Published : 17 Oct 2016 07:20 PM
Last Updated : 17 Oct 2016 07:20 PM

கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் சேருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம்.

கண் தானம் என்றால் என்ன?

இறந்தவரின் குடும்பத்தினருடைய விருப்பத்தின் பேரிலோ அல்லது ஒருவர் வாழும் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாலோ இறந்த ஒருவரின் கண்களை எடுத்துப் பார்வையற்றவருக்குப் பொருத்த அனுமதிப்பதே கண் தானம்.

கருவிழி (Cornea) என்றால் என்ன?

கண்ணின் மையப் பகுதியில் கறுப்பாகத் தெரியும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக் கூடிய கண்ணின் மேல் படலமே கருவிழி.

எப்படிக் கருவிழி பாதிப்பு ஏற்பட்டுப் பார்வையிழப்பு (Corneal blindness) ஏற்படுகிறது?

கருவிழியில் அடிபடுவது, பிறவிக் குறைபாடு, கிருமி பாதிப்பு, கருவிழிப் புண் மற்றும் குழந்தைப் பருவத்தில் சத்து குறைபாடு (வைட்டமின் ஏ சத்து குறைபாடு) போன்ற காரணங்களால் கருவிழி தழும்பு (Corneal scar) உண்டாகிக் கருவிழியின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்பட்டால் பார்வையிழப்பு ஏற்படும்.

கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த வர்களுக்குப் பார்வையை எப்படித் திரும்பக் கொடுப்பது?

கண் தானம் பெறப்படும் கருவிழியை, கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுக்கலாம்.

யார் கண் தானம் செய்யலாம்?

ஒரு வயதுக்கு மேல் உள்ள யாரும் கண் தானம் செய்யலாம். நாம் வாழும்போதே கண்களைத் தானம் செய்ய விருப்பப் படிவம், உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய விருப்பத்தை உறவினர்களிடம் கூறி நம் வாழ்நாளுக்குப் பிறகு கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா?

நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய் உள்ளவர்கள் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease) உள்ளவர்கள்கூடக் கண் தானம் செய்யலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்துகொண்டவர்களும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

யாரால் கண்களைத் தானம் செய்ய இயலாது?

காரணம் தெரியாத இறப்பு, கண்ணில் கிருமி பாதிப்பு உள்ளவர்கள், கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் (Corneal disease), கருவிழி அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், வெறி நாய்க் கிருமி நோய் (Rabies), எய்ட்ஸ் நோய், சிபிலிஸ் நோய், மஞ்சள்காமாலை கிருமி நோய் உள்ளவர்கள் (Hepatitis), புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நச்சுக்குருதி நோய் (Septicemia) தாக்கியவர்கள் கண்களைத் தானம் செய்ய இயலாது .

இறந்தவர்களின் கண்களைத் தானமாக எடுக்கும்போது அவர்கள் ரத்த மாதிரிச் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்.ஐ.வி., மஞ்சள்காமாலை கிருமி, மற்றக் கிருமிகள் உள்ளனவா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

இறந்த பிறகு எத்தனை மணி நேரத்துக்குள் கண்களை எடுக்க வேண்டும்?

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள் கண்கள் எடுத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை என்ன?

கண்களைத் தானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்கான விருப்பப் படிவத்தை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியில் பெற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நம் பதிவு செய்த விவரத்தை, நம் விருப்பத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அந்தக் கண் வங்கியின் தொலைபேசி எண் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். நாம் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்கள் உடனடியாகக் கண் தான வங்கிக்குத் தொடர்புகொண்டால், அவர்கள் நம் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்வார்கள்.

மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval) என்றால் என்ன?

மருத்துவ மனைகளில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவு, இதய அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் ஆபத்தான தறுவாயில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிட்டால், அங்குள்ள கண் தான ஆலோசகர்கள் இறந்தவரின் குடும்பத்தினரிடம் கண் தானம் பற்றி விளக்கிக் கருவிழியைத் தனமாகப் பெறும் செயலே மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval). மருத்துவமனைகளில் மூளை சாவு ஏற்பட்டு உடல் தானம் செய்யும்போதும் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கண் தானம் எடுப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

கண் தானம் பெறுவதற்கான அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியிலிருந்து மருத்துவக் குழு வருவதற்கு முன் இறந்தவர்களின் கண்களின் இமைகளை மூடி இருக்கும்படி வைக்க வேண்டும்.

கண்களின் மீது ஈரமான பஞ்சை வைத்து மூடி வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் அருகில் இருக்கும் மின்விசிறியை அணைக்க வேண்டும்.

தலைப் பகுதியை அரையடி உயர்த்தி வைக்க வேண்டும்.

கண்களை எடுத்த பிறகு எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

எடுக்கப்பட்ட கண்களைக் கண் தான மையம் (Eye donation centre) அல்லது கண் வங்கியில் (Eye Bank) கிருமி தொற்று இல்லாத அறையில் கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்துக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள். கருவிழியை ஒரு வருடம்வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.

கண் தானம் மூலம் கிடைத்த கண்களை எப்படி அறுவைசிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்?

தானம் பெற்ற கண்ணின் கருவிழி, கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே பயன்படுத்தக் கூடியவை.

கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவைசிகிச்சையால் சரிசெய்ய இயலும்.

கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) செயற்கை கண் பொருத்தும் அறுவைசிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

கருவிழியைத் தவிரக் கண்ணின் மற்ற பகுதிகள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவருக்கு நிச்சயம் பார்வை கிடைக்குமா?

இந்தியாவில் கருவிழி மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களில் 90 சதவீதம் பேருக்குப் பார்வை திரும்பக் கிடைக்கிறது. ஒருவர் தானம் செய்யும் ஒரு ஜோடிக் கண்கள் மூலம், பார்வையற்ற இருவருக்குப் பார்வை கிடைக்கிறது.

தற்போது தமிழகத்தில் கண் தானம் செய்வதற்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்.

கட்டுரையாளர், நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர்

தொடர்புக்கு: kpranganathan83@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x