Published : 24 Jun 2014 10:00 AM
Last Updated : 24 Jun 2014 10:00 AM
பாதங்களை அன்றாடம் பரிசோதனை செய்ய வேண்டும். விரல் இடுக்குகளில் அழுக்கு, நீர், சேராமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ளவும். தினமும் கால்களை சுத்தமான நீரில் (மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீர் கூடாது) சுத்தப்படுத்த வேண்டும்.
பாதத்தின் சருமம் உலர்ந்திருந்தால் எண்ணெய் அல்லது வாசலின் (vaseline) தடவி வெடிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விரல் நகங்களை அவ்வப்போது வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. ஆனால், நகங்களை வெட்டும்போது காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காலணிகள் இன்றி நடப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
கால்வலி என்று சுடுநீர் ஒத்தடம் கொடுத்துவிடக் கூடாது.
காலணிகளையும் அன்றாடம் ஆராய வேண்டும். காலணிகள் சில இடங்களில் தேய்ந்திருப்பது நீரிழிவு நோயாளிகள் நடக்கும் விதம் மாறுபட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும். காலணிகளில் சிறு கற்கள், ஆணிகள் போன்றவை உள்ளதா என்பதைக் கவனமாகப் பார்த்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
பருத்திக் காலுறைகளை மட்டுமே பயன்படுத்தவும். நைலான் காலுறைகள் வியர்வையை உறிஞ்சாததால் பூஞ்சைத்தொற்று, நோய்த்தொற்று தோன்ற வாய்ப்பு உள்ளது.
காலில் ஆணி போன்றவற்றுக்குச் சுய சிகிச்சை செய்யவே கூடாது.
காலில் சிறு புண் அல்லது சிறிய மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ரசாயனக் கலவை உள்ள மருந்துகளை (கிரீம்) கால்களுக்குத் தடவக் கூடாது.
கால்களுக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்படுவதற்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது நன்மை தரும்.
கால்களுக்கு இதமளிக்கிறது என்பதற்காகக் கால்களைக் குளிர்ந்த நீரிலோ, சுடுநீரிலோ முக்குவது கூடாது.
நெடுநேரம் உட்கார நேரும்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காரக் கூடாது.
காலில் உணர்ச்சியைக் கண்டறிய மெல்லிய நூலிழைகள் (Filaments) உள்ளன. இவற்றின் உதவியுடன் நோயாளிகள் சுயமாகவே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
காலில் ஏற்கனவே புண் ஏற்பட்டுச் சிகிச்சை பெற்றவர்கள், கால் பாதுகாப்பைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கால் பாதுகாப்புக்கு அடிப்படையான ‘ரத்தச் சர்க்கரை’யை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
ஆதாரம்:
டாக்டர் ஜி.சிவகுமார் M.S.,FICS.,FAIS. எழுதிய ‘நீரிழிவு நோயில் கால் பராமரிப்பு’ என்ற நூல்.
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT