Last Updated : 22 Oct, 2016 12:54 PM

 

Published : 22 Oct 2016 12:54 PM
Last Updated : 22 Oct 2016 12:54 PM

உயிர் வளர்த்தேனே 06: ததும்பும் உயிர்ச்சத்தும் தாதுச்சத்தும்

அரிசிக் கஞ்சியை அனைத்து வயதினரின் உடலும் எளிதில் ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் தென்னிந்திய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரிசிப் பயன்பாட்டாளர்களே. நம்முடைய மரபணுவில் அரிசி ஏற்புத் திறன் பொதிந்திருக்கிறது.

ஆனால் ‘இன்றைய அரிசி’போதிய சத்துகளை நம் உடலுக்கு அளிப்பதாக இல்லை. ‘இன்றைய’ என்பதை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் எடைக்கு எடை அதில் உறைந்துள்ள வேதிக் கூறு. அத்துடன் அரிசியின் மிகைப் பயன்பாடு உடலுக்குத் தொல்லை தருவதாகவும் இப்போது மாறிவிட்டது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

கோலோச்சும் கேழ்வரகு

அரிசிக்கு அடுத்தபடியாகத் தென்னிந்தியர்களின் உடல் அதிகமாக ஏற்றுக்கொள்வது சிறுதானியங்கள். அதிலும் தலைமைப் பீடத்தைப் பிடித்துக் கோலோச்சுவது தென்னகமெங்கும் ராகி என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் கேழ்வரகு. தென் தமிழகத்தில் கேப்பை என்றும், வட மாவட்டங்களில் கேவுர் என்றும் இதைக் கூறுவார்கள்.

‘கேப்பவன் கேனையனா இருந்தால் கேப்பையில நெய் வடியுமாம்’ என்றொரு கிராமப் பழமொழி உண்டு. இது வெறும் கே கே ரைமிங்குக்காக மட்டும் சொல்லப்படுவதல்ல. அர்த்தம் பொதிந்ததும்கூட.

மற்ற சிறுதானியங்களை இடித்துக் கூழாக்கினால் மேலே நெய் ஊற்றியது போல மினுமினுப்பு தென்படும். எடுத்து வாயில் போட்டால் நொழுநொழுவென்று வழுக்கிக் கொண்டு இரைப்பையைச் சென்றடையும்.

ராகியில் அந்தத் தன்மை கிடையாது. கொஞ்சம் வறண்ட தன்மை உடையது; மிகவும் கெட்டியானது. ராகியைத் திருகையில் இட்டு மாவாகத் திரிக்கும் வேலை என்றால் கடும் உழைப்பாளியின் தோள்பட்டையும் கன்றிப் போகும். அத்தனை வலுமிக்க தானியம் ராகி.

களியாக உண்டால் உடலின் நீரை ஈர்த்துக்கொள்ளக் கூடியது. புதிதாக உண்ணும் சிலருக்கு மலம் கட்டும். அதே ராகியைக் கூழாக்கி உண்டால் மலத்தை இளக்கும். எந்த வடிவத்தில் உண்டாலும் ‘இன்ஸ்டண்ட் எனர்ஜி’ தரக்கூடியது ராகி.

தானியங்களின் வாசம்

மற்ற சிறுதானியங்களை எவ்வளவுதான் பதப்படுத்திவைத்தாலும் ஓரிரு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. வேளாண்குடி மக்கள் தங்களுடைய தானியங்களில் சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி என்ற வரிசையில் ஒவ்வொன்றாகக் காலி செய்துகொண்டே வந்து, கடைசியாகத்தான் கேழ்வரகுக் குதிரின் கொண்டியை விலக்குவார்கள்.

விவசாயிகள் வீட்டில் மரப்பலகையால் செய்த ஆறடி அல்லது எட்டடி உயரம், ஆறடி நீள - அகலம் உடைய குதிர் இருக்கும். அதன் அடிப்பகுதியில் அரையடி சதுரத்துக்குச் சின்னக் கதவைப் பொருத்தி, அதில் தாழ்ப்பாளும் பூட்டும் போட்டு வைத்திருப்பார்கள். முதுகிழவியின் சுருக்குப் பையில் பச்சைக் களிம்பேறி சாவி மாதக்கணக்காக உறங்கிக் கிடக்கும். தாங்கு தாங்கென்று நிலம் அதிர நடக்கும் முதுகிழவி பக்கத்தில் வந்தாலே தானியங்களின் கலவை வாசம் அடிக்கும்.

வியப்பூட்டும் நுட்பம்

தானியங்களைப் புழு பூச்சி பிடிக்காமல் இயற்கை வழியில் பாதுகாக்கும் முறையைத் தமிழர்கள் கற்று வைத்திருந்தார்கள். அந்த முறை எந்தத் தொழில்நுட்பவியலாளருக்கும் வியப்பூட்டுவது. உழைப்பைத் தவிர பைசா செலவு வைக்காதது, அந்தப் பாதுகாப்பு முறை.

பெரும் பெரும் தாழியிலோ அல்லது குதிரிலோ (தானியச் சேமிப்புக் குதிர் இன்று சுத்தமாக வழக்கொழிந்து விட்டது) சுக்காகக் காய வைத்த தானியத்தை நிரப்பி கொள்கலனைச் சுற்றிலும் வைக்கோலைத் தூவி, மெலிதாக அனல் ஏற்றுவார்கள். உள்ளிருக்கும் காற்று வெப்பத்தில் வெளியேறியதும் நிழலில் காய வைத்த நொச்சியிலை, வேப்பந்தழை ஆகிய பூச்சிக் காப்பு இலை தழைகளை அரையடி உயரத்துக்குப் போட்டு, அதன் மீது ஒரு அடுக்கு வரகுத் தாளைப் போடுவார்கள். வரகுத் தாள் நீரைக் கடத்தாது, இற்றுப் போகாது என்பதுதான் காரணம். அதன் மீது கால் அடி உயரத்துக்குக் குழைத்த சேற்றை இறுகப் பூசிவிடுவார்கள்.

இப்படி தானியத்தைச் சேமித்த விவசாயி, வங்கி இருப்பை எட்டு இலக்கத்துக்கு உயர்த்திக்கொண்டவர் போல இறுமாப்புடன் இருப்பார்.

ரகசியச் சேமிப்புக் கிடங்கு

பழைய கோவை, சேலம் மாவட்டங்களில் ராகியை நிலத்திலேயே அடித்துத் தூற்றி மணியாக்குவார்கள். நிலத்தின் ஒரு மூலையிலேயே பத்தடி ஆழத்தில் சுற்றிலும் பலகைக் கல் பதித்து உள்ளே ராகியைக் கொட்டி மேற்சொன்ன விதத்தில் சேறு பூசி, நீர் கசியாத வண்ணம் அதன் மீது கல் பலகையை ஒரு அடுக்கு வைத்துக் காட்டுச் செடிகளை வளர்த்துவிடுவார்கள். அதற்குக் கீழே ஒரு தானியக் கிடங்கு இருப்பதற்கான எந்தத் தடயமும் தெரியாது.

குறுநில மன்னர்களுக்கிடையே போர் ஏற்பட்டால் படைச் சிப்பாய்கள் முதலில் ஆடுமாடுகளை இழுத்துச் செல்வதும், தானியங்களைக் கொள்ளையடிப்பதும் வழக்கமாக இருந்தது. அல்லது வீட்டுடன் சேர்த்துத் தானியக் குதிருக்கும் தீ வைத்து விடுவார்கள். அதனால் கொள்ளையில் இருந்தும் தீவைப்பில் இருந்தும் தானியங்களைப் பாதுகாக்க நிலத்தடியில் சேமித்து வைத்து, போர் அடங்கிய காலத்தில் எடுத்துப் பயன்படுத்துவது அந்நாளில் பழக்கமாக இருந்தது.

மிகு விளைச்சல் காலத்தில் ஊர்ச்சமூகம் இவ்வாறு தானியத்தைச் சேமித்து வைத்துப் பஞ்ச காலங்களில் பயன்படுத்துவதும் உண்டு.

ததும்பும் உயிர் ஆற்றல்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சத்தீஸ்கர் அகழாய்வில் மண் குடுவையில் சேமிக்கப்பட்ட ராகி கண்டெடுக்கப்பட்டது. அதன் வயது கொஞ்சமில்லை நண்பர்களே… 1200 ஆண்டுகள்!

அந்த ராகி உளுத்துப் புழுபூச்சி பிடிக்காமல் இருந்தது என்பதுகூட வியப்பில்லை; முளைக்கும் திறனோடு இருக்கிறதா என்பதை அறிய மண்ணில் தூவிப் பார்த்தார்கள். மண்ணை முட்டி பிளந்து, வெளிர் பச்சைத் தளிர் விட்டு, ஆய்வாளர்களைக் கண்டு சிரித்தது அந்த ராகிப் பயிர்.

இப்படிப்பட்ட ராகியின் உயிர் ஆற்றலை, புதிதாக நானும் எதற்கு விளக்கிச் சொல்ல வேண்டும்?

(அடுத்த வாரம்: கன்றுக்குட்டியும் குடிக்கும் தானியப்பால்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x