Published : 26 Nov 2016 10:06 AM
Last Updated : 26 Nov 2016 10:06 AM
உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் இன்றைக்குப் பரவலாகிவிட்டன. இவற்றைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எளிய பயிற்சி, நடைப்பயிற்சி. ஆனால், எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் உடல் அமைப்பைப் பொறுத்தும் வேறுபடுகிறது.
அந்த வகையில் எத்தனை கலோரிகளைக் குறைக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதையும், உண்மையில் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்றும் கண்காணித்து வழிநடத்துகிறது ‘Pedometer’ என்கிற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.
கலோரி அளவு
ஒரு முறை ஸ்டார்ட் பட்டனை அழுத்திவிட்டுக் கைபேசியை உங்கள் கைகளிலோ, பாக்கெட்டிலோ அல்லது கைப்பையிலோ, எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு உடன் எடுத்துச்சென்றால் போதும். நாம் நடக்கும் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து, தேவையான அளவுகளைத் துல்லியமாகக் கூறுகிறது.
எவ்வளவு தூரம், எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகத்தில், எத்தனை அடிகள் நடந்தோம், அதில் எவ்வளவு கலோரிகள் குறைந்தன என்று தனித்தனியாக ஒவ்வொன்றின் அளவீட்டையும் இந்த ‘ஆப்‘ காட்டும். நீங்கள் செய்யும் நடைப்பயிற்சியின் அளவை இந்தக் கையடக்க ‘ஆப்’ மூலமாகச் சரியாகத் தெரிந்துகொள்ளலாம்.
இன்றே, இப்போதே
உங்களுக்குத் தேவையான நேரம், தேதியில் அளவை முன்னிலைப்படுத்திக் காட்டும் வகையிலும் இந்த ‘ஆப்’பை அமைத்துக்கொள்ளலாம். இடது பக்கமாக ஸ்வைப் செய்தால் முந்தைய நாள்வரை பதிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
துல்லியமான விவரங்களைப் பெற உங்களின் வயது, எடை, பாலினம் ஆகிய தகவல்களை இதில் பதிவு செய்ய வேண்டும். நடைப்பயிற்சியின் பலனை அறிவதற்கு இப்படி உங்கள் கையிலேயே ஒரு நண்பன் இருக்கும்போது, இனி எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே ‘Pedometer App’ பதிவிறக்கம் செய்து நடைப்பயிற்சியைத் தொடங்குங்கள்.
- விஜயஷாலினி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT