடியில், மரணிக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

அண்டை நாடுகள் தொடுக்கும் போர்களைச் சமாளிக்கவே அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக எல்லா நாடுகளும் சொல்கின்றன. ஆனால், ‘அதைப் பயன்படுத்தும் முதல் நாடாக நாங்கள் இருக்க மாட்டோம்’ என்றும் நேர்முரணாக சொல்கின்றன. பல நேரம் போர்களைவிட நாடுகளுக்கு இடையேயான, இரு நாட்டு அதிபர்களுக்கு இடையேயான இணக்கமற்ற தன்மைதான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு இட்டுச் செல்கிறது. சமகால உதாரணம், அமெரிக்காவும் வடகொரியாவும்.

அணு ஆயுதங்களின் விளைவுக்கு உதாரணமாக, ஹிரோஷிமாவும் நாகசாகியும் நம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றன. எனவே, இன்னொரு ‘அணு குண்டுப் பொழிவு’ தேவையில்லை என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலர் இணைந்து 2007-ம் ஆண்டில் ஏற்படுத்தியதுதான் ‘ஐகேன்’ அமைப்பு. சுமார் 101 நாடுகளைச் சேர்ந்த, அணு ஆயுதங்களுக்கு எதிரான 468 அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன.

அமைதியை நோக்கி

இந்த அமைப்பில், பீட்ரிஸ் பணிக்குச் சேர்ந்தபோது அமைப்பில் தலைவர் என்று எவருமில்லை. தன்னுடைய தலைமைப் பண்புகள் காரணமாகவே 2014-ம் ஆண்டு, இந்த அமைப்பின் செயல் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த அமைப்பு அசாத்தியமான சாதனையை நிகழ்த்தியது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அணு ஆயுதங்களைத் தடை செய்வது தொடர்பான ஐ.நா.வின் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுவர இந்த அமைப்பு காரணமாக இருந்ததுதான் அந்தச் சாதனை. அதற்காகத்தான் இந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது!

சுமார் 122 நாடுகள், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சர்வதேசச் சட்டமாக மாற 50 நாடுகள் தங்கள் நாட்டில் இந்த ஒப்பந்தத்தைச் செல்லத்தக்கதாக, உறுதிசெய்தால் போதும். இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒன்பது நாடுகள் மட்டும் விலகிவிட்டன. அதில் இந்தியாவும் ஒன்று!

“அணு ஆயுதங்கள் சட்ட விரோதமானவை. ‘அவற்றைப் பயன்படுத்துவேன்’ என்று மிரட்டுவதும் சட்ட விரோதமானது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அவமானகரமானதாக மாற்ற வேண்டும். அதன் மூலம் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், அநீதியானதாகவும் மாற்ற வேண்டும். இப்படி எல்லா நாடுகளும் செய்வதன் மூலம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு நெருக்கடி நிலையை உருவாக்க முடியும். ஒரு கட்டத்தில் அந்த நாடுகளும் அணு ஆயுதங்களைக் கைவிடும். அப்போது, அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு உலகம் பிறக்கும். அதுவரை எங்களின் போராட்டம் ஓயாது!” என்கிறார் பீட்ரிஸ் ஃபின்.

இந்த ‘அமைதி’, அணு ஆயுதங்களை நிரந்தரமாக அமைதிப்படுத்தட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x