Published : 26 Nov 2016 10:06 AM
Last Updated : 26 Nov 2016 10:06 AM

மரபு மருத்துவம்: உண்ட பிறகு குறுநடை கொள்வோம்

‘சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா?’ என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ‘உண்டபின்பு குறுநடை கொள்வோம்’ என்ற சித்தர் பாடல் வரி விவாதம் செல்ல வேண்டிய திசையைச் சொல்கிறது. அதாவது சாப்பிட்ட பிறகு மெதுவாக, குறைந்த தொலைவுக்கு நடை அவசியம் என்றே சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.

எது தவறு?

அதற்காகச் சாப்பிட்டவுடன் நான்கு கிலோ மீட்டர் வேகத்தில், வேக நடை போட்டால் செரிக்காமை, எதிர்க்களித்தல், மலக்கட்டு போன்றவை உண்டாக வாய்ப்பு அதிகம். சாப்பிட்டவுடன் அதிவேக வாக்கிங், ஜாக்கிங் செய்வது முற்றிலும் அபத்தம். இன்றைய அவசர யுகத்தில், காலை உணவை எடுத்துக்கொண்ட மறுநொடியே, அரக்கப் பறக்க வேக நடையுடன் அலுவலகத்துக்கும் பள்ளிகளுக்கும் செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். சாப்பிட்டவுடன் அதிவேகமாக நடப்பவர்களின் உணவு செரிமானம் பாதிக்கப்படும்.

அதேநேரம் சாப்பிட்டவுடன் உறங்குவதும், நகராமல் ஒரே இடத்தில் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்வதும்கூடத் தவறுதான். சாப்பிட்டவுடன் தூங்குவது அல்லது அதிகமாக வேலை செய்வதால் மண்ணீரல் நோய் உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம்.

எது சரி?

உணவு உண்ட பின்பு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக நடப்பது ஆரோக்கியத்தைத் தரும். உணவுக்குப் பின் குறுநடை போடுவதால், உணவு செரிப்பதற்குத் தேவையான சுரப்புகளின் செயல்பாடுகள் சிறப்படையும், உணவு எதிர்க்களித்தல் தொந்தரவு மறையும், கொழுப்புச் சத்தின் அளவு குறையும், நல்ல உறக்கமும் கிடைக்கும் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.

வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை (Gastric emptying) விரைவுபடுத்தப்பட்டு செரிமானம் முறைப்படுத்தப்படும். இரவு உணவுக்குப் பின் உடனடியாகப் படுத்து உறங்கிவிடாமல், ரத்தஉறவுகளோடு சிறிது தூரம் மெதுவாக நடப்பது உடல்நலனை மட்டுமல்ல, உறவுகளின் பலத்தையும் சேர்த்துக் கூட்டும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x