Published : 17 May 2022 04:38 PM
Last Updated : 17 May 2022 04:38 PM

துடிக்கும் தோழன் 4 | விதிமீறச் செய்யும் அன்பு


மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறவர்களின் குடும்பங்களைப் பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். நான் பார்த்தவரையில் ஐந்தில் மூன்று குடும்பத் தலைவிகளுக்குக் கணவருடன் இணைந்த ஜாயின்ட் வங்கிக் கணக்கு இருப்பதில்லை. படித்த மனைவிகளுக்குக்கூட வங்கிக் கணக்கை நிர்வகிக்கவோ, காசோலை எழுதவோகூடத் தெரியவில்லை. இந்த மாதிரி அறியாமையில் பெண்கள் இருப்பது என்னை வியப்பிலும் கவலையிலும் ஆழ்த்துகிறது.
கணவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனைவிதான் அவரது பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுகிறார். எனவே, கணவரிடம் வங்கி விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுரை கூறுவேன். நெருப்பென்றால் வாய் வெந்துவிடாது. வரும்காலத்தில் ஏதாவது விபரீதமாக ஏற்பட்டால் அந்த மாதிரியான சூழ்நிலையில் தனித்துக் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்க அந்தக் குடும்பத் தலைவி தயாராக வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி சில பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். நாம் மெல்ல மெல்லத் தயார் செய்தால்தான் குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அவசர நிலையில் பொறுப்புகளை வலுக்கட்டாயமாகத் திணிப்பதைவிடப் பொறுப்புகளை இயல்பாக ஏற்க அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மாதிரி பொதுவான அறிவுரைகளையும் அந்த மனைவிக்குச் சொல்லி அனுப்புவேன்.

குணப்படுத்தும் மருந்துகள்

சரி, மாரடைப்பு வந்தால் எந்த மாதிரியான பின்னடைவுகள், தீவிரமான உயிராபத்து ஏற்படலாம் என்பது பற்றிக் கூறுகிறேன். மாரடைப்பால் இதயத் தசைகளின் இயக்கம் குறையும். அதனால், நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்படும். வென்டிலேட்டர் மூலம் இதைச் சரிசெய்ய முடியும். நுரையீரலைச் சுற்றிச் சேர்ந்திருக்கும் திரவத்தைக் குறைக்கவும் மூச்சுத் திணறலைச் சரிசெய்யவும் பல மருந்துகள் உள்ளன. இதே காரணத்தால் ரத்த அழுத்தம் மிகவும் குறையலாம். அதன் காரணமாகச் சிறுநீரகத்தின் திறனும் குறையலாம். இவற்றுக்கும் மருந்துகள் உள்ளன. இதயத் துடிப்பு அதிகமாகவோ குறைவாகவோ அல்லது ஏறுமாறாகவோ செயல்படலாம். இதையும் மருந்து அல்லது மின் அதிர்ச்சி கொடுத்துச் சரிசெய்யலாம்.
சென்ற வருடம் எனக்கு மாரடைப்பு வந்து என் இதயம் நின்றுவிட்டது. நான் அந்த இரண்டு நிமிடங்களும் இறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இருமுறை ஷாக் கொடுத்து மீண்டும் என் இதயத்தைத் துடிக்கச் செய்தார்கள். இந்தமாதிரி இதயம் நின்றுவிட்டாலும் மீண்டும் துடிக்கவைத்து உயிரை மீட்டுவிடலாம் என்று இப்படி உங்களுக்குச் சொல்லத்தான் இறைவன் எனக்கு உயிர் கொடுத்தாரோ என்னவோ. இந்த மாதிரி மாரடைப்பு ஏற்படும்போது இதயத் தசை ரத்த ஓட்டத்தை இழந்து நைந்த துணி போல் விட்டுப் போகலாம். இது சரிசெய்ய முடியாத சேதம்.

அன்பின் வலிமை

பல வருடங்களாக மாரடைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவத்தால் எனக்குச் சில உறுதியான நம்பிக்கைகள் உள்ளன. சாவின் விளிம்பில் இருக்கும் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தரும் என்ற எண்ணத்தில் நான் சில மருத்துவமனை விதிகளை மீறுவேன். எனது மருத்துவத் தோழர்கள் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நோயாளி பிழைப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிற நிலையில்
நோயாளியின் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவரை உள்ளே செல்ல அனுமதித்து, கையைப் பிடித்துக்கொண்டு பேசச் சொல்வேன். சாவு நெருங்கும்போது நோயாளியைத் தனிமையில் விடுவது மிகக் கொடுமை என்பது என் எண்ணம். அதோடு அன்பானவர்களின் தொடுகையும் பேச்சும் உள்நினைவால் உணர முடியும் என்பது என் நம்பிக்கை. ஊழ்வினைப் பயனாக நோயாளி பிழைக்கவும் கூடுமல்லவா. அந்த மாதிரி அன்புக்குரியோர் பேசும்போது நோயாளியின் கண்களிலிருந்து நீர் வழிவதை நான் பார்த்திருக்கிறேன்.
உயிர்காக்கும் கருவிகள் மூலம் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதால், பிழைக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் லைஃப் சேவிங் சப்போர்ட்களை நிறுத்தும் உரிமை மருத்துவர்களுக்கு இல்லை. தொண்டையில் செலுத்திய குழாய்மூலம் பிராண வாயு சென்று நுரையீரல் வேலை செய்கிறது.
அதனால், இதயமும் துடித்துக்கொண்டிருக்கிறது. உறவினர்களாகக் கேட்டால் ஒழிய கருவியை நிறுத்தினால் உயிர் போய்விடும் என்கிற தகவலை மருத்துவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். உறவினர்களாகக் கலந்து முடிவெடுத்துதான் மருத்துவருக்குச் சொல்ல வேண்டும். தாங்கள் பொறுப்பேற்பதாக படிவத்தில் கையெழுத்திட்டுவிட்டு நோயாளியை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம்.

கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு:joenitya@yahoo.com

(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > துடிக்கும் தோழன் 3 | மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x