Published : 08 Jul 2014 07:15 PM
Last Updated : 08 Jul 2014 07:15 PM
வீரபத்ராசனம் 1
வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.
முதல் நிலை:
# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.
# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.
# வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
# இப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும்.
# கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
# வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மெல்ல மெல்லப் பழக்கினால் சரியாகிவிடும்.
# உடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும்.
# இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள்வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம்.
# இதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம்.
பலன்கள்:
# இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும்.
# மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும்.
# கால்கள் வலுப்பெறும்.
# கழுத்து இறுக்கம் தளரும்.
# தோள்பட்டைகள் வலுப்பெறும்.
# கவனக் குவிப்பு, உடல் ஸ்திரத்தன்மை ஆகியவை கூடும்.
# மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எச்சரிக்கை:
# இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
# கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT