Published : 12 Nov 2016 01:52 PM
Last Updated : 12 Nov 2016 01:52 PM
அரை நூற்றாண்டுக்கு முன்னர்க் கிராமத்துத் தெருக்களில் பருத்திப் பால் விற்பார்கள். தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு முதன்மைத் தொழில் இட்லி வியாபாரம். ஒரு ஊரில் அத்தொழிலை இரண்டு மூன்று பேர் செய்து கொண்டி ருந்தால் நான்காமவர் அவர்களுடன் போட்டிக்குப் போகாமல், கம்பு உருண்டை, பொரிமா உருண்டை, பருத்திப் பால் என்று இறங்கிவிடுவார்கள்.
ஈயம் பூசிய செப்புத் தவலையைப் புளியும் மண்ணும் போட்டு அரக்கத் தேய்த்துப் பொன் நிறத்துக்கு ஜொலிப்பேற்றி, நெற்றிக்கு அடிக்கும் நுணுக்கத்துடன் திருநீற்று பட்டை அடித்து நடுவில் குங்குமப் பொட்டு வைப்பார்கள். இருட்டில் வைத்தாலும் மெர்குரி போன்று ஒளி பொங்கும் அந்தத் தவலையில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் மணக்கும் பருத்திப் பாலைச் சுமந்து, தெருத் தெருவாகக் கூவி விற்பார்கள்.
எனது தந்தை வழிப் பாட்டிக்கு மூச்சிளைப்பு நோய் (ஆஸ்துமா). அன்றாடம் சத்தான ஆகாரம் வேண்டும். ஆனால், சுருக்குப் பையில் முடிந்து வைத்த காசில் அரையணாவைக் கொடுத்துத் தெருவில் விற்கும் பருத்திப் பாலை வாங்கிக் குடிக்கமாட்டார்.
எனவே, அப்பாவின் உத்தரவுப்படி வாரத்துக்கு மூன்று நாளைக்காவது எங்கள் வீட்டில் பருத்திப் பால் காய்ச்சப்படும். நெல்லுக்கு ஓடிய நீரைப் புல்லும் புசிவதுபோல, பாட்டிக்குக் காய்ச்சிய பருத்திப் பாலை நாங்களும் குடிப்போம்.
உடல் பெறும் தனி வனப்பு
பருத்திப் பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் சுவைக்கத் தகுந்தது. அரை கெட்டி உணவு உண்ணத் தொடங்கும் ஆறு மாதக் குழந்தைக்கும் ஏற்றது. காய்ச்சலில் இருந்து மீண்டவர்களின் உடல் உடனடியாக வலுப்பெறுவதற்கும் இந்தப் பாலைக் கொடுக்கலாம்.
வயிற்றைத் தூய்மைப்படுத்த விரதம் இருந்து முடித்த பின்பும் இந்தப் பருத்திப் பால் பொருத்தமாக இருக்கும். பருத்திப் பாலைக் குடிக்க இளம் வயதிலேயே பழகிக்கொண்டால், மேனி நிரந்தரப் பொலிவுடன், திண்மையாக, கச்சிதமான கட்டமைப்புடன் திகழும்.
நம் காலத்தில் ஜிம்முக்குப் போய்ச் செலவிடும் நேரத்தைப் பருத்திப் பால் தயாரிக்கச் செலவிட்டால் காசு, நேரம் விரயம் இல்லாமல் `தஷ்க்கு புஷ்க்கு’ என ஒர்க் - அவுட் செய்யாமலேயே உடல் வனப்பைப் பெறலாம்.
இன்னொரு மாற்று
பருத்திப் பாலுக்கு அத்தியாவசியமான பருத்திக் கொட்டை நம் காலத்தில் எளிதில் கிடைக்குமா என்பது சந்தேகமே. பருத்திப் பாலுக்கு நிகரான இன்னொரு மாற்றுப் பாலும் உண்டு. அதற்குரிய மூலப் பொருட்கள் நம் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்துவிடும். செய்முறையும் மகா எளிமை. இந்தப் பாலும் அனைத்து விதமான சத்துகளை உள்ளடக்கிய இயற்கைப் பால்.
இந்தப் பால், குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயாருக்கும் ஏற்றது. தாயிடம் பால் பற்றாத குழந்தைக்கும் ஏற்றது. தாய்ப்பால், பசும்பால் போன்ற கறந்த பால் வகைகள் ஒவ்வாத குழந்தைகளும் குடிப்பதற்கு ஏற்றது.
பருப்புப் பால்
இந்தப் பாலைத் தயாரிப்பதற்கு நமக்கு வேண்டியதெல்லாம் நன்கு விளைந்த - காய்ந்த வேர்க்கடலைப் பருப்பு ஏழெட்டு, பாதாம் பருப்பு நான்கு, முந்திரிப் பருப்பு நான்கு, மக்காச் சோளம் சுமார் 20 கிராம். இவற்றை இரவில் ஊற வைத்துவிட வேண்டும்.
