Published : 17 Dec 2016 01:12 PM
Last Updated : 17 Dec 2016 01:12 PM
எனக்குக் கடந்த ஒரு மாத காலமாக வலது தோள்பட்டையில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. நான் ஒரு தைலத்தைத் தினமும் இரண்டு முறை தடவிவருகிறேன், ஆனாலும் நிவாரணம் இல்லை. நான் சிகிச்சை பெற வழி கூறுங்கள்.
- ஹனுமந்த ராவ்,
இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா:
தோள்பட்டையில் வலி என்பது தோளில் உள்ள நோயின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் அல்லது உடலின் வேறு பாகத்தில் இருக்கும் பிரச்சினை தோள்பட்டை வலியாகவும் வெளிப்படலாம். உதாரணமாக, இதய நோய் அல்லது நெஞ்சு எரிச்சல் இருந்தால், அது தோள்பட்டை வலியாக வெளிப்படும் சாத்தியம் இருக்கிறது. தோள்பட்டையில் பலவகையான கோளாறு கள் ஏற்படலாம். ஃபுரோசன் ஷோல்டர், டெண்டினிடிஸ் (Tendinitis) முதலானவை அப்படிப்பட்டவைதான். சரியான தீர்வு காண மருத்துவப் பரிசோதனை அவசியம்.
ஆயுர்வேதத்தில், தோள்பட்டை வலி பல முறைகளில் கையாளப் படுகிறது. வெந்தயம், மஞ்சள் போன்ற பல மூலிகைகள் சேர்த்துச் சிகிச்சை அளிப்பது ஒரு முறை. இதை நாரங்கக் கிழி என்றும் கூறுவார்கள். நஸ்யம் என்று மற்றொரு சிகிச்சையும் உள்ளது, இது மூக்கு வழியாக உடல் நாளங்களைச் சுத்திகரிக்கும் சிகிச்சை. இப்படிப் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில், வெறும் தைலத்தை மட்டும் தடவிவருவது முழு பலனை அளிக்காமல் போகலாம். மேலும் உங்கள் பிரச்சினையைப் பொறுத்துப் பிரசாரிணி போன்ற கஷாயங்களும் அருந்த வேண்டி இருக்கலாம். மருத்துவரை நேரில் அணுகிச் சிகிச்சை விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT