Last Updated : 03 Dec, 2016 12:05 PM

 

Published : 03 Dec 2016 12:05 PM
Last Updated : 03 Dec 2016 12:05 PM

உயிர் வளர்த்தேனே 12: படைப்புத் திறனில் மிளிரும் தானியப் பலகாரம்

அரைத்த கேழ்வரகு மாவு மட்டும் இருந்தால் போதும், பத்து நிமிடங்களுக்குள் விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்திவிடலாம். கேழ்வரகு மாவில் செய்யும் பலகாரங்கள் சத்துமிக்கவை, குறிப்பாக எலும்பை வலுவாக்கும் சுண்ணாம்பு எனப்படும் கால்சியச் சத்து.

உடனடி நொறுவை

கிராமங்களில் சமைப்பதற்கு முன்னர்ப் பசியென்று பிள்ளைகள் பெற்றோரைப் படுத்தி எடுத்தால், ஏதாவது பளபளப்பான பாக்கெட்டுகளில் விற்கும் மாமாங்கம் கழிந்த நொறுவைகளை வாங்கிக் கொறிக்குமாறு சட்டென்று கையில் இரண்டு ரூபாயைத் திணித்து விட மாட்டார்கள்.

கார விரும்பிப் பிள்ளைகளாக இருந்தால், ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்து அதில் நான்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, பன்னீர் தெளிப்பதுபோலத் தேங்காய்ப் பூவைத் தூவி, ஒரு சிட்டிகை சீரகத்தை நுணுக்கிச் சீராகத் தெளித்து, உப்பெடுத்து மாவில் காட்டி, பிடியளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து, மாவு தொண்டையைப் பிடிக்காமல் இருக்க ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் கரண்டியால் மெல்லக் கிண்டுவார்கள்.

இந்தக் கலவையில் அறுசுவையும் இருக்கும், அனைத்துச் சத்துகளும் இடம் பெறும். வயிற்றை வறண்டு போகச் செய்வதாகவோ, சுள்ளென்று காரம் பிடிப்பதாகவோ இல்லாத மேற்படி பண்டம், மறுநாள் காலைக்கடனைச் சுளுவாகத் தீர்த்து விடும்.

பாக்கெட் பண்டம் வேண்டாமே

கண்களைச் சுண்டியிழுத்து உண்ணச் செய்யும் தற்காலப் பாக்கெட் பண்டங்களை அரையும் குறையுமாக மென்று தள்ளும் பிள்ளைகள் பலருக்கும் மலச் சிக்கல் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மலச் சிக்கல், மனச் சிக்கலில் கொண்டுவந்து விடும். உடல் பருமன் தொடங்கித் தோல் ஒவ்வாமைவரை அடுத்தடுத்த நோய்களாகப் பரிணமிக்கும் என்ற உண்மையை இன்றைய அவசர கதியில் பலரும் உணரத் தவறுகிறோம்.

பாக்கெட் நொறுவைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், பிள்ளைகள் விரும்பி உண்ணும்படியான பலகாரங்களை வீட்டிலேயே தயாரிக்கப் பெற்றோர் படைப்பார்வத்துடன் இறங்கிவிட வேண்டும்.

இனிப்பும் உண்டு

சரி, கேழ்வரகு மாவுக்குத் திரும்புவோம். அதே கேழ்வரகு மாவில் இன்ஸ்டன்டாக ஒரு இனிப்பைச் செய்யலாம். அரை கப் மாவில் 30 கிராம் உடைத்த வெல்லம், ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல், அரை ஸ்பூன் நல்லெண்ணெயை விட்டுக் கிளறிக் கொடுத்தால் அற்புதமான இனிப்பு ஓரிரு நிமிடங்களில் தயாராகிவிடும்.

இந்த இனிப்புடன் தேங்காய்ப் பூவும், நல்லெண்ணெயும் கலக்கப் பட்டிருப்பதால் குழந்தைகள் மென்றும், மெல்லாமல் விழுங்கிவிட்டாலும் உணவுத் துகள்கள், செரிமான இயக்கத்தின்போது வயிற்றில் பசையாக ஒட்டாமல் வயிற்றையும், சிறுகுடலையும், பெருங்குடலையும் `பை-பா’ஸில் செல்லும் வாகனங்களைப் போல இலகுவாக விரைந்து கடந்து சென்றுவிடும்.