இவை காலையில் நன்றாக ஊறி இருக்கும். பருப்புக் கொட்டைகளின் எண்ணெய் கைப்புத் தன்மை நீங்கி முளைவிடும் பக்குவத்துக்கு வந்து முழு ஆற்றலைப் பெற்றிருக்கும். ஊறின நீரை வடித்துவிட்டு, புதிய நீர் சேர்த்து மேற்படி கொட்டைகளுடன் கால் மூடித் தேங்காயையும் உடன் சேர்த்து மைய அரைத்து வடித்தால், ஆரோக்கியமான இயற்கைப் பால் நுரைக்கப் நுரைக்க பளீரென்று கிடைக்கும்.
இந்தப் பாலை நேரடியாகவும், அடுப்பில் வைத்து ஒரு கொதிக்குச் சூடேற்றிப் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு முதலில் சிறிதளவு கொடுத்து உடலைப் பழக்கிய பின்பு வேண்டிய அளவுக்குக் கொடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவு என்றாலே அது சுவையற்றதாக மருந்து போல இருக்கும் என்ற மனப் படிமம் நமக்கு ஏற்பட்டுள்ளது. உணவுக்கு அடிப்படையாக உள்ள மூலப் பொருளின் சுவை சிதையாமல் சமைத்து, அச்சுவை குன்றும் முன் உண்பதே உடலுக்கு நன்மை பயக்கும்.
பருத்திப் பால் செய்முறை
அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் காய்ச்சிய முறையில் இருந்து சற்றே மாறுபட்டுத் தற்காலத்துக்கு ஏற்ற செய்முறை பருத்திப் பால் செய்முறை:
தேவையான பொருட்கள் பருத்திக் கொட்டை கால் கிலோ, வெல்லம் 150 கிராம், தேங்காய் ஒரு மூடி, அரிசி மாவு இரண்டு தேக்கரண்டி, சுக்கு பொடி ஐந்து கிராம், ஏலக்காய் ஐந்து.
செய்முறை பருத்திக் கொட்டையை லேசாக நீர் தெளித்துப் பத்து நிமிடம் ஊறவிட வேண்டும். பின்னர்க் கொட்டையைக் கல்லால் தட்டி உடைத்துப் போட்டு நீரில் மூழ்கும்படி எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். ஊறிய கொட்டையை நீரை வடித்து, உடன் தேங்காயைத் துருவி போட்டு ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பெரிய ஜாரில் இட்டு அரைத்து, மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.
வெல்லத்தைத் தனியாகத் தூள் செய்து சுமார் 200 மில்லி நீர் சேர்த்துப் பாகு காய்ச்சித் தூசு, மண் போன்ற கசடுகளை நீக்கிக்கொள்ள வேண்டும. கசடு நீக்கிய பாகுடன் அரைத்து வடிகட்டிய பாலை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். கொதி வந்ததும் ஐந்து நிமிடம் அடுப்பை `சிம்’மில் வைத்துவிட்டுப் பாலைக் கரண்டியால் எடுத்து ஊற்றிப் பார்க்க வேண்டும். மிகவும் நீர் பதத்தில் இருந்தால் கெட்டித் தன்மைக்காகச் சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்துக் கொதியில் ஊற்றிக் கொதி `டுபுக்… டுபுக்’ என வந்து உடைகிற தருணத்தில் சுக்குப் பொடியையும் ஏலக்காய் பொடியையும் போட்டு இறக்கிவிட வேண்டும்.
கமகமக்கும் வாசனையுடன் சுவையான, ஆரோக்கியமான பருத்திப் பால் தயார். ஒரு லிட்டர் அளவில் இருக்கும் இந்தப் பால், ஐந்து பேர் குடிக்கப் போதுமானது.
முதலில் தாய்ப்பால், அப்புறம் தாவரப் பால்
இயற்கையான பால் தயாரிப்பு முறைகள், அவற்றின் ஊட்டச்சத்து பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்தோம். மேற்கண்ட பால் அனைத்தும் தாய்ப்பாலைவிட மேம்பட்டதோ என்ற எண்ணம் குழந்தையை வளர்ப்போர் மனதில் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறது. குழந்தையைப் பொறுத்தவரை தாய்ப்பால்தான் சிறந்த உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
குழந்தையின் அத்தியாவசிய வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு தாய் தாய்ப்பாலையே முடிந்தவரை தர முயற்சிக்க வேண்டும். அதற்குப் பிறகே மேற்கண்ட இயற்கைப் பால்களைத் தர முயற்சிக்கலாம். அதேநேரம் செயற்கையான பால்மாவுகளிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்குப் பதிலாக, செலவு குறைந்த, ஊட்டச் சத்து மிகுந்த இயற்கை பாலை அணுகுவதே சாலச் சிறந்தது.
(அடுத்த வாரம்: ஒவ்வொரு செல்லிலும் தானியங்களின் பெயர் எழுதியுள்ளது)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT