Published : 13 Nov 2022 11:17 PM
Last Updated : 13 Nov 2022 11:17 PM
சென்சார்கள், மெஷின் லேர்னிங், மருத்துவ அறிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு துல்லியமான சுகாதாரத் தளமான ட்வின் ஹெல்த், ஹோல் பாடி டிஜிட்டல் ட்வின்™ என்ற புதிய தொழில்நுட்பத்தைச் சமீபத்தில் அறிவித்தது. இத்தொழில்நுட்பத்துக்கு ட்வின் ஹெல்த் காப்புரிமை பெற்றுள்ளது. இதன் அறிவியல்பூர்வ பரிசோதனை முடிவுகள் டைப் 2 நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிஸீஸ் (NAFLD) போன்ற பிற நாட்பட்ட வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு இத்தொழில்நுட்பம் உதவுவதாகத் தெரிவிக்கின்றன. முக்கியமாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுவதாக அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதென்பது சவாலானது. ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றமும் வித்தியாசமாகச் செயல்படுவதால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிகிச்சை தேவைப்படும். இந்தச் சூழலில் ஜூலை 2021 இல், ட்வின் ஹெல்த் நிறுவனம் டைப் 2 நீரிழிவு, நாட்பட்ட வளர்சிதை மாற்றம் ஆகிய நோய்களிலிருந்து மீட்சியடைவதற்கும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் ஹோல்-பாடி டிஜிட்டல் ட்வின்™ எவ்வாறு உதவும் என்பதைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவுகள், நீரிழிவு, ப்ரீ-டயாபட்டீஸ், உடல் பருமன் போன்ற நிலைமைகளைத் தடுக்கவும், மீட்சியடையவும் ஹோல்-பாடி டிஜிட்டல் ட்வின்™ உதவும் என்பதை நிரூபித்தன. அதேபோன்று உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களைக் கணிசமாகக் குணப்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று அந்த முடிவுகள் உணர்த்தின. அமெரிக்கன் டயாபடீஸ் அசோஸியேஷன், அமெரிக்கன் அசோஸியேஷன் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி, இன்டெர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன், அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் & ட்ரீட்மென்ட்ஸ் ஃபார் டயாபடீஸ் (ATTD) ஆகியவற்றால் இந்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இது பற்றிப் பேசிய ட்வின் ஹெல்த்-இன் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரமேஷ் ஷாமன்னா, "நவீன மருத்துவ அறிவியல், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளுக்கான மூல காரணத்தைக் கண்டு அதை நிவர்த்தி செய்வதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். மூன்றாண்டுகளுக்கு முன் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 13000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்." என்று தெரிவித்தார். டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களை வழக்கமான மருந்து எடுத்துக் கொள்ளும் நிலையிலிருந்து, மருந்திலா ஒரு வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலை தங்கள் தொழில்நுட்பம் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என ட்வின் ஹெல்த்-இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஷஷாங்க் ஜோஷி தெரிவித்தார்.
இதே கருத்தை ஆமோதிக்கும் விதமாகப் பேசிய ட்வின் ஹெல்த் நிறுவனத்தின் இணை நிறுவனரான முனைவர் மாலுக் முகமது "டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தானதாகும். எங்களின் ’ஹோல் பாடி டிஜிட்டல் ட்வின்™’ நோயாளிகளின் உடல்களிலிருந்து பெறப்படும் நிகழ்நேர வளர்சிதை மாற்றத் தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் துல்லியமான சிகிச்சை நோயாளிகளிடமும் சுகாதார சேவை வழங்குநர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நாம் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான கட்டணம் குறித்த கேள்விக்கு, முதலாண்டுக்கு 54 ரூபாய் என்கிற அளவிலும், அதன் பின்னர் 24 ஆயிரம் என்கிற அளவிலும் அது இருக்கும் என்று முனைவர் மாலுக் முகமது தெரிவித்தார். மேலும், இந்தத் தொழில்நுட்பத்தில் மருத்துவர்களின் உள்ளீடு இருப்பதால், ஏற்கெனவே பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் கடிகாரங்கள், ஹெல்த் செயலிகள் போன்றவற்றைவிட இது மேம்பட்டது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் நேரடி மருத்துவக் கண்காணிப்பை விட இது மேம்பட்டதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே? பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கு இது வரும்போதே இந்தக் கேள்விக்கான உண்மையான பதிலை நாம் அறிய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT