Published : 19 Nov 2016 12:24 PM
Last Updated : 19 Nov 2016 12:24 PM
ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ; நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டுவந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும்.
நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.
சந்தைத் தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை. பொருள் போக்குவரத்து மலிந்துவிட்ட இன்றைக்கு, நம் கண்ணெதிரில் விளை யாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப் பட்டியலில் நுழைத்து இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன.
இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட் டோம்? அது சரியா? நமது தானியங்களின் முக்கியத்துவம் என்ன என்கிற கேள்விகளுக்கு மட்டும் விடை தேடுவோம்.
ஊக்கச் சக்தி
ஆற்றுப் பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்துவந்தார்கள். இந்தத் தானியங்களைக் களத்தில் அடித்துத் தூற்றி மணியாக்கி மூட்டை கட்டியதும், அவை நேராகச் சந்தைக்குப் போனதில்லை.
பெரும் உடலுழைப்பைக் கோரும் வேளாண் கலாசாரத்தில் ஊக்கச் சக்தியாக இருந்தவை மேற்படி தானியங்களே. நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை. ஆண்டுக்கு ஒன்பது மாதம் மண்டையைப் பிளக்கும் வெயிலைக் குடித்து விளைபவை.
வெயிலை வழங்கும் சூரியனின் ஆற்றல், நீரின் ஆற்றலைக் காட்டிலும் பன்மடங்கு வலுவானது. நமது தானியங்களைக் கதிரிலிருந்து பிரித்ததும் அவை ஒவ்வொன்றும் சூரியக் குஞ்சுகளாக மின்னுவதைப் பார்க்கலாம்.
ஏகபோக அரிசி
‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அன்றாடப் பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாகப் பணப் பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்பு மிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.
அதிக நீர் குடிக்கும், அதிகப் பூச்சி மருந்தைக் கோரும் குறுகிய காலப் பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக் கலாசாரம் சிதைந்து, கலவையான உணவு அகற்றப்பட்டு நோய்கள் மலியத் தொடங்கின. இதற்குப் பின்னுள்ள அரசியலைப் பேசுவதானால், நாம் தடம் மாற வேண்டியிருக்கும். எனவே, சிறுதானிய உணவு குறித்து மட்டும் பேசுவோம்.
சட்டென்று முடியும்
சிறுதானிய உற்பத்தி குறைந்து வழக்கொழிந்துவிட்டாலும், இன்றைய அவசர வாழ்க்கை முறைக்குச் சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது.
பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்குப் பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானியச் சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.
உயிரற்ற மாவு
அரிசியும், உளுந்தும் போட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்டிலித் தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாகச் சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்குக் குளிர்ப் பெட்டியில் பதனப்படுத்தி வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது. இந்த உண்மையை நம்மில் பலர் உணர்வதில்லை.
உயிராற்றலை இழந்த மாவில் சமைக்கப்படும் பண்டங்கள் உடலுக்கு எந்த விதமான சக்தியும் வழங்குவதில்லை. அது மட்டுமல்ல அது உடலுக்குப் பெருஞ்சுமையாகி நோய்களின் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறது. குளிர்பதனப் பெட்டியில் வைத்த மாவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிற மறு வாரமே, தைராய்டு பிரச்சினையில் இருந்து பலர் விடுபடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
எப்போதும் செய்யலாம்
கைவசம் எப்போதும் கேழ்வரகு உலர் மாவு இருக்குமானால், நேரத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அவ்வப்போது பத்து விதமான பண்டங்களைச் சமைத்து உண்ணலாம்.
வீட்டுத் தொட்டி முருங்கைச் செடியில் பறித்த பிடியளவு முருங்கைக் கீரை, அரை மூடி தேங்காய், இரண்டு பெரிய வெங்காயம், ஒரு காய்ந்த மிளகாய், அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி நெய், இருநூறு கிராம் கேழ்வரகு மாவு இருந்தால் போதும் சத்தும் சுவையும் நிறைந்த நான்கு ராகி ரொட்டிகளை இரண்டு பேர் தாராளமாக உண்ணலாம். தேங்காய்ப்பூ சேர்க்கப்பட்டுள்ளதால் மெல்லுவதற்கும் மெத்தென்று இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. இதைக் காட்டிலும் துரித உணவு வேறொன்று இருக்கிறதா என்ன?
அதே மாவில் தேங்காய்ப்பூ, ஒரு கற்பூரவல்லி வாழைப்பழம், நாட்டு வெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, தோசைக்கல்லில் ஊற்றி நெய் காட்டி எடுத்தால் சிறு குழந்தைகள் விரும்பும் அதி சத்து மிகுந்த இனிப்பு `ராகி அப்பம்’ தயார்.
ஆக, மாற்றமில்லாத நம்முடைய உணவுச் சிந்தனையில் இருந்து சற்றே விலகிச் சிறுதானியங்களைப் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாலே போதும். படைப்புத் திறனுடன் புதிய புதிய சத்தான பண்டங்களை மிகக் குறைவான நேரத்தில் சமைத்துவிட முடியும். சிறுதானியங்கள் நெருப்புச் சத்து கொண்டவை என்பதால், உடல் பெருக்கத் தொல்லையில் இருந்து விடுபட்டு `சிக்’கென்ற உடலமைப்பை வெகு விரைவில் அடைய முடியும்.
(அடுத்த வாரம்: ராகி எனும் அவசர நண்பன்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT