Published : 22 Oct 2016 12:41 PM
Last Updated : 22 Oct 2016 12:41 PM
இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புக்கும் பார்க்கின்ஸன் நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சியின் விளைவாக மேற்கண்ட நோய்களுக்குத் தீர்வு காண்பது விரைவடையலாம்.
யோஹினொரி ஒசுமி
ஜப்பானின் ஃபுகோகா நகரில் 1945-ல் பிறந்த யோஹினொரி ஒசுமி, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1974-ல் நியூயார்க் சென்று அங்குள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்தார். 1977-ல் நாடு திரும்பிய அவர், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது ‘புத்தாக்க ஆய்வுகளுக்கான டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழக’த்தில் பேராசிரியராக இருக்கிறார்.
நமது செல்களுக்குள் வெவ்வேறு பணிகளுக்கு என பிரத்யேக அறைகள் உண்டு. அப்படிப்பட்ட அறைகளுள் ஒன்று லைஸோஸோம்களால் ஆனது. அதில் செல் பொருட்களின் செரிமானத்துக்கான நொதிகளும் (enzymes) உள்ளன. ஆமாம், குடலில் மட்டுமல்ல செல்களுக்கு உள்ளேயும் செரிமானச் செயல்பாடு நடைபெறுகிறது. ஆட்டோஃபெய்கசோம் (autophagosome) என்ற புதிய, நுண்ணிய பை ஒன்று செல்லுக்குள்ளே கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆட்டோஃபெய்கசோம் உருவாகும்போது, செல்லுக்குள் சேதமடைந்திருக்கும் புரதங்கள், நுண்அங்கங்கள் போன்ற செல் உட்பொருட்களை விழுங்கிவிடுகிறது.. இறுதியாக லைஸோஸோமுடன் அது கலந்துவிடுகிறது; உட்பொருட்கள் யாவும் மேலும் நுண்ணிய அங்கங்களாகச் சிதைவடைகின்றன. செல்லின் புத்துயிர்ப்புக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் அடிப்படைப் பொருட்களையும் இந்தச் செயல்முறை செல்லுக்கு வழங்குகிறது.
பாலூட்டிகளின் செல்களில் காணப்படும் லைஸோஸோம் போல, ஈஸ்ட்டில் காணப்படும் பெரும் அறைதான் வாக்யூயோல் (vacuole). இந்த வாக்யூயோலைச் சிதைவுறச் செய்யும் நொதிகளற்ற ஈஸ்ட்டை ஒசுமி உருவாக்கினார். அந்த ஈஸ்ட் செல்கள் உணவின்றி இருந்தபோது ஆட்டோஃபெய்கசோம்கள், வாக்யூயோலில் விரைவாகத் திரள ஆரம்பித்தன. ஈஸ்ட்டுகளிலும் ‘தன்னங்க உட்கொள்ளல்’ (autophagy), அதாவது தன் செல்களின் உட்பொருட்களையே உட்கொள்ளும் செயல்பாடு இருப்பதை ஒசுமியின் பரிசோதனை நிரூபித்தது. இதன் அடுத்த கட்டமாக, ஈஸ்ட்டுகளின் ஆயிரக்கணக்கான செல்திரிபுகளை (mutant) ஆராய்ந்துபார்த்த ஒசுமி, ‘தன்னங்க உட்கொள்ள’லுக்கு அவசியமான 15 மரபணுக்களைக் கண்டறிந்தார்.
2016-ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு
2016-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஜப்பானியரான யோஹினொரி ஒசுமிக்கு வழங்கப்படுகிறது. செல்கள் எப்படிச் சிதைவடைகின்றன, அதன் உட்கூறுகள் எப்படி மறுசுழற்சி செய்துகொள்கின்றன என்பதைப் பற்றிய ‘ஆட்டோஃபெஜி’யின் இயங்குமுறையை நிறுவியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
‘தன்னங்க உட்கொள்ளல்’ ஆங்கிலத்தில் ‘ஆட்டோஃபெஜி’ (Autophagy) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியிலிருந்து உருவான இந்தச் சொல்லுக்கு ‘தன்னைத் தானே உட்கொள்ளுதல்’ என்று பொருள். செல்லுக்குள் உள்ள தேவையற்ற அங்கங்களையோ சரியாக இயங்காத அங்கங்களையோ அக்கு அக்காகப் பிரித்துப்போடும் செயல்பாட்டை இது குறிக்கிறது. அப்படிப் பிரித்துப்போடப்படும் அங்கங்கள் சிதைவடையச் செய்யப்படும் அல்லது சவ்வுகளுக்குள் பொதியப்பட்டு லைஸோஸோமுக்கு அனுப்பப்படும். லைஸோஸோம் அவற்றைச் சிதைவடையச் செய்யும் பகுதியாக இருக்கிறது.
‘தன்னங்க உட்கொள்ளல்’ பற்றி ஆய்வு செய்வதற்காக ஈஸ்ட் செல்களை ஒசுமி பயன்படுத்தினார். ஈஸ்ட் செல்களில் ‘தன்னங்க உட்கொள்ளல்’ இருப்பதை அவர் நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் அந்தச் செயல்பாட்டுக்கு அவசியமான மரபணுக்களையும் அவர் இனம்கண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தன்னங்க உட்கொள்ள’லைக் கட்டுப்படுத்தும் புரதங்களையும் அவர் இனம்கண்டிருக்கிறார்.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்ன?
‘தன்னங்க உட்கொள்ளல்’, செல்லின் அங்கங்களுக்கு ஆற்றலையும் செல் அங்கங்களின் உருவாக்கத்துக்கு அவசியமான பொருட்களையும் தருகிறது. சேதமடைந்த செல் அங்கங்களை அகற்றுகிறது. முதுமையடைதல் என்ற பிரச்சினையுடன் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘தன்னங்க உட்கொள்ளல்’ செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளுக்கும் பார்க்கின்ஸன் நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, இந்த ஆராய்ச்சியின் விளைவாக மேற்கண்ட நோய்களுக்குத் தீர்வு காண்பதும் விரைவடையலாம்.
- ஆதாரம்: “The 2016 Nobel Prize in Physiology or Medicine - Press Release”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT