Published : 07 May 2016 11:17 AM
Last Updated : 07 May 2016 11:17 AM

பதின் பருவம் புதிர் பருவமா?: இரு துருவ மனநிலை எது தெரியுமா?

30 அறிகுறிகள்

நெஞ்சே எழு’ என ஏ.ஆர். ரஹ்மான் உற்சாகப்படுத்தியது போல எல்லோருக்கும் மன உற்சாகம் என்பது அவசியமான ஒன்றுதான். ஆனால், மன உற்சாகம் எல்லை மீறுவதும்கூட, ஒரு மனநலப் பாதிப்புதான். நிமிடத்துக்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்று பத்தாம் வகுப்பில் படித்தது மனதில் நன்றாகப் பதிந்திருக்கும். ஆனால், நிஜத்தில் சராசரியாக 60-லிருந்து 100 வரை நமது செயல்பாடுகளுக்கு ஏற்ப இதயம் துடிப்பது இயல்புதான்.

இதற்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ துடித்தால் நோய் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். இதேபோலத்தான் மனமும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்சாகமடைந்தால் மன எழுச்சி (Mania) நோயாகவும், மிகச் சோர்வாக, மந்தமாகிவிட்டால் மன அழுத்த நோயாகவும் (Depression) கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்த மன நோயானது வளரிளம் பருவத்தின் முடிவில் அதாவது 17 வயதுக்கு மேல், முதல்முறையாக ஆரம்பிக்கும்.

இரு துருவ மனநிலை

சிலருக்கு மன எழுச்சியின் அறிகுறிகள் சில மாதங்கள் இருந்து தானாகவோ அல்லது சிகிச்சையினாலோ சரியாகி, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து மன அழுத்த நோய் ஏற்படலாம். அல்லது மன அழுத்தம் முதலில் ஏற்பட்டுகூட, பின்பு மன எழுச்சி ஏற்படலாம். இதற்கு இருதுருவ மனநிலை (Bipolar mood disorder) என்று பெயர்.

இதில் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள்கூட இடைவெளி இருக்கும். இடைப்பட்ட காலத்தில் இவர்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் சராசரி மனிதர்களைப்போல வாழ்க்கை நடத்துவார்கள். ஆனால் கண்டிப்பாக `3’ திரைப்படத்தில் தனுஷுக்கு வருவதுபோல் நிமிடத்துக்கு நிமிடம் மாறிமாறி வருவதல்ல இது. மன நோயின் தன்மைகளை ஆங்கிலப் படங்கள் சரியாகச் சித்தரித்து எடுக்கப்படும் அதேநேரம், தமிழ்ப் படங்கள் குறைந்தபட்சமாகக்கூடச் சரியாகச் சித்தரிப்பதில்லை.

முக்கிய மாற்றங்கள்

அளவுக்கு அதிகமான உற்சாக மனநிலை அல்லது எரிச்சல், ஆக்ரோஷம் போன்றவைதான் மன எழுச்சி நோயின் முக்கியமான மாற்றங்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்பு, உடல், சமூகம் மற்றும் பொருளாதாரத் தகுதிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பல லட்சங்களைத் தானமாகக் கொடுப்பது முதல் ‘நான் கடவுள்’ எனச் சொல்வதுவரை பல விதங் களில் இது வெளிப்படும். உடல் சக்தி, கோபம், பேச்சு, எண்ணங்கள், மத வழிபாடுகள், சமூக அக்கறை, பாலுணர்வு, பாவனைகள், செலவு செய்தல் உட்பட எல்லா நடவடிக்கைகளும் அதிகத் தீவிரமடைந்து காணப்படும்.

தாமதம் வேண்டாம்

மன எழுச்சியால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்குத் தாங்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வு முற்றிலும் இருக்காது. இவர்கள் அதிக ஆக்ரோஷம் அல்லது உற்சாகத்துடன் இருப்பதால் மருத்துவச் சிகிச்சைக்கு வர மறுத்து அமர்க்களம் செய்துவிடுவார்கள். எனவே தூக்கமில்லாமல் அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருப்பது, அதிக எரிச்சல் மற்றும் முரண்டு பிடிப்பது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

பெரும்பாலும் இவர்கள் குடும்ப நபர்களை அடித்து, வீட்டிலுள்ள பொருட்களை உடைக்க ஆரம்பித்த பின்புதான் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். ‘வீட்டில் உள்ளவர்களுக்கு அடி விழுவது ஆரம்ப அறிகுறியாக இருந்தால் நோயாளிக்கு நல்லது. இல்லையென்றால் பேய்க் கோளாறுக்குச் சிகிச்சை செய்ய அழைத்துச் சென்றுவிடுவார்கள்’ எனப் பேராசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.

உறவினர்களின் பங்கு என்ன?

இருதுருவ மனநோயால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினர், மன எழுச்சியின்போது பிறருக்கு ஆபத்தை உண்டாக்குபவர்களாகவும், மன அழுத்த நிலையின்போது தற்கொலை முயற்சிகளால் தங்களுடைய உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிக்கொள்பவராகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே உறவினர்கள் ‘வேண்டுமென்றே இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்’ என்று அடிப்பதோ, கட்டி வைத்து விடுவதோ கூடாது. இதனால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை எடுப்பவர்கள் மருத்துவர் குறிப்பிடும் காலம்வரை மாத்திரைகளை எடுக்காமல் விட்டுவிடுவதுதான், அறிகுறிகள் திரும்புவதற்குக் காரணமாகிவிடும்.

எனவே, நோயாளிகள் மாத்திரை சாப்பிட மறுத்தாலும் கனிவாகக் கவனித்து அவர்களைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். தூக்கமின்மை திரும்பவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால், இரவில் அதிக நேரம் கண்விழித்துத் தூக்கம் பாதிப்படைய விடக் கூடாது. சிலருக்குப் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரவும், சிலருக்குப் பல காலகட்டங்களில் பல முறை வரவும் வாய்ப்பு இருப்பதால், ஆரம்ப அறிகுறிகள் குறித்து உறவினர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வேறு சிகிச்சை முறைகள்

மன எழுச்சி நோய் உச்சகட்டத்தில் இருக்கும் நபரைக் கூட்டிவந்து, ‘இவரை எப்படியாவது கவுன்சலிங் குடுத்து மாத்திடுங்க டாக்டர்’ என்று மனநல மருத்துவர்களைத் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கும் உறவினர்கள் உண்டு. இந்த மன எழுச்சியை ஊசி, மாத்திரைகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இயல்புநிலை நோக்கித் திரும்பிப் பின்னர் வேண்டுமானால் ஆலோசனைகள் தேவைப்படலாம். ஆக்ரோஷம் குறைந்த பின்பு மாத்திரைகளைச் சாப்பிட மறுக்கும் நபர்களுக்கு மாதம் ஒருமுறை போட்டுக்கொள்ளும் ஊசிமருந்துகளும் கிடைக்கின்றன.

இந்த வகை மன எழுச்சி மற்றும் மன அழுத்த நோய்களுக்கு வழங்கப்படும் இன்னொரு சிறந்த சிகிச்சை மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy). இது சினிமாக்களில் காண்பிக்கப்படுவதுபோலக் கொடூரமான சிகிச்சை அல்ல. மயக்க மருந்து கொடுத்து மட்டுமே செய்யப்படுவதால் பாதுகாப்பானது மட்டுமில்லாமல், மருந்துகள் கைகொடுக்காத பட்சத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

கீழ்க்கண்ட அறிகுறிகளில் பாதிக்கு மேல் ஒரு வாரத்துக்கு மேலாகத் தொடர்ந்து காணப்பட்டால் மன எழுச்சி நோயாக இருக்கலாம்:

அதீத உற்சாகம் அல்லது கோபம், ஆக்ரோஷம்

காரணமில்லாமல் அடிப்பது, உடைப்பது, சண்டையிடுவது.

தன்னைக் குறித்து அளவுக்கு மீறிய கற்பனை மற்றும் அதற்கு ஏற்பச் செயல்படுதல்.

சாப்பிடாமல் இருந்தால்கூட எல்லாச் செயல்களிலும் கட்டுப்படுத்தமுடியாத வேகம், உடல்பலம் இருக்கும்.

தூங்காமல் தேவையற்ற வேலைகளில் ஈடுபடுதல்.

தொடர்ந்து அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பது.

எண்ணங்கள் மற்றும் கவனம் திசை மாறிக்கொண்டே இருப்பது.

அதிகச் செலவு செய்தல், பாலுணர்வைத் தவறான வழிகளில் வெளிப்படுத்துவது.

திடீரென ஏற்படும் போதைப் பழக்கம்.

தான் பெரிய உலகத் தலைவர்' என்று திடீரென்று ஏற்படும் அதீதச் சமூக அக்கறை முதல் ‘உலகைக் காப்பாற்ற வந்திருக்கும் கடவுளின் அவதாரம்' என்பது போன்ற எண்ணங்கள் மேலோங்குவது.

(அடுத்த வாரம்: தவற விடக்கூடாத இரண்டு மனநோய்கள் )

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x