வறண்ட பண்டங்கள் வேண்டாம்

சூரியக் குஞ்சாக வெப்ப ஆற்றலைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் கேழ்வரகை, மாவாக்கிப் பண்டங்கள் தயாரிக்கிறபோது மிகுந்த கவனம் தேவை. தற்காலத்தில் காராச்சேவு, மிக்சர் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்குக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பலகாரங்கள் வயிற்றுக்குள் போனதும் உடலின் நீர்ச்சத்தைக் கவர்ந்து உபாதைகளை உருவாக்கும்.

எனவே, கேழ்வரகில் இறுகலான பண்டங்களைச் செய்யலாகாது. தற்காலக் குறைந்த உடலுழைப்புக்கு ஏற்ப எளிதில் செரிக்கும்படியாக மெத்தென்ற ஊடுபாவு (Texture) அமையும் விதத்தில் தேங்காய்ப்பூ, நல்லெண்ணெய் போன்றவற்றைக் கலந்தே செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறபோது சத்துகள் சமவிகிதத்தில் கிடைப்பதுடன் மலக்கட்டு ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

விருந்தினரை அசத்தலாம்

சாப்பாட்டு நேரமல்லாத இரண்டுங்கெட்டான் நேரத்தில் நண்பர்களோ தோழிகளோ வீட்டிற்கு வருகிறார்கள். எதையாவது செய்து அவர்களை அசத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்காக ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது ஆபத்பாந்தவன் கேழ்வரகு மாவு. இரண்டு கப் மாவு எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்கள். ஒரு வாழைப்பழத்தை உரித்து ஒன்றிரண்டாகப் பிசைந்து மாவுடன் சேருங்கள்.

ஒரு ஏலக்காய், சுவைக்கேற்ப வெல்லத் தூள் சேர்த்து, நீர் ஊற்றி, தோசைமாவுப் பதத்தைக் காட்டிலும் கெட்டியாக அரைத்து, அதனுடன் அரை மூடி தேங்காய்ப்பூ சேர்த்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஜனகராஜ் சொல்வது போல ‘ஒரு கலக்கு கலக்கி’ தோசைக்கல்லில் அழகான குட்டிக்குட்டி வட்டமாக வார்த்து, நெய் காட்டிப் புரட்டிப் போட்டு எடுத்தால், தேவாலயங்களில் கொடுக்கப்படும் அப்பத்தைப் போன்ற பண்டம் ஆவி பறக்கப் புன்முறுவல் காட்டும். புதுமையான இந்த `கேழ்வரகு அப்பம்’ உடலுக்கு இனிமை சேர்க்கும்.

இதே மாவைப் பணியாரக் கல்லில் ஊற்றிக் குழிப் பணியாரமாகவும் சுடலாம். அல்லது `டுபுக்… டுபுக்…’ என்று குமிழ் விடும் எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். எந்தப் பின்விளைவுகளையும் தராத இந்தப் பலகாரத்தை ஆசை அடங்க எத்தனை தின்றாலும் நம்மைப் பழி வாங்காது. செரிக்கக் கடினமில்லாத இந்த இனிப்பைக் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

மேற்படி மாவில் வெல்லத்துக்குப் பதிலாக ஓமமும், பொடியாக அரிந்த வெங்காயமும், அரிந்த மல்லி, கருவேப்பிலைத் தழைகளையும் சேர்த்துவிட்டால் அற்புதமான காரப் பலகாரமாகிவிடும்.

விறைப்பை விரட்ட

பலர் மனசளவில் இளைஞர்களாக இருந்தாலும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என்னவோ நீரிழிவு பீதியை ஊட்டத்தான் செய்கின்றன. அரிசியைத் தவிர்ப்பதற்காகக் கேழ்வரகு மாவில் தோசை சுடப் புகுந்தால், அது `பாத்துருவோமா ஒரு கை’ என்பதுபோல விறைத்துக்கொண்டு நிற்கும். அப்படிப்பட்ட விறைப்பான கேழ்வரகுத் தோசைக்குப் பதிலாக, சீரான புள்ளிகளிட்ட மெத்தென்ற கேழ்வரகுத் தோசை வார்க்கும் ரகசியத்தை அடுத்த வாரம் பார்த்துவிடுவோம்.

(அடுத்த வாரம்: மெத்தென்று சமைக்கும் ரகசியம்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x