Last Updated : 12 Nov, 2016 01:59 PM

 

Published : 12 Nov 2016 01:59 PM
Last Updated : 12 Nov 2016 01:59 PM

சந்தேகம் சரியா 9: பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா?

தோல்கள் என்றாலே அவை தேவையற்றவை என்று நாம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத்துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.

ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க்கரை உடனே அதிகரிக்கும் தீமையையும் ஏற்படுத்தும்.

தோலுள்ள ஆப்பிளில் உள்ள சத்துக்கள் விவரம்: நார்ச்சத்து 5 கி., கால்சியம் 13 மி.கி., பொட்டாசியம் 239 மி.கி.; தோல் நீக்கப்பட்ட பழத்தில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து 3 கி., கால்சியம் 11 மி.கி. பொட்டாசியம் 194 மி.கி.

கொய்யாப் பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு. சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங்களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப்பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குணமும் இவற்றுக்கு உண்டு. எனவே, உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் புண்கள் விரைவில் ஆறும். நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்துவரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.

வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டுபண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப்படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப்பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.

இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுந்துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக்காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக்கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்துவிடும்.

தவிர பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும்போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதே நேரம், எந்தப் பழம் என்றாலும் தண்ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பிறகே சாப்பிடவும் சமைக்கவும் செய்ய வேண்டும்.

ஆர்கானிக் பழங்களே நல்லவை!

இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டுப் பழங்களானாலும் சரி, வெளிநாட்டுப் பழங்களானாலும் சரி, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன. இப்பழங்களில் இந்த வேதி நச்சுகள் இறங்கிவிடுகின்றன. மேலும், இவை சந்தையில் விற்பனைக்கு வரும்போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக்கவும், பழங்களின் தோலில் பலதரப்பட்ட வேதிப்பொருட்களைத் தடவுகிறார்கள்.

இவை நம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கின்றன. இவற்றைக் கழுவினாலும் இந்த வேதிப்பொருட்கள் முழுவதுமாக நீங்க வழியில்லை என்றே அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிட விரும்புபவர்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் வகைப் பழங்களைப் பருவத்துக்கு ஏற்பச் சாப்பிடுவதே நல்லது.

(அடுத்த வாரம்: பழங்களை தோலுடன் சாப்பிடலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x