Published : 15 Oct 2016 12:47 PM
Last Updated : 15 Oct 2016 12:47 PM
தேங்காய்ப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலைப் போலவே இதில் நுண் சத்துகள், தாதுச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரதச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.
பத்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளம் தாய்மார்கள் தங்களது மார்புத் திண்மை குறைந்துவிடும் என்று தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் காட்டிவந்தனர். இன்று அந்தத் தவறான நம்பிக்கை களையப்பட்டு விட்டது.
பெரும்பான்மை அன்னையர்கள் தாய்ப்பால் புகட்டவே விரும்புகின்றனர். ஆனால், ஓரிரு மாதங்களுக்கு மேல் அவர்களுக்குப் பால் சுரப்பதில்லை. அப்படியே சுரந்தாலும் பச்சிளங்குழந்தை தாயின் பாலை சப்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டுச் சப்பிய பாலையும் உமிழ்ந்து விடுவதும் நடக்கிறது. இளம் தாய்மார்களுக்கு மன வேதனை தரும் இந்நிகழ்வு பரவலாகிவருகிறது.
என்ன காரணம்?
தத்துவார்த்தமாகப் பார்த்தால் சிறிது காலத்துக்கு முன்பு அன்னையர்கள் குழந்தைகளுக்குத் தங்களது பாலைப் புகட்ட மறுத்தனர். அதன் எதிர்வினையாக இன்று குழந்தைகள் ஏற்க மறுக்கின்றனர் என்றும்கூடச் சொல்லலாம்.
ஆனாலும், நேரடியான உடலியல் காரணங்கள் எத்தனையோ உள்ளன. அன்னையின் உடலில் ஏதேனும் ஒரு சுவை இயல்புக்கு மாறாக மிகுந்திருப்பது, மன அழுத்தம், மட்டுப்பட்ட தாய்மை உணர்வு, தாய்மைப் பேற்றுக்கு முன்னர் மாதாந்திர உதிரப் போக்கில் ஏற்பட்ட இடர்ப்பாடு எனப் பல அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நம் உடனடித் தேவை, குழந்தை பால் அருந்தியாக வேண்டும்.
அரிசிப் பால்
பிறந்து ஒரு வாரத்திலேயே ஒரு குழந்தை “தாய்ப்பால், பவுடர் பால், பசும் பால் போன்ற பால் வடிவிலான அனைத்தையுமே நிராகரிக்கிறது, என்ன செய்யலாம்?’’ என்று என்னிடம் கேட்கப்பட்டது.
“எனக்கு அப்போதைக்குத் தோன்றியது, புழுங்கல் அரிசியைக் குழைய வேகவிட்டு பாலின் அடர்த்தியில் கஞ்சி நீர் வடித்துச் சிட்டிகை உப்பு போட்டுப் புட்டியில் ஊற்றிப் புகட்டுங்கள்” என்றேன். செய்தார்கள், வெகு ஆவலுடன் பருகத் தொடங்கியது குழந்தை.
“தாயும் தொடர்ந்து இதேபோன்று கஞ்சியை முழு ஆகாரமாக உண்டுவந்து, ஒரு வாரம் கழித்துப் பால் கொடுத்தால், ஒருவேளை குழந்தை தாய்ப்பாலை ஏற்கலாம்” என்று கூறினேன். அது நடந்ததா, இல்லையா என்று அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தாய்மார்களுக்குத் தேங்காய்ப்பால்
இப்போது தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக்கூடியது நாட்டு மாடு பசும்பால். அது கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பாலே மிகவும் உகந்தது.
தாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு, சுரக்கும் பாலின் தரமும் உயரும். குழந்தை தாய்ப்பாலை மறுக்கிறது என்பதற்காக வருந்தி அழுவதில் பயன் இல்லை. பால் சுரப்பை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதுடன், ஒரு நாளைக்கு ஓரிரு முறையேனும் பால் புகட்ட முயற்சிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.
தாய்ப்பால் நன்றாகச் சுரக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பது நமது பாரம்பரிய வழக்கம். குழந்தை தாயிடம் பால் நன்கு அருந்தினால், அத்தகைய உணவு முறைகளைப் பின்பற்றுவதில் பாதகம் இல்லை.
மிகை உணவு நஞ்சு
அன்னையர்கள் பால் சுரப்புக்காக மிகையாக உண்பது, பசிக்கும் முன்னரே உண்பது ஆகியவை கண்டிப்பாகக் கூடாது. மிகை உணவே உடலுக்கு நஞ்சாகி விடும். இந்த எளிய உண்மையை நாம் முழுமையாக உணர்வதில்லை.
பசித்த பின்னர் உண்கிற எந்தத் தரமான உணவும் முழுமையாகச் செரிக்கப்படும். முழுமையாகச் செரிக்கப்படும் எந்த உணவும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
எனவே, மரக்கறி அல்லது ஊன்கறி எதுவானாலும் அவ்வப்போது மிதமான சுவை கூட்டிச் சமைத்து உண்டாலே போதும், பால் சுரப்பு தரமானதாக மாறும்.
குறிப்பாக, மாவுப்பண்டங்களைத் தவிர்த்தும் முழு தானியங்கள், முழு பயறு வகைகள் போன்றவற்றை உணவில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
பதப்படுத்திய (Preserved foods) உணவைப் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு போன்ற பொருட்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தேங்காய்ப்பால் மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர் | தொடர்புக்கு: kavipoppu@gmail.com
(அடுத்த வாரம்: ததும்பும் உயிர்ச்சத்தும் தாதுச்சத்தும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